காரணமில்லாமல் காரியமில்லை !

Vinkmag ad

காரணமில்லாமல் காரியமில்லை !

 

கப்பல் ஒன்று கடலில் வழி தவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கி விடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான். “இறைவா! இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி, மக்களை பார்க்க வேண்டாமா?” என்று பிரார்த்திக்கிறான். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாந்து விடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடுகின்றன.

தன்னை காத்துக் கொள்ள தீவில் கிடைத்த பொருட்கள் மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடைமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி தானும் தங்கி வந்தான். இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. “கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார்” என்று தன்னை தேற்றிக் கொண்டான்.

ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்று விட்டு திரும்புகையில் அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது. ‘பட்டகாலிலே படும்’ என்பது போல எது நடக்கக் கூடாதோ, அது நடந்து விட்டது. இவன் தங்குவதற்கென்று இருந்த ஒரே குடிசையும் வானுயற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன. அதை பார்த்த இவன் அலறித் துடித்தான்.

“எல்லாம் போய்விட்டது. இவனிடமிருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய்விட்டது. இறைவா…! என்னை காப்பாற்றும்படிதானே உன்னை மன்றாடினேன். நீ என்னவென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே… இதுதான் உன் நீதியா…?” என்று கதறி அழுகிறான். மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் தீவை நோக்கி அது வந்துக் கொண்டிருந்தது.

“அப்பாடா! நல்லவேளை ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம், யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்” என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான். கப்பல் சிப்பந்திகள் இவனை லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள். “நான் இங்கே தீவில் மாட்டிக் கொண்டிருப்பது எப்படி தெரியும்?” என்று அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதைப் பார்த்தோம். யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம்” என்றார்கள் அவர்கள்.

அப்போது இறைவனுக்கு நன்றி சொன்னான். அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில் குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால், தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான்.

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டு விடுகிறோம். நம்மை காக்கவே அவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். அவன் தரும் சோதனைகள் அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நாம் புரிந்துக் கொண்டால், எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அதனால் சோதனை என்றால் இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்து விட்டது. விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புங்கள். எதற்கும் காரணமில்லாமல் எந்தக் காரியமும் இல்லை என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

 

( நன்றி : நர்கிஸ் – ஆகஸ்ட் 2015 )

News

Read Previous

தொழிலாளி

Read Next

ஈகோகாப்சூல்

Leave a Reply

Your email address will not be published.