அருந்தமிழும் அன்றாட வழக்கும்

Vinkmag ad
“வளர்க வாழைக்கன்று”
 
முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
================================================= 
 
ஒருமுறை ஒரு விளம்பரத்தை நான் தமிழில் இவ்வாறு எழுதியிருந்தேன். அதாவது, முதன்முதலில் தொலைக்காட்சிக்கு வேண்டிய ‘டிஷ் ஆன்டெனா’ சென்னைக்கு வந்தபொழுது, அதை விளம்பரமாக வரைவதற்காகப் பெங்களூரைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் சென்னைக்கு வந்திருந்தார்கள். யாரோ சொன்னார்கள் என்று, ஆங்கிலத்திலும் தமிழிலும் விளம்பரம் வரைவதற்காகத் தீர்மானித்தார்கள். ‘டிஷ் ஆன்டெனா’ மூலமாகத் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சன் டிவி, ஜெயின் டிவி, ஜீ டிவி, சிஎன்என் டிவி, பிபிசி டிவி இவைகளையெல்லாம் பார்ப்பதற்கு இந்த ‘ஆன்டெனா’ உதவுகிறது என்று சொல்வதற்கு ‘The world is at your finger tips’ என்று எழுதியிருந்தார்கள். அதற்கு நான் உடனே தமிழில் சொன்னேன், ‘அமர்ந்தபடியே அகிலத்தைக் காணலாம்’ என்று. கிளியா நிறுவனம் நான் தமிழில் எழுதிய விளம்பரத்தைப் பார்த்த பிறகுதான் பல கேபிள் டிவி அதிபர்கள் நாங்கள் எழுதிக் கொடுத்த நிறுவனத்தை நாடி வந்தார்கள். ஆக அன்று முதல் அந்தப் பெங்களூர் இளைஞர்கள் ஆங்கில விளம்பரமே வேண்டாம். தமிழ் விளம்பரத்தை மட்டுமே பத்து முறைக்கு மேல் வெளியிட்டுத் தங்கள் வணிக வளத்தைப் பன்மடங்கு உயர்த்திக் கொண்டார்கள். அதேபோல், மும்பையில் ஓர் ஆய்வு நடந்தது. ஆங்கில விளம்பரத்தைப் படிப்பதை விட, அந்தந்த மாநில மொழி மக்கள் தங்கள் தாய்மொழியில் வெளியாகும் விளம்பரத்தையே ஆர்வமாகப் படித்துக் கவனிக்கிறார்கள் என்பது புலனாகிறது. இன்னும் பல நிறுவனங்கள் வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிடும்போது, அவரவர் தாய்மொழியில் விளம்பரம் என்றுதான் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். குமுதம் இதழ், உலகளவில் எல்லோருக்கும் தெரிந்த இதழாக இருப்பது போலவே, மலையாள மனோரமாவும் உலகளவில் பரவியிருப்பதும் சிறந்த சான்றுகளாகும். மாநில மொழிகளின் சிறப்பை இனிக் குறைத்து மதிப்பிட முடியாது என்பது வெள்ளிடை மலையாயிற்று.
 
நிதியியல் சார்ந்த நிறுவனமான கிளியா நிறுவனம் 95 – ஆம் ஆண்டுமுதல் நடைபெற்ற பங்குச்சந்தைச் சரிவின் காரணமாகப் பல்வேறு நிறுவனங்கள் தாங்கள் விளம்பரம் வெளியிட்ட தொகையைக்கூடத் தரத் தடுமாறிக்கொண்டிருந்த தருணம் அது. ஏறக்குறைய விளம்பர நிறுவனமே மூடி விடலாமா? என்கின்ற நிலையில் மேலாளராக இருந்த நான், பல வழிகளில் விளம்பரம் சாராமல் செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவாய் தேடிக்கொண்டிருந்த நிலையில் பல பணியாளர்கள் நிறுவனத்தை விட்டுச் செல்லலாமா என்ற ஏக்க நிலையில், 22.4.1996 அன்று எங்கள் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிய நண்பர்கள் ஆண்டுதோறும் தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை பெருமிதமாகவே வழங்கி வருகின்ற கிளியா நிறுவனம் இந்த வருடம் சுணக்கம் காட்டக்கூடாது என்று வலியுறுத்தி நின்றார்கள். தலைமை அலுவலக இயக்குநர்களுக்கு நுணுக்கமாக நான் கடிதம் எழுத முற்பட்டேன். நான் எழுதுவதெல்லாம் இலக்கியச் சாயல் கொண்டதாகப் பதிய வேண்டும் என்று மனம் எப்போதும் ஏங்கும். அப்பொழுது என் நினைவுக்குக் கவிஞர் வால்ட் விட்மென் வரிகள்தான் வந்தன. கடிதத்தின் இறுதிப்பகுதியில் அப்பாடல் வரிகளை மேற்குறித்திருந்தேன். அப்பாடலின் தமிழாக்கம்:-
 
விலங்குகளாக மாறி வாழ்ந்துவிடத் துடிக்கிறது மனது
அவை பெரிதும் அமைதியாகவும் தன்னிறைவானவையாகவும் வாழ்கின்றன இனிது
நீண்ட நெடிய நேரம் உற்று நோக்கினேன் நின்றும்
தமது நிலைமைக்காக அவை புழுங்கியது மில்லைப் புலம்பியதுமில்லை என்றும்
நள்ளிரவில் விழித்துக் கிடப்பதுமில்லை;
பாவங்களுக்காக நொந்து தலையணை நனைப்பதுமில்லை
கடவுளுக்கு ஆற்ற வேண்டிய கடன்களை வாதித்து என்னைப் படுத்துவது மில்லை
வேட்கை நோயால் வெளிறியோடுவதில்லை
உடமை வெறியால் உளம் பிறழ்தலுமில்லை
ஒருவர் மற்றொருவர் முன்னோ
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த
மூதாதையர் முன்னோ எவரும் மண்டியிடுவ தில்லை
மதிப்புக்குரியோராக விழையப் பெறுவோருமில்லை
மண்ணுலக வாழ்வில் வெறுப்புற்றோரு மில்லை
 
இயக்குநர்கள் இதனைப் படித்துவிட்டு உடனே ஏற்றுக்கொண்டு ஊக்கத் தொகையை எவ்விதச் சுணக்கமுமின்றிப் பணியாளர்கள் விரும்பியவாறே வழங்கினர். இலக்கியம் வணிகத்தையும் மெருகேற்றும் என்பதற்கு இதுவொரு சான்றாகும்.
 
——–
 
தினச்செய்தியில் வாரந்தவறாமல் வெளிவரும் அருந்தமிழ்க் கட்டுரையைப் படித்து மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் திரு.கூ.வ.எழிலரசு அவர்கள் எனக்கு அனுப்பிய மதிப்புரை பின்வருமாறு:-
 
“அறிஞர் எழிலரசு ஆழ்ந்த தமிழறிவும் – அன்பும் – அடக்கமும் பூண்டவர் .புன்னகை மாறாமல் புதியன சொல்வதும் செய்வதும் அவர் இயல்பு. பேராசிரியர் நெஞ்சம் கவர்ந்த தமிழ்த்திறனாளர் .அவரோடு பழகியது நான் பெற்ற பேறு. அப்பா சொல்வார் அவர் எழுத்தும் அழகு. எண்ணமும் அழகு. பெயரும் பெருமையும் ஒன்றாக இணைந்தவர்.
 
“என் அன்பிற்குரிய இளவல் முனைவர் ந. அருள் அரிதின் முயன்று அழகுற அளித்துவரும் இக்கட்டுரை தொடரினை நான் வாரந்தவறாமல் தினச்செய்தியில் படித்து மகிழ்ந்து வருகிறேன்.
 
‘மொழி வழக்கு’, ‘ஆங்கிலச் சொற்கள்’, ‘வடமொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருதுச் சொற்கள்’ – எனும் பகுப்பில் அமைந்த இத்தொடர் கட்டுரையில் ஆய்வின் பக்குவம் பளிச்சிடுகிறது.
 
சொல்லாய்வு, மொழி கலப்பாய்வு – என்பனவற்றின் நோக்கமே சொந்த மொழியின் சொற் செல்வத்தை ஆய்ந்து இழந்தவை போக – இருப்பதை மேலும் இழக்காமல் காத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்துவதுதான். ‘ஒரு மொழியில் உள்ள சமுதாயத்தேவை கருதியும், சமுதாயத் தொடர்பை விரிவாக்கும் காரணங்களாலும் ஒரு மொழியில் வேறு சொற்கள் புகுந்து இடம் பெறுவதையே மொழிக்கலப்பு என்கிறோம். மொழி இழப்பு என்பது, மொழிக்கலப்பால் ஒரு மொழி தன்னிடமிருந்த சொற்களைப் பயன் குறைந்ததாக இழந்து நிற்கும் அவல நிலையாகும்’ என்கிறார் ஔவை அருள். ‘மொழியின் தொன்மையைப் போன்றே மொழிக் கலப்பும் தொன்மை வாய்ந்தது போலும்’ என ஆய்ந்துரைப்பதும், ‘சொல் வளமின்றி ஒரு மொழி வறுமையுற்றிருப்பதும், பேச்சு மொழிக்கு உந்தாற்றலான கலந்து பழகும் உணர்ச்சியும், எழுதுவோன் விருப்பமும், போலச் செய்தலும், கடன் வாங்கலும் ஆகிய காரணங்கள் மொழிக் கலப்பை விளைவிக்கின்றன’ – என மொழிக் கலப்பிற்கான காரணங்களை நுண்ணிதின் விளக்கும் பாங்கும் பாராட்டத்தக்கது.
 
மொழிக்கலப்பு நிகழ்ந்த காலந்தொட்டே, அதை நீக்கவும் நம் முன்னோர்கள் முயன்றனர் என்பதை ஔவை அருள் விளக்கியுரைக்கும் பாங்கு மகிழ்ச்சியூட்டுகிறது. தண்டமிழாசானாகிய ‘சாத்தனார்’, பௌத்தர் கூறும் ‘சத்தியத்தை’ ‘வாய்மை’ எனவும், ‘துவாதச நிதானங்களை’ப் ‘பன்னிரு சார்புகள்’ எனவும், ‘தருமத்தை’ ‘அருளறம்’ எனவும் ‘புத்தத் தன்ம சங்க’த்தை ‘முத்திற மணி’ எனவும், ‘தருமச் சக்கர’த்தை ‘அறக் கதிராழி’ எனவும், ‘சயித்தியத்தை’ப் ‘புலவோன் பள்ளி’ எனவும், ‘ஏது பிரபவ தர்மம்’ என்பதனை ‘ஏதுநிகழ்ச்சி’ எனவும், ‘நிருவாணத்தை’ப் ‘பெரும் பேறு’ எனவும் தமிழாக்கியுள்ளார்’ – எனும் பகுதி இதற்கு ஒரு சான்றாகிறது.
 
தமிழின் மீது ஆண்டவன் பெயரால் ஆளுமை நிகழ்த்தி ஒரு காலத்தில் ‘மணி பிரவாளமே தமிழ்’ என மயங்க வைத்த வட மொழியின் வல்லாண்மை முதலாக, ஆதிக்க முறையில் அரியணை ஏறி அன்னைத் தமிழில் ஊடுருவி நிலைத்த ஆங்கிலம் வரையில் தமிழில் மொழிக்கலப்பு நிகழ்ந்த வரலாறுகளையும், சொல்லடைவுகளையும் ஆழமாகவும், அழகாகவும் இத்தொடர்கட்டுரையில் வலியுறுத்தி வருவதை நான் பெரிதும் வரவேற்கிறேன்.
 
ஔவை அருள் தமிழ் மக்கள் வழங்குகின்ற வடமொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது மொழிச் சொற்களை முயன்றாய்ந்து பட்டியல் அளித்து நம்மைச் சிந்திக்க வைக்கிறார். காலையில் தொடங்கி, உறங்கப் போகும் நேரம் வரையில் நாம் எத்தனை பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதையும், இவற்றை நீக்கிவிட முயற்சி செய்யாதிருக்கிறோம் என்பதையும் எண்ணும் போது, ‘தமிழன் திருந்தினால்தான் தமிழ் திருந்தும்’ என்றே கூறத் தோன்றுகிறது. ஒவ்வொரு தமிழரும் இயன்றவரையில் பிறமொழிச் சொற்களை நீக்கிப்பேசவும், எழுதவும் முயலுதல் வேண்டும் என்ற உந்தாற்றலை உள்ளீடாகக் கொண்டு உலா வரும் இக்கட்டுரை தொடரை எழுதிவரும் ஔவை அருளை உச்சி மேல் வைத்து மெச்சிப் புகழத் தோன்றுகிறது.
 
மொழிக்கலப்பு தவிர்க்க முடியாதது தான், எந்த மொழியும் கலப்பின்றி இயங்கவில்லை என்பதும் கண்கூடானதுதான். ஆனால், கற்றவர்கள் அறிந்தே மொழிக்கலப்புக்கு வழி கோலுகின்றனர். கல்லாதவர்களோ தமக்கு வரும் பிறமொழிச் சொற்களையே தம்முடைய தாய் மொழிச் சொல்லென்று பிழையாக உணர்ந்து கொள்கின்றனர், இத்தகைய நிலை தமிழுக்கு மட்டுமன்றி, எந்த மொழியின் வளர்ச்சிக்கும் ஏற்றம் அளிக்காது என்பதை உலக மொழிகள் சிலவற்றிற்கு நேர்ந்த நிலைகள் மெய்ப்பிக்கின்றன. பிரான்சில் வாழ்ந்திருந்த ‘கால்’ இனத்தவர் தம்மொழியைத் துறந்து பிரெஞ்சு மொழியை ஏற்றுக் கொண்டதால், அந்த இனமே அழிந்ததையும், வட இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிடர் தம்மொழியைத் துறந்து, வந்தேறிகளின் மொழியை ஏற்றுக் கொண்டதால், அவர்களின் பண்பாடே மாறிப் போனதையும் மொரீசியசுத் தீவில் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய தமிழர்கள் தாய்மொழியை மறந்துவிட்டு, ‘கிரியோல்’ என்ற கலப்பு மொழியை ஏற்றுக் கொண்டதால் தங்கள் தமிழறிவையே இழந்ததையும், ‘செக்’ மொழிப்பற்றாளர்கள் உழைப்பால், செருமன் மொழி மேலாண்மை யிலிருந்து விடுபட்டுச் ‘செக்’ நாட்டினர் இன்று தனி இனமாக வாழ்வதையும் ‘மொழிக்கலப்பு’ நமக்களிக்கும் படிப்பினைகளாகவே இங்குக் கருதிப் பார்க்கலாம்.
 
இவ்வகையில் உலகளாவிய நிலையில் கருதப்பட்டும், ஆய்வு செய்யப்பட்டும் வருகின்ற மொழிக்கலப்பு’ என்ற பொருண்மையைத் தமிழிடை வைத்து நுணுகி ஆய்ந்து வரும் ஔவை அருளின் ஆய்வுத்திறன் போற்றிப் பாராட்டுதற்குரியது. ஔவை அருள் இத்தொடரின் வழி ஆற்றி வரும் அருந்தொண்டால், மொழி ஆய்வு மேற்கொண்ட நம் தமிழறிஞர்கள் வரிசையில் தக்கதோர் இடம் பெற்றுள்ளார் எனில் அது மிகையன்று.
 
‘வளர்ச்சிக்குரிய உயிருடையதாய் உலகத் தொடர்புப் பாலமாய் மொழியைக் கருதும் இந்நாளில், மாற்றங்களுக்கு உட்படுதலே உயிருணர்ச்சிக்கு அடையாளமாகிறது என்ற நிலையைத் தவிர்க்க இயலாது. எனவே, மொழிக்கலப்பு, இனத்தின் வளர்ச்சி நோக்கி நிகழும்போது ஏற்புடையதாகவும், இனத்தின் குலைவுக்கும் தாழ்ச்சிக்கும், வழி வகுக்கும்போது நீக்கத்தக்கதாகவும் கருதலாம். இப்புதிய அணுகு முறை மொழிவளர்ச்சிக்கு உலக நாடுகள் மேற்கொண்டு காட்டிய நடைமுறையாகும்’ – என மொழிக் கலப்பின் தாங்கு திறனையும் எல்லை கோடிட்டு எச்சரிக்கை செய்கிறார் ஔவை அருள்.
 
இப்படி வாரந்தோறும் எழுதும் அருள் ஆங்கில மொழிவளர்ச்சி குறித்து என்னிடம் ஒரு கட்செவியைச் சில்லாண்டுகளுக்கு முன் காட்டினார். மேலும் அருந்தமிழக்கு அணிசேர்த்த சங்க இலக்கியங்களின் சாரத்தைப் பிழிந்து அறிமுக அமுதமாக அளிக்க வேண்டும்.”
 
வளரும்…
 
– முனைவர் ஔவை ந. அருள்.

News

Read Previous

மின்னூல் அட்டைப்பட வடிவமைப்பு

Read Next

காரைக்குடி கம்பன் கழகத்தின் வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published.