கனவுகளை நிறைவேற்றும் உளத்திண்மையோடு கொண்டாடுவோம்!

Vinkmag ad
கனவுகளை நிறைவேற்றும் உளத்திண்மையோடு கொண்டாடுவோம்!
எஸ் வி வேணுகோபாலன் 
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு என்று டி கே பட்டம்மாள் அவர்களது கணீர் குரலில்தான் மகாகவி பாரதியின் அசாத்திய கவிதை வரிகளோடு விடிகிறது நமது சுதந்திர தினம். அது ஒரு கனவுக் கவிதையின் முக்கிய வரி. ஓர் உண்மையான தேச பக்தனின் உள்ளார்ந்த கனவு அது.
சுதந்திர வேள்வியில் ஆகுதியாகப் படைக்கப்பட்ட உயிர்களில், உயர்வு தாழ்வு இல்லை. சாதி, மத பேதமில்லை. கல்வி அறிவு ஒரு பொருட்டே இல்லை. தியாகம் என்ற சொல்லை உணராமல் கூடத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டோரது இலட்சிய வேகக் கனலின் வெப்பநிலை எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குள்ளும் அடங்காது! ‘இதம் தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும்’, சுதந்திர தேவியைக் கை தொழுது பாடி நிற்போம் என்ற உளத்திண்மை அது.
எதிர்காலத்தில் தங்களுக்கு யாரேனும் சிலை எழுப்புவார்கள், காவியம் எழுதுவார்கள், காலமுழுக்க நம்மைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள் என்றெல்லாம் சிந்தித்துத் திரண்டெழுந்த கூட்டமல்ல. அடிமைத் தனத்திற்கு எதிரான பெருங்கொந்தளிப்பு அது. புயலை இனியும் தாலாட்டிப் பூட்டி அடைத்திட முடியாது என்று வெடித்தெழுந்த தீரர்களது முழக்கம் அது.
71வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்டோரது கனவு தேசமாக இப்போதைய நாடு விளங்குகிறதா, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாயிற்றா? எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் ஓர் நிறை என்பது உறுதியாயிற்றா? எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் என்பது உறுதியாயிற்றா?  ‘குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு’ என்று புதிய ருசியாவைக் குறித்துப் புளகாங்கிதத்தோடு பாடிய மகாகவிக்கு இங்கேயும் அப்படியாக மக்களுக்கான ஆட்சி என்ற கனவு இருந்திருக்குமே, உறுதியாயிற்றா?
இன்சுவை நீரும், இன்கனி வளமும் கொட்டிக் கிடக்கும் பாரத தேசத்தின் குடிமக்களுக்கு இந்த இன்பங்கள் எல்லாம் பொதுவில் போய்ச் சேருகிறதா ? இரும்பைக் காய்ச்சி உருக்கவும், இயந்திரங்கள் வகுக்கவுமாக அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரம் தொழில் செய்து நாட்டை மேலும் வளப்படுத்த அன்றாடம் பாடு எடுக்கும் பாட்டாளியின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா? உழவுக்கும் உழவருக்கும் வந்தனம் செய்யாவிட்டாலும், அவர்தம் உழைப்புக்கு உரிய நியாயம் உறுதியாயிற்றா? ஆணும் பெண்ணும் சமம் எனக்கொண்டு அறிவில் ஓங்கி இந்த பாரதம் தழைத்ததா? இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமா எழுதி வைத்திருக்கிறது, பறைச்சியும் பணத்தியும் வேறு வேறா என்று ஆவேசமாகக் கேட்ட சித்தன் சிவவாக்கியரின் வாக்கியம் உறுதியாயிற்றா?
சமூக பாகுபாடுகளை நியாயப்படுத்தும் பழமையின் மிச்சசொச்சங்களைப் பாதுகாத்துக் கொண்டே நவீன கட்டிடம் எழுப்பியது போல் உருவாகி வளர்ந்திருக்கும் பெரிய தேசத்தில், 71 ஆண்டு சுதந்திரம் சாதித்தது ஏராளம் தான்! உணவு உற்பத்தியில், ஆடை அணிகலன் உருவாக்கத்தில், அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் பயன்பாட்டில், தொழில் நுட்ப மேதைமையில், கல்வி அறிவு விரிவாக்கத்தில், பொதுவெளியில் கூடுதலான மக்கள் பங்கேற்பில் ….என எத்தனையோ விதத்தில் புதிய புதிய உயரங்களை எட்டிக்கொண்டுதான் இருக்கிறது இந்தியா. புள்ளிவிவரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. வெளிநாட்டார் வணக்கம் செய்யத்தக்க திறமான புலமையை இந்தியர்கள் அயல் நாடுகளும் மெச்சத்தக்க விதத்தில் வெளிப்படுத்தியும் வருகின்றனர்.
