அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

Vinkmag ad

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (14.11.2018)

விசுவாசங்கொண்டோரே! ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? துன்புறுத்தும் வேதனையிலிருந்து அது உங்களை ஈடேற்றும்.(61:10)

(அத்தகைய வியாபாரமாவது) நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய (இத்) தூதரையும் ஈமான் கொண்டு, உங்களுடைய பொருட்களையும்,உங்களுடைய உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர்(ஜிஹாது) செய்வீர்கள்; நீம்க்கள் அறியக்கூடியவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும்.(61:11)

(அவ்வாறு நீங்கள் செய்தால்) அல்லாஹ் உங்களுடைய பாவங்களை மன்னித்து விடுவான்; மேலும் சுவனங்களில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; மேலும், (அத்னு எனும்) நிலையான சுவனங்களில் (உள்ள) நல்ல இருப்பிடங்களிலும் (உங்களைப் பிரவேசிக்கச் செய்வான்) அதுவே மகத்தான வெற்றியாகும்.(61:12)

@ஒவ்வொரு அடியானும் தனது பொருட்களையும் உயிரையும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கத் துணிந்திட வேண்டுமென்று அல்லாஹ் விரும்புவதைப் பற்றியும், அவ்வாறு அர்ப்பணிக்கும் தியாகிகளுக்கு நாளை மறுமையில் கிடைக்கும் அளப்பரிய நற்கூலியைப் பற்றியும் தான் மேலே உள்ள மூன்று வசனங்களிலும் அல்லாஹ் நமக்கு உணர்த்தியுள்ளான்.

அல்லாஹ்வின் பாதை என்பதற்கு பல்வேறு உவமைகள் உண்டு; அதில் ஒன்று ஏகத்துவப் பிரச்சாரமாகும்; அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பற்றி இறைமறுப்பாளர்களிடம் எடுத்துச் சொல்வதும், அவ்வாறு எடுத்துச் சொல்லும் மனிதர்களுக்கான உதவிகளை செய்வதும் அல்லாஹ்வுடைய பாதை தான்.

அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட இறையடியார்களை துன்புறுத்தும் இறைமறுப்புக் கொள்கையாளர்களின் அநீதத்தை எதிர்த்துப் போராடுவதும் அல்லாஹ்வின் பாதை என்பதை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்; இத்தகைய போராட்டங்களில் கலந்து கொள்ளும் களப் போராட்டங்களுக்காக நமது பொருட்களையும் உயிர்களையும் கூட தியாகம் செய்வதே சிறந்த முஃமீனின் அடையாளமாகும்.

உலகம் முழுவதும் வாழும் இன்றைய முஸ்லிம்களின் நிலையோ, அநீதக்காரர்களை எதிர்த்துப் போராடும் சூழலாகவே உள்ளது; இந்த நிலையில் அநீதக்கார ஆட்சியாளர்களுக்கு எதிரான சாதாரண கண்டனப் போராட்டங்களில் கூட கலந்து கொள்ள அச்சப்படும் கோழைத்தனமானவர்கள், அல்லாஹ்வின் பாதையில் தங்களை எப்படி அர்ப்பணிப்பார்கள்?

அல்லாஹ்வின் பாதையில் என, உறுதி கொண்டு களமிறங்கும் போராளிகளுக்கு பல்வேறு சோதனைகளையும் அல்லாஹ் கொடுப்பான்; அதில் சிறை வாழ்க்கையும் அடங்கும்; அநீதியாளர்களின் ஆட்சியில் பொய் வழக்கின் கீழ் அல்லாஹ்வின் போராளிகள் சிறைப்படுத்தப்படுவதும் அல்லாஹ்வின் சோதனை தான்.

இத்தகைய சிறைப் போராளிகளும் நாளை மறுமையில் அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களே என்பதை மேலே உள்ள இறைவசனங்கள் நமக்கு ஆறுதல் தருகின்றன; இத்தகைய சிறைக்கு பயந்து போராட்டங்களை கண்டு அஞ்சி நடுங்கும் கோழைகளுக்கு நாளை சுவனத்தின் நல் வாழ்க்கை எப்படி உரிமையாகும்?

நம்மிடம் இருக்கும் பொருட்களும் உயிர்களும் அல்லாஹ்வுக்கானது என்பதை உறுதி செய்யும் ஆன்மாக்கள் மட்டுமே நாளை சுவனத்தின் சொந்தக்காரர்கள் என்பதாக அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்மாராயம் கூறியுள்ளனர்.

அல்லாஹ் விரும்பும் பாதையில் நாமும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

மழையில் நனையும் மாணவி

Read Next

அமைச்சர் கக்கன்

Leave a Reply

Your email address will not be published.