மறுமை வாழ்வை நேசிப்போம்!

Vinkmag ad

 

                                ( கீழை ஜஹாங்கீர் அரூஸி)
ஆசைப்பட்ட வாழ்க்கை இவ்வுலகில் கிடைக்கவில்லையே.. என்று ஏங்குவோர்கள் கீழ்க்காணும் இறைவசனத்தை படித்து மனதில் பதிந்து கொண்டால் இவ்வுலக வாழ்வு பூஜ்ஜியமென்பதை புரிந்து கொள்வார்கள்.
“இவ்வுலகத்தையும்(அதில் உள்ளவற்றையும்)விட உங்களுக்கு மறுமையே சிறந்தது.உங்கள் