மூன்று வைத்தியர்கள்

Vinkmag ad

மூன்று வைத்தியர்கள்
————————————-
சுற்று வட்டாரத்தில் எங்கள் கீழச்சிறுபோது கிராமத்தில் மட்டும் மூன்று வைத்தியர்கள் இருந்தார்கள்.ஒருவர் மருத்துவ நிபுணர்,மற்றொருவர் அறுவை சிகிச்சை நிபுணர்,மற்றொருவர் நாய் கடி நோய் நிபுணர். பல ஊர்களிலிருந்திம் சிகிச்சைக்கு வருவர்.
திரு. சின்னாங்கம் அவர்கள்

இவர் மருத்துவ நிபுணர் . பெரும்பாலும் அஜீரணக் கோளாறு, மஞ்சகாமாலை நோயாளிகள் இவரிடம் வருவர். வந்தவர்களிடம் பிரச்சனை என்ன என்பார், எத்தனை நாள் என்பார், பிறகு ஒரு கணம் கண்ணை மூடி யோசிப்பார், கொஞ்சம் இருங்க என்று சொல்லிவிட்டு பெரும்பாலும் ஊருக்கு மேற்கே குமுழி மடை பக்கம் , சில நேரம் மேற்கே புது ரோட்டு பக்கம் செல்வார். ஒரு மணி நேரம் கழித்து ஒரு டம்ளரில் பச்சிலை மருந்து என அரைத்துக் கொடுப்பார்.என்ன இலை , எங்கு பறிக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். ரகசியம் சொன்னால் வியாதி சரியாகாது என சத்தியமாக நம்பியதால் அவரை யாரும் பின் தொடர மாட்டார்கள்.அவரும் அதை நம்பியிருக்கக் கூடும் அதனால்தான் தன் மனைவி , பிள்ளைகளுக்குகூட சொல்லவில்லை.அவர் இறப்புக்குப் பிறகு அந்த விலை மதிப்பில்லா மூலிகைகள் எங்கள் ஊர் வயல் வரப்புகளில் இருந்துகொண்டுதான் உள்ளது.எங்களுக்குத்தான் தெரியவில்லை.
திரு. அம்மாசி அவர்கள்
இவர் பிரபல நாய் கடி வைத்தியர்.அறுபது, ஏழுபதாம் ஆண்டுகளில் ரேபிஸ் எனப்படும் வெறிநாய் தடுப்பூசி எல்லாம் கிராமங்கள் கண்டறியாதது. எனவே நாய் கடித்துவிட்டால் இவரிடம் வருவார்கள். இவர் வைத்தியம் சற்று வித்தியாசமானது.நாய் கடித்த இடத்தைக் காண்பிக்கச் சொல்வார். வீட்டுகுள் சென்று ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வருவார்.கிழக்கு பக்கம் திரும்பச் சொல்லி தண்ணீரால் கழுவுவார்.அவ்வளுவுதான் போகலாம் என்பார். வாக்கு வாங்கி வந்துள்ளார் அதனால் பலிக்குது என்பர். அவர் இறப்பிற்கு அப்புறம் அவர் பிள்ளைகளோ, சொந்தங்களோ தொடரவில்லை.

திரு. குருசாமி ஆசாரி அவர்கள்
வயலோடும், மண்ணோடும், வியர்வையோடும் வாழ்ந்த கிராம மக்கள் சோப்புகளை பயன்படுத்த ஆரம்பித்தது என்னவோ தொண்ணூறுகளுக்குப் பின்புதான். அதனால் அவர்களிடம் தவிர்க்க முடியாத ஒரு நோய் புறப்பாடு என்று சொல்லும் சீழ் கட்டிகள். காலை ஆறு மணிக்கே பட்டறை புளி அறுவை சிகிச்சை அரங்கம் ஆகிவிடும். வைத்தியத்திற்கு வருபவர்கள் வெள்ளைத் துணி , ஒரு கட்டு வேப்பிலையோடு வரவேண்டும். அனைவரும் அமைதியாக காத்திருக்க வேண்டும் திரு குருசாமி அய்யா எழுந்து காபி குடிப்பார்.பிறகு கையை வீசி கொண்டு வருவார்.கத்தி என்னிடம் இல்லை என்ற தோரணையில் வருவார்.நோயாளி பயத்தால் நடுங்குவார்கள். அவர்களிடம் மாப்பிளை என்னிடம் ஒன்றுமில்லை சும்மா பார்ப்போம், என்று காண்பிக்கச்சொல்லுவார்,சில விநாடிகள் கட்டியை நோட்டமிடுவார் பின் மின்னல் வேகத்தில் கட்டியை கிழித்து சலத்தை வெளியேற்றிவிடுவார். அலறல் சத்தம் எழும்பி அடங்க ஆரம்பிக்கையில் , வேப்பிலையால் விசிறி விடுவார். விசிறும்போது ஏதோ முணு முணுப்பார் அப்போது அனைவரும் அமைதியகிவிட வேண்டும் . இத்ற்கு பார்வை பார்த்தல் என்பர். பிறகு வெள்ளைத் துணியில் வேப்பிலை கொழுந்தை மடித்து கட்டிவிடுவார். இன்றுவரை யாருக்கும் தெரியாத ரகசியம் அவர் கத்தியை எங்கு வைத்துள்ளார் அதை எப்படி எடுத்தார் என்பதுதான்.

காலையில் தான் பெரும்பாலும் வைத்தியம் நடக்கும்.எண்பதுகளின் மத்தியம் வரை இருந்த வைத்தியம் அவர்களின் இறப்புக்கு பிறகு சமூக வளர்சிதை மாற்றத்தினால் தொடர இயலாமல் நின்று விட்டது. வயிற்றுப்பசிக்கே போராடிக்கொண்டிருந்த கிராம மக்கள் வைத்தியச்செலவுக்கு என்ன செய்வார்கள். அவர்களுக்கிருந்த வரப்பிரசாதம் மேற்சொன்ன மூவரும்.இதற்காக இவர்கள் ஊதியம் ஏதும் வாங்கவில்லை என்பதுதான் இவர்கள் எங்கள் ஊருக்குச் செய்த புண்ணியம். அந்த புண்ணியவான்களை போற்றி மகிழ்கிறேன்.

பா.திருநாகலிங்கப் பாண்டியன்
கீழச்சிறுபோது

News

Read Previous

முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாத் நிர்வாகிகள்

Read Next

டிமெண்ஸியாவுடன் வாழ்க்கை.

Leave a Reply

Your email address will not be published.