ஆனாலும், சமூகத்தின் பாவம் என்று தேசப்பிதா வருணிக்க தீண்டாமைக் கொடுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை. எண்பதுக்குமேலான விதங்களில் தீண்டாமையை வெளிப்படுத்தும் கிராமங்கள் ஆயிரக்கணக்கில் உண்டு என தமிழகத்தில் செய்யப்பட்ட ஆய்வுகள் உறுதி செய்தன. மதுரை அருகே உத்தப்புரத்தில் எழுப்பப்பட்டிருந்த தீண்டாமைப் பெருஞ்சுவர் இன்னும் மனித மனங்களில் அதைவிட பெரிய உயரத்தில் நிற்பது தகர்க்கப்படவில்லை. அண்மைக்காலத்தில் அதன் அடுத்த சாபமாக, செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சங்கள் கலந்துவிடக் கூடாதென்று பெருகி வரும் ஆணவக்கொலைகள் சாதிய சமூகத்தின் கோர முகத்தை உரித்துக் காட்டுகின்றன.
பாலின சமத்துவத்தில் பாரதம் எத்தனை பின்னோக்கிக் கிடக்கிறது என்பதை ஒரு நிர்பயா விஷயத்தில் தெறித்த தெறிப்புக்குப் பின்னால் பேசப்படாத பன்மடங்கு கொடுமைகளும் பொதிந்திருக்கின்றன. ஒரு நொடிக்குப் பல்லாயிரம் ரூபாய் வருவாய் ஈட்டும் பெருமுதலாளி வர்க்கங்கள் வளர்ந்து கொண்டிருக்க, இரவுச் சாப்பாடு இன்றிப் படுக்கச் செல்லும் மக்கள் சதவீதம் கூடிக் கொண்டிருக்கிறது.
புதிய தாராளமயம், பழைய பேதங்களை மேலும் வளர்த்தெடுத்துக் கொண்டே, ஏற்றத் தாழ்வுகளையும் விரிவுபடுத்தித் தான், ஆட்சியாளர்கள் சொல்லும் “வளர்ச்சி பொருளாதாரத்தை” ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. பளபளக்கும் நவீன மருத்துவமனைகள் ஒரு பக்கம், ஆண்டுக்கணக்கில் கிருமித் தொற்றினால் கொத்துக் கொத்தாகக் குழந்தைகளை சாகக் கொடுக்கும் கோரக்பூர்கள் மறுபக்கம். மக்களுக்காகப் போராடுவோரை அடக்கி ஒடுக்கிச் சிறைப்படுத்தி வாட்டி எடுக்கும் அதிகார வர்க்கம், ஊழல் பெருச்சாளிகளையும், குற்றமிழைக்கும் பெருந்தனக்காரர்களையும், மோசடி சாமியார்களையும் விழுந்து விழுந்து பாதுகாத்து நாட்டு நலனுக்கு எதிராக இயங்குவதையும் இந்த சுதந்திர தினம் கண்ணெதிரே கொண்டு நிறுத்துகிறது.
னாலும், நம்பிக்கை வற்றாத உறுதியையும் வழங்குகிறது சுதந்திரதினம். நொந்தே போயினும், வேந்தே மாயினும் நந்தேசத்தவர் நம்பிக்கையோடு அணிதிரளவும் வழிகாட்டுகிறது சுதந்திர தினம். சாதி, மத வேற்றுமைகளைத் தூண்டி கலவரங்களை உருவாக்கி அதில் தங்களது அரசியலை அறுவடை செய்யத் துடிக்கும் மோசமான சக்திகளுக்கு எதிராகத் துணிந்து நிற்கும் அருளை சுதந்திர தினம் வாரி வரி வழங்குகிறது. மூட நம்பிக்கைக்கு எதிராக அறிவியல் விழிப்புணர்வூட்டும் மகத்தான இயக்கத்தில் வீழ்த்தப்பட்ட நரேந்திர தபோல்கர் நினைவுகளும், மத பேதங்களுக்கு அப்பால் நின்று மக்களுக்காக சிந்தித்துக் களத்தில் இறங்கியதற்காகப் பழி வாங்கப்பட்ட கோவிந்த் பன்சாரே நினைவுகளும் மிக அண்மைக்காலத்தியவை. கருத்துச் சுதந்திரத்திற்காக கல்புர்கி கொடுத்த விலை அவரது இன்னுயிர். ஆனால் அவர் விதைத்துச் சென்றிருப்பது ஆதிக்க சக்திகளுக்கு எதிராக நிற்கும் நெஞ்சுரம்.
சுதந்திரத்திற்காகத் தங்களை முற்றாக ஈடுபடுத்திக் கொண்ட நமது முன்னோடிகள், புரட்சியாளர்கள், சாதாரண பாமர மக்கள் கண்ட கனவுகள் மட்டுமல்ல அவற்றை நிறைவேற்றுவதற்கான மன வலிமையும் கூட நம் நினைவில் சுடராகக் கொழுந்துவிட்டு எரிகிறது. ஆரோக்கியமான, அற்புதமான மாற்று சமூகம் படைப்பதற்கான சுடர் அது. சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்க மாட்டோம்!

News

Read Previous

ஹஜ் எனும் ஓர் அற்புதம்

Read Next

கவிமணி ஒரு வரலாற்றாய்வாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *