கவிமணி ஒரு வரலாற்றாய்வாளர்

Vinkmag ad

கவிமணி ஒரு வரலாற்றாய்வாளர்

முன்னுரை

கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை ஒரு கவிஞராக அறியப்படுவதே நாம் பெரிதும் காணுகின்ற நிலை. ஆனால், அவர் சிறந்ததொரு வரலாற்று ஆராய்ச்சியாளராகவும், கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும் விளங்கியுள்ளார் என்பது மிகுதியும் வெளிச்சத்துக்கு வரவில்லை என்றே கருதத்தோன்றுகிறது. பேராசிரியர் முனைவர் Y. சுப்பராயலு அவர்கள் கவிமணியப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

”பொதுவாக, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையைக் கவிஞர் என்றுதான் தமிழுலகம் அறியும். வரலாறு தொடர்பான அவர் கட்டுரைகள் அவ்வளவாக அறியப்படவில்லை. இவர் தேர்ந்த கல்வெட்டாய்வாளராக இருந்தார். பல வரலாற்றுச் செய்திகளை ஆழமாக ஆராய்ந்து ஆங்கில நடையில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.”

அவரது வரலாறு/கல்வெட்டு ஆராய்ச்சிகள் பற்றிய ஒரு சிறிய பதிவு இங்கே.

             கவிமணி மண்டபம் – தேரூர்

கவிமணி மண்டபம் அருகில் – அழகிய மணவாள     விநாயகர் கோயில்

 

கோயிலின் மற்றொரு தோற்றம்

 

கவிமணியின் விநாயகர் வணக்கம்

மாணிக்கவாசகர் காலம்

மாணிக்கவாசகரின் காலத்தை அவரது கூற்றிலிருந்தே அறியலாம்.

”மாணிக்கவாசகர் தமக்கு முன்பிருந்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்ற தேவார ஆசிரியர் மூவரையும் முறையே குறிப்பிட்டுள்ளார் என்பது அறியப்படுகின்றதோடு, அவர் மூவருக்கும் பின்னிருந்தவர் என்பதும் தெளியப்படும்”

இதற்காக அவர் காட்டும் மேற்கோள்கள் வருமாறு:

அப்பர் பற்றிய மேற்கோள்:

பணிவார் பிணிதீர்த் தருளிப் பழைய அடியார்க்குன்

அணியார் பாதம் கொடுத்தி…

(திருவாசகம், திருச்சதகம், 89)

சூலை நோயைத் தீர்த்த (பணி தீர்த்தருளி) செய்தி, அடியார் முடியில் ஈசன் தம் பாதம் வைத்த செய்தி (அணியார் பாதம் கொடுத்தி) ஆகிய நிகழ்ச்சிகள் அப்பரையன்றி (பழைய அடியார்) வேறு யாரிடத்தும் நிகழவில்லை என்னும் கருத்தால் மாணிக்கவாசகர் காலத்தை நிறுவுகிறார்.

சம்பந்தர் பற்றிய மேற்கோள்:

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்

பெண் சுமந்த பாகத்தன்

(திருவாசகம், திருவம்மானை, 8)

பண்ணார் பாடலுக்கு இறைவன் பொற்றாளம், முத்துச்சிவிகை போன்ற பரிசளித்தமை சம்பந்தரையே குறிப்பன என்கிறார்.

சுந்தரர் பற்றிய மேற்கோள்:

பாற்றிரு நீற்றெம் பரமனைப்

பரங்கருணையோடு மெதிர்ந்து

தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை யளிக்கும்

சோதியை…………….

(திருவாசகம், எண்ணப் பதிகம், 6)

’மெய்யடியார்’,  ‘எதிர்ந்து’  என்பவை, சுந்தரரின் திருமணக் காலத்தில் அந்தணர் கோலத்தில் தோன்றி ஆளோலை காட்டி எதிர்வாதம் பேசித் தடுத்தாட்கொண்ட மெய்யடியார்  சுந்தரையன்றி வேறு யாரைக் குறிக்க முடியும் என்பது கவிமணியின் கேள்வி.

கல்வெட்டு ஆய்வு (சாசன ஆராய்ச்சி)-1

திருவிதாங்கூர் தொல்லியல் தலைவராய் இருந்தவர் கோபிநாதராவ் அவர்கள். அவர், திருநந்திக்கரை செப்பேடு ஒன்றினைப் படித்துப் பொருள் கொள்ளும்போது ஓரிடத்தில் தவறியதாகக் கவிமணி எடுத்துக் கூறுகிறார்.  கவிமணியார் கோபிநாதராவ் அவர்களை ‘திரு. கோபிநநாதராயர்’  என்று குறிப்பிட்டு, இராயரவர்களை “ஒரு சிறந்த அறிஞர்; ஆராய்ச்சி வல்லுநர்; அரிய காரியங்களைச் சாதித்தவர். எனினும், அவர் தவறிய இடங்கள் இல்லாமலில்லை. அவற்றுள் ஒன்றைக் கீழே எடுத்துக்காட்டுகின்றேன்.”  என்று குறிப்பிடுகிறார்.

செப்பேட்டு வரிகளில் முதல் மூன்று வரிகள் கீழ் வருமாறு: (கோபிநாதராவ் அவர்கள் படித்தவாறு). மீதமுள்ள வரிகள் விரிவஞ்சிக் காட்டப்பெறவில்லை.

1                     ஸ்வஸ்திஸ்ரீ விக்ரமாதித்ய வரகுணர்க்கு யாண்டு எட்டு பங்குனித் திங்கள்      திருநந்திக்கரை இருந்து அடிகள்………………….

2                     ங்க நாடு கிழவன் மகள் ஆய்குலமாதேவியாயின முருகஞ்சேந்தியைத் திருவடி சார்த்த இவளுக்குக் குடியாக அட்டிக்குடுத்த பூ

3     ள்ளுவ நாட்டு மேற்கோட்டுப் பழங்கோப்பற்று செங்கணர் வந்தடி பல விதை பதினைங்கல வித்துப்பாடும் சாண்டன் தடி பலவிதை

கவிமணி அவர்கள் செப்பேட்டின் பொதுப்பொருள் இன்னதென்று எழுதுகிறார். அதாவது, ‘தெங்க நாடு கிழவன் மகள் ஆய்குல மாதேவியாயின முருகஞ் சேந்தியைத் திருவடி சார்த்த அவளுக்கு விட்டுக்கொடுத்த 32 கலவித்துப்பாடு கொண்ட நிலத்தைப் பார்த்திப சேகர புரத்துப் பெருமக்கள் மேற்பார்வை செய்துகொள்வார்களாக’ என்பது. ”திருவடி சார்த்த”  என்பதன் பொருளைச் சரியாக உணர்ந்தால்தான் முருகஞ் சேந்திக்கும் வரகுணதேவர்க்குமுள்ள தொடர்பும், சாசனத்தின் நோக்கமும் தெளிவுபடும் என்கிறார் கவிமணி. திரு. கோபிநாதராயரவர்கள் ‘திருவடி சார்த்தல்’ என்பதற்குத் ’திருமணம் செய்துகொடுத்தல்’ எனக் கருத்துக்கொண்டு, ‘வரகுணனுக்கு முருகஞ் சேந்தி மணமுடிக்கப்பட்டாள்’ எனக் கூறுகின்றார். ஆனால், கவிமணி அவர்கள், வைணவர்கள் பயன்படுத்தும் ‘திருவடி சேர்தல்’ என்னும் தொடரைச் சுட்டி, ‘திருமாலின் திருவடிகளில் சேர்தல் (இவ்வுலக வாழ்வை நீத்தல்)’ எனப் பொருள்கொள்கிறார். எனவே, முருகஞ் சேந்தி என்பவள் மணவாழ்வை வெறுத்துக் கன்னிகையாகவே இருந்து கடவுள் வழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முனைவதையே ‘திருவடி சார்த்த’  என்னும் தொடர் குறிக்கிறது என்றும், அரசன் அவ்வாறு அவளைக் கடவுளின் திருவடிகளில் காணிக்கை வைத்து அவளது நல்வாழ்வுக்காக (செலவுக்காக) நிலம் விட்டுக் கொடுத்திருக்கவேண்டும் என்று நிறுவுகிறார். தான் மணக்கப்போகும் பெண்ணுக்கு அரசன் நிலம் விட்டுக்கொடுக்கவேண்டிய தேவை என்ன என்பதாகக் கேள்வி எழுப்புகிறார்.

மேலும், செப்பேட்டு வரிகளின் இறுதியில் இரண்டு எழுத்துகள் சிதைந்து போயுள்ளதைச் சுட்டிக்காட்டி, சிதைந்த இரு எழுத்துகளைச் சரியாக ஊகம் செய்து நிரப்புகிறார். திருத்தப்பட்ட பாடம் வருமாறு;

1  ஸ்வஸ்திஸ்ரீ விக்ரமாதித்ய வரகுணர்க்கு யாண்டு எட்டு பங்குனித் திங்கள் திருநந்திக்கரை இருந்து அடிகள்………………..(ர்தெ)

2   ங்க நாடு கிழவன் மகள் ஆய்குலமாதேவியாயின முருகஞ்சேந்தியைத் திருவடி சார்த்த இவளுக்குக் குடியாக அட்டிக்குடுத்த பூ(மிவ)

3   ள்ளுவ நாட்டு மேற்கோட்டுப் பழங்கோப்பற்று செங்கணர் வந்தடி பல விதை பதினைங்கல வித்துப்பாடும் சாண்டன் தடி பலவிதை (நா)

முதலியார் ஓலை ஆவணங்கள்-ஆய்வு

வேணாட்டுப்பகுதியில் வணிகத்தொழிலில் ஈடுபட்டிருந்த நகரத்தார், பின்னர் 16-ஆம் நூற்றாண்டில் நகரத்தார் நிலையிலிருந்து வேளாண் நாட்டார் தலைவர்களாய் உருவானார்கள். அப்போது அவர்களுக்கு “முதலியார்” என்னும் பட்டம் வழங்கப்பட்டிருக்கக் கூடும். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: இடைக்காலத்தில் சோழர் ஆட்சியில் அரசு/நாட்டு நிருவாகத்தில் இருந்த தலைவர்கள் முதலி, பிள்ளை ஆகிய சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தனர் என்பது கல்வெட்டுகள் வாயிலாகத் தெரியவரும் வரலாற்றுச் செய்திகளாகும்.) நாஞ்சில் நாட்டின் வடக்கே அழகிய பாண்டிபுரத்தில் வாழ்ந்த முதலியார்கள் பாதுகாத்த 600 ஓலை ஆவணங்களில் வேணாட்டு அரசுடனான தொடர்பு காணப்படுகிறது. இவ்வோலை ஆவணங்கள் 17,18–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றில், நிலவரி, வேளாண் குத்தகை, மதுரை நாயக்கர் படையெடுப்பு, மடங்கள், கோயில்கள், கட்டாய உழைப்பு, சாதிச் சடங்குகள், அடிமை முறை ஆகியவை பற்றிய பல்வேறு வரலாற்றுச் செய்திகள் உள்ளன. முதலியார் ஓலை ஆவணங்களின் முதன்மையை உணர்ந்த கவிமணி அவர்கள், அவற்றைத் திருவனந்தபுரம் ஆவணக்காப்பகத்தில் சேர்த்துப் பாதுகாக்க ஏற்பாடு செய்தார். ஒரு நூறு ஓலைகளைப் பெயர்த்தெழுதி வைத்தார். அரசு தொடர்பான 19 ஓலைகளைக் கேரள ஆய்வுக்ககழகத்தின் கட்டுரைத் தொகுப்பில் (Kerala Society Papers) வெளியிட்டு வரலாற்றுலகுக்குத் தெரியப்படுத்தினார்.

மேற்ப்டி 600 ஓலை ஆவணங்களும் தற்போது திருவனந்தபுரம் ஆவணப்பாதுகாப்பு மையத்தில் உள்ளன. கவிமணி அவர்கள் தம் குறிப்புகளில் இவ்வோலைகளை அழகியபாண்டியபுரம் பெரியவீட்டு முதலியார் வீட்டு ஆவணங்கள் என்று குறிப்பிடுகிறார். இதில் சிறப்பான கூறு என்னவெனில், இவ்வோலை ஆவணங்கள் மூன்று வகையில் எழுதப்பட்டவை. தமிழ் மொழி, தமிழ் எழுத்து; மலையாள மொழி, தமிழ் எழுத்து; தமிழ் மொழி, மலையாள எழுத்து ஆகிய வடிவங்களில் எழுதப்பட்டவை. இம்மூன்று வகை ஆவணங்களையும் முறையாக ஆய்ந்து அனைத்தையும் தமிழ் எழுத்து வடிவில் பெயர்த்த திறனாளர் கவிமணி அவர்கள்.

கவிமணி மண்டபத்தில் கவிமணியின் படம்    

துணை நின்ற நூல்கள்:

1 கவிமணியின் உரைமணிகள்-பாரி நிலையம் (மூன்றாம் பதிப்பு, ஜூலை, 1977.)

2         முதலியார் ஓலைகள்-அ.கா.பெருமாள்-காலச்சுவடு பதிப்பகம்.(முதல் பதிப்பு, டிசம்பர், 2016.)

————————————————————————-

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156.

News

Read Previous

கனவுகளை நிறைவேற்றும் உளத்திண்மையோடு கொண்டாடுவோம்!

Read Next

இருளிலிருந்து ஒளி……

Leave a Reply

Your email address will not be published.