ஈகோகாப்சூல்

Vinkmag ad
அறிவியல் கதிர்
ஈகோகாப்சூல்
பேராசிரியர் கே. ராஜு

ஸ்லோவாகியாவைச் சேர்ந்த மூன்று கட்டடப் பொறியாளர்களைக் கொண்ட ஒரு குழு முட்டை வடிவில் கைக்கடக்கமான ஒரு சிறிய வீட்டினை வடிவமைத்துள்ளது. டோமஸ் ஜாசெக், சோனா பொலோவா, ஐகர் ஜாசெக் ஆகிய அந்த மூவரும் மின்தொகுப்பிலிருந்து மின்சாரம் தேவைப்படாத பசுமை வீடு இது எனக் கூறுகின்றனர். ஈகோகாப்சூல் (Ecocapsule) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீடு மிகச் சிறியதுதான். ஆனால் அதில் இருவர் தங்க முடியும்.  சிறிய சமையலறை உண்டு.  குழாயில் தண்ணீர் வரும். கழிப்பறை உண்டு. குளிக்க வெந்நீர் கிடைக்கும். விளையாட்டு சாதனங்களையோ ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் கருவிகளையோ வைத்துக்கொள்ள ஸ்டோர்ரூம் கூட இருக்கும். தேவையான இவை அனைத்தும் பொருத்தப்பட்ட ஈகோகாப்சூலில் நீண்ட நாட்களுக்குத் தங்க முடியும். காற்றாலையிலிருந்தும் சூரியசக்தியிலிருந்தும் பெறப்படும் மின்சாரம் இந்த சிறிய வீட்டினுக்குத் தேவையான மின்சக்தியைத் தருகிறது. இவ்விருவகை மின்சாரம் கிடைப்பதில் தொய்வு ஏற்படும் நேரங்களில் மின்விநியோகத்தைத் தடையின்றிக் கொடுக்க பாட்டரியும் பொருத்தப்பட்ட வீடு இது. ஈகோகாப்சூலுடன் பொருத்தப்பட்டிருக்கும் அதிகத் திறன் கொண்ட 2.6 சதுரமீட்டர் சூரியசக்தித் தகடும் 750 வாட் மின்சக்தி தரும் காற்றாலைச் சக்கரத்தைத் தாங்கி நிற்கும் கம்பமும் சேர்ந்து ஒரு வருட காலத்திற்குத் தேவையான மின்சாரத்தைத் தரக்கூடியவை. கோளவடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள வீட்டின் மேற்கூரையிலிருந்து வழிந்தோடும் மழைநீரைச் சேகரித்து சுத்தப்படுத்திப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.  ஒவ்வொரு வீட்டிற்கும் நீரைச் சுத்திகரிக்கும் வடிகட்டியும் பொருத்தப்பட்டிருக்கும். பெட்டிகளில் வைத்து கப்பலில் ஏற்றி இந்த வீடுகளை சூட்கேசுகளை எடுத்துச் செல்வதுபோல எளிதில் எடுத்துச் சென்றுவிட முடியும். கப்பலில் மட்டுமல்ல, விமானத்திலும் விலங்குகள் இழுத்துச் செல்லும் வண்டிகளிலும் கூட எடுத்துச் சென்றுவிடலாம்.

இதெல்லாம் சரி, இவ்வளவு சிறிய வீடுகளை அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? அங்கேதான் நிற்கிறது நவீன தொழில்நுட்பம்! நிலநடுக்கங்கள், வெள்ளம், நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிடும் இடங்களில் அவசர காலத்திற்குத் தங்க வீடுகள் தேவை. நாம் எப்போதும் கட்டுவதுபோல, சிமெண்ட், மணல், செங்கற்களை வைத்து சாவகாசமாக வீடு கட்டிக் கொண்டிருக்க முடியாது. அவசரத்திற்குத் தங்க உதவும் ரெடிமேட் வீடுகள் வேண்டும். ஈகோகாப்சூல்கள் அந்தத் தேவையை அற்புதமாக நிறைவேற்றக் கூடியவை . மிகச் சிறிய வீடுகளாக இருப்பதால், இவற்றை மலையேறும் வீரர்கள், ராணுவப் பிரிவுகள், முகாம்கள், தொலைதூரத்தில் நிறுவப்படும் ஆய்வு மையங்கள், வானிலை மையங்கள், வீடுகள் கட்டப்படும் இடங்கள், சுற்றுலா செல்பவர்கள் … என  பல்வேறு பிரிவினர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த வீடுகள் மேலைநாடுகளில் சந்தைக்கு வரத் தொடங்கியிருக்கின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடிக் கட்டடங்கள் பெருகி வருகின்றன. அப்படி இருந்தும் வாடகைக்கு வீடு கிடைக்காமல் திண்டாடுவோர் பலர். இங்கு கடைகளில் ஈகோகாப்சூல் கிடைக்கும் என்றால், அதை வாங்கிக் கொண்டு ஒரு சரியான வீடு கிடைக்கும் வரையில் தற்காலிகத் தங்கும் இடமாக அதைப் பயன்படுத்திக் கொள்ளலாமே? (உதவிய கட்டுரை : ஆகஸ்ட் 2015 சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில் திருமிகு கே.எஸ். உஷா தேவி எழுதிய கட்டுரை)

News

Read Previous

காரணமில்லாமல் காரியமில்லை !

Read Next

உச்சி முனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *