ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

Vinkmag ad

krishnajeyanthiஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
—————————————-

எங்கள் கிராமம் கீழச்சிறுபோதில் 1988 வரை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம் கிடையாது. நான் முதுகுளத்தூர் மாணவர் விடுதியில் தங்கி படித்து கொண்டிருந்த போது அதே விடுதி எனது ஊர் இனிய நண்பர் திரு.ராசு அவர்கள் விடுமுறையில் ஊர் சென்று வந்து என்னிடம் நம் ஊருக்கு புதிதாக சுகாதார ஆய்வாளர் ஒருவர் வந்துள்ளார் என்ற புதிய தகவலை தெரிவித்தார்.

நான் விடுமுறையில் சென்றேன். ஒரு சிவப்பு நிற உருவ இளைஞர், உதட்டோர புன்னகையுடன் வாங்க திருநாகலிங்க பாண்டியன் என்றதும் ஆச்சரியம் ஆனேன் காரணம் முன் பின் அறிந்திராத அவர் என் முழு விவரத்தையும் கூறி வரவேற்றார் . என்னை மட்டுமல்ல முதல் சந்திப்பிலேயே அனைவரது விவரங்களையும் கூறி அறிமுகமாகி அனைவர் உள்ளங்களிலும் இரண்டற கலந்தார்.

எங்கள் ஊர் மிகவும் பின் தங்கிய கிராமம் ஆதலால் மாணவர்களுக்கு படிப்பறிவு சுமாராக இருந்தாலும் வெளி உலக அறிவு சற்று குறைவே.

அண்ணன் திரு.இளஞ்செழியன் அவர்கள் இராஜபாளையம் அருகில் உள்ள சொக்கநாதன்புத்தூர் என்ற ஊரிலிருந்து சுகாதார ஆய்வாளராக எங்கள் தாலுகாவில் பணியமர்த்தப்பட்டு எங்கள் கிராமத்தில் குடியிருந்தார்.

பள்ளி விடுமுறையில் அண்ணன் இல்லம் தான் வாசக அறை. குமுதம் , முத்தாரம், கல்கண்டு, குங்குமம், ஆனந்தவிகடன், தராசு,ஜூனியர் விகடன் என அண்ணன் இல்லம் ஒரு நூலகம். என் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்களை அவர் இல்லத்தில் வளர்த்தார், வளர்ந்தோம்.

அவர் பாசறையில் வளர்ந்த பலர் இன்று பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகிறோம்.

அண்ணன் ஒரு பகுத்தறிவுவாதி. ஆலயம் , தெய்வம் , தீ மிதித்தல் , பால் குடம் , ஆச்சாரங்கள் பற்றி மாணவர்களிடையே வாத பிரதி வாதங்கள் நடத்துவார். பெரியார் சிந்தனைகள் மற்றும் நூல்கள் பற்றி விவரிப்பார்.மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என வாழ்பவர்.

ஒருநாள் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா நமது கிராமத்தில் கொண்டாடினால் என்ன என்றார். அண்ணே நீங்க பகுத்தறிவாளர் ஆச்சே என்றதற்கு மற்றவர்களின் பக்தியை மதிப்பதே உண்மையான பகுத்தறிவு என்றார்.

பின்பு 1989 ல் அவர் தலைமையில் செயலில் இறங்கினோம். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என நன்கொடை வாங்கி முதல் வருடம் 53 ரூபாய் வசூலானது. தேங்காய் பழம் பத்தி வாங்கி சமுதாய பெரியவர்களை அழைத்து கிருஷ்ண ஜெயந்தி பற்றி விளக்கி கூறி சாமி கும்பிட்டோம். அண்ணன் எல்லா ஏற்பாடுகளையும் செய்வார் ஆனால் சாமி கும்பிட மாட்டார்.

அடுத்த வருடம் 1990 இதை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல அண்ணன் வழிகாட்டலில் இளைஞர்கள் செயல்பட்டோம். இராமநாதபுரம் ரம்யா வீடியோ விஷனில் தொலைக்காட்சி வீடியோ வாடகைக்கு எடுத்து கிருஷ்ண அவதாரம் பற்றிய படம் மூலம் கிருஷ்ண ஜெயந்தி பற்றிய விழிப்புணர்வை எங்கள் கிராம மக்களுக்கு ஏற்படுத்தினோம்.

