ரமலான் மாதத்தின் சிறப்பு

Vinkmag ad
ரமலான் மாதத்தின் சிறப்பு
நோன்பு என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அஸ் ஸவ்ம்’ என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. இதற்கு ‘நிறுத்திக் கொள்ளுதல்’, ‘விட்டு விடுதல்’ என்று அர்த்தம்.
பகலில் உணவை, நீரை, உடல் இச்சையில் ஈடுபடுவதை விட்டுவிட வேண்டும். தீய எண்ணங்களையும், பேச்சுகளையும், செயல்களையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளில் ஒன்றான நோன்பு, ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமை ஆக்கப்பட்டது. அதற்கு முன்பு முகரம் மாதம் பத்தாம் நாள் (ஆஷுரா) நோன்பு கடமை ஆக்கப்பட்டிருந்தது.
‘இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்பு இருந்த(நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமை ஆக்கப்பட்டதைப் போல, உங்கள் மீதும் நோன்பு கடமை ஆக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாகத் திகழக்கூடும்’ (2:183) என்று திருமறை கூறுகிறது.
இதன் மூலம், ‘இதற்கு முன்பு வாழ்ந்த சமுதாயத்தினர் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது’ என்பது புலனாகிறது.
வைகறை தொடங்குவதற்கு முன் தொடங்கி, சூரியன் அடையும் வரை உணவு, பானம், உடலுறவு போன்றவற்றில் இருந்து விலகி இருத்தலே இஸ்லாமிய நோன்பாகும். இது ரமலான் மாதம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
நோன்பு நோற்பது பருவம் அடைந்த ஒவ்வொரு ஆண்கள் மற்றும் பெண்கள் மீது கட்டாயக் கடமையாகும். நோயாளி, பயணி ஆகியோர் நோன்பைக் கைவிட அனுமதி உண்டு. ஆனால் அந்த நோன்பை அவர்கள் வேறு நாட்களில் நோற்க வேண்டும். அவ்வாறே பெண்கள் மாதவிடாய் ஏற்பட்ட நாட்களிலும், மகப்பேறு ரத்தப்போக்குள்ள நாட்களிலும் நோன்பு நோற்கலாகாது. வேறு நாட்களில் அந்த நோன்புகளை நிறைவேற்ற வேண்டும்.
‘ரமலான்’ என்பது ‘ரமளான்’ என்றும் சொல்லப்படு கிறது. இது ‘ரமள்’ என்ற சொல்லில் இருந்து வந்தது. இதற்குக் ‘கடின வெப்பம்’ என்று பொருள். இந்த மாதத்தில் கடும் வெப்பம் நிலவியதால் அரேபியர்கள் இப்பெயரைச் சூட்டினார்கள்.
‘ரமலானில் நோன்பு நோற்பதால் பாவங்கள் சுட் டெரிக்கப்படுகின்றன’ என்பது இஸ்லாம் வந்த பிறகு கூறப்பட்ட காரணமாகும்.
ரமலான் மாதத்திற்கு வேறு பல பெயர்கள் உண்டு. இறை மாதம் (ஷஹ்ருல்லாஹ்), மறை மாதம் (ஷஹ்ருல் குர்ஆன்), வெற்றி மாதம் (ஷஹ்ருத் நஜாத்), அருட்கொடைகள் மாதம் (ஷஹ்ருல் ஆலாஉ) போன்ற பெயர்களும் உண்டு.
மனிதர்களுக்கு இறைவன் மன்னிப்பை வழங்கும் மாதம்; சொர்க்கத்தைப் பரிசாக வழங்கும் மாதம் என்பதால் இது ‘இறை மாதம்’ என்று அழைக்கப்படுகிறது.
ரமலான் மாதத்தில்தான் உலக மக்களுக்கு நேர்வழி காட்டக் கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. இதனால் இது ‘மறை மாதம்’ என்ற பெயரைப் பெற்றது.
இஸ்லாமிய வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்திய போர், ‘பத்ர்’ என்னும் இடத்தில் முஸ்லிம்களுக்கும் அவர்களை எதிர்த்த மக்கா மாநகர் குரைஷிகளுக்கும் இடையே நடந்த போராகும். இந்தப் போரில் 313 முஸ்லிம்கள் மட்டுமே பங்கேற்றனர். ஆனால் எதிர் தரப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர். எனினும் இந்தப்போரில் முஸ்லிம்கள் மாபெரும் வெற்றி பெற்றனர். இது ரமலான் மாதத்தில் நடைபெற்ற போராகும்.
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவிய பிறகு நபிகளார், குரைஷிகள் யாரும் எதிர்பாராத நேரத்தில் பத்தாயிரம் பேருடன் மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். கத்தியின்றி ரத்தமின்றி மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. இதுவும் ரமலான் மாதத்தில் நிகழ்ந்தது. இதனால்தான் ரமலான் மாதம் ‘வெற்றி மாதம்’ என்ற அடைப்புக்குறிக்குள் அடைகாக்கப்படுகிறது.
‘எவர் ரமலான் மாதத்தில் ஒரு கடமையான செயலை நிறைவேற்றினாரோ, (அதற்கு) மற்ற மாதங்களில் 70 கடமைகளை நிறைவேற்றுவதற்கான நற்கூலியை இறைவன் வழங்குவான்’ என்பது நபிமொழி. இதனால் இந்த மாதம் ‘அருட்கொடைகள் மாதம்’ ஆனது.
ரமலான் மாதம் வந்து விட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகளவு வழிபாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள். முந்தைய மாதமான   ஷஅபான் மாதத்திலேயே அதற்குத் தயாராகி விடுவார்கள்.
ஷஅபான் மாதத்தின் இறுதியில் நபி களார் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தும்போது, “மக்களே! மகத்துவம் மிகுந்த ரமலான் மாதம் நெருங்கி விட்டது. இந்த மாதத்தின் ஓர் இரவு, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும். இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கி இருக்கிறான். இது பொறுமையின் மாதமாகும். மேலும் இந்த மாதம் சமுதாயத்தில் உள்ள ஏழைகள், தேவையுள்ளோர் மீது அனுதாபமும், பரிவும் காட்ட வேண்டிய மாதமாகும்’ என்று கூறினார்கள்.
தான தர்மங்கள் செய்ய வேண்டும்; ஏழைகள், விதவைகள், ஆதரவற்றோருக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் ரமலான் மாதத்தை ‘பரஸ்பர அனுதாபத்தின் மாதம்’ என்று நபிகளார் குறிப்பிட்டார்கள்.
ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வுக்காகவே நோன்பு நோற்கிறார்கள். இதனால்தான், ‘எனக்காகவே நோன்பாளி தனது உணவையும், பானத்தையும், ஆசையையும் கைவிடுகிறார். நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று இறைவன் கூறுகிறான்.
ஒரு செயலை அல்லது பொருளை அல்லாஹ் (இறைவன்) இது என்னுடையது என்று சொல்வது, அந்தச் செயலின் அல்லது பொருளின் மகத்துவத்தை உணர்த்த போதுமான சான்றாகும்.
‘மக்கள் ரமலான் மாதத்தின் சிறப்புகளை முழுமையாக அறிவார்களேயானால், வாழ்நாள் முழுவதும் ரமலானாகவே இருக்கக்கூடாதா என்று ஏங்குவார்கள்’ என்பது நபிமொழியாகும்.

News

Read Previous

காத்தாகுளம் சாலையை சீரமைக்க கோரிக்கை

Read Next

ஆரோக்கியமாக வாழ…!

Leave a Reply

Your email address will not be published.