1991 ல் அண்ணன் ஆறு மாதங்கள் முன்பே எங்கள் ஊர் வெளிநாட்டு நண்பர்களுக்கு ஏர் மெயில் தபால் எழுதிப் போட்டார். அண்ணே தேவையில்லாமல் தபால் செலவு ஏன் என்றோம். நம்புவோம்பா என்றார். அண்ணன் நம்பிக்கை வீணாகவில்லை நிகழ்ச்சிகள் நடத்த கூடிய தொகை வந்தது.

மதுரை தானப்ப முதலி தெரு சண்முகா மூவிஸிலிருந்து 16 MM திரைப்படம் வரவழைத்து கிருஷ்ண லீலா, உரிமைக்குரல் என்று இரண்டு திரைப்படம் காட்டினோம். அடுத்த வருடம் மதுரை அபிநயா ஆடல் பாடல் நிகழ்ச்சி என முன்னேற்றம்.

அண்ணன் ஊர் பெரியவர்களை அழைத்து உறியடி உற்சவம் , கண்ணன் சாமி ஊர்வலம் பொங்கல் பூஜைகள் நமது சுற்றுப் பகுதிகளில் நடைபெறுகிறது என்றார் . ஊர் மக்கள் அவர் பின் நின்றனர். உடனே 1992 ம் வருடம் முதன் முதலில் உறி ஏலம் விடப்பட்டு அன்று முதல் இன்று வரை
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக தற்போது மூன்று நாட்கள் நடந்து வருகிறது.

அண்ணன் அவர்களின் துணைவியார் திருமதி பொன்னுத்தாய் அவர்கள் பட்டாதாரி பெண் என்றாலும் சாமானிய பெண்ணாக ஊர் மக்களுடன் இணைந்து செயல்பட்டது மிகவும் பாராட்டத்தக்கது.

அண்ணன் பணி மாறுதலில் குடும்பத்துடன் சொந்த ஊரான சொக்கனாதன்புத்தூர் சென்று பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஆனாலும் அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா இன்றைய இளைஞர்களால் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவிற்கு அவ்வப்போது வருகை தந்து அவருக்கு உரித்தான உதட்டோர புன்னகையுடன் ரசித்து கொண்டு அமர்ந்து இருப்பது,குஞ்சுகள் பறப்பதை பெருமையுடன் ரசிக்கும்
தாய்ப் பறவையின் பேரழகு.

நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதும் நன்றே

என்ற மூதுரையின் நல்லார்
இன்றும் தனது பகுத்தறிவு கொள்கைகளோடு வாழும் திரு.இளஞ்செழியன் என்ற
பெரியாரின் பெருந்தொண்டரின்
பெரு முயற்சியால் உருவான
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா
சிறப்பாக நடைபெறும் இந்நன்னாளில்
அண்ணனுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவிப்பதோடு

” பற்றுக்களை விட்டொழித்திருக்க வேண்டும்.

எவரிடமும் பகைமை உணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டும்.

எது நடந்தாலும் அது நன்மைக்கே.

உலகில் எதுவுமே யாருக்கும் சொந்தமில்லை.

வெறுங்கையோடு மண்ணில் தோன்றி
வெறுங்கையோடு மண்ணை விட்டு மறைகிறோம் ஆகவே இருக்கும் இடைப்பட்ட இறைவன் அருளிய காலத்தில் இன்பமாக வாழவேண்டும் ”

என்ற உயரிய தத்துவங்களை உலகிற்கு உபதேசித்த ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த ஆவணி மாத அஷ்டமி நாளை கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.திருநாகலிங்க பாண்டியன்
கீழச்சிறுபோது.
இராமநாதபுரம் மாவட்டம்.

News

Read Previous

தந்தையை இழந்தவர்களுக்கு உதவி

Read Next

இந்திரா காந்தியின் எமர்ஜென்சி… பி.ஜே.பியின் ’அர்பன் நக்சல்’ வியூகம்… என்ன வித்தியாசம்?

Leave a Reply

Your email address will not be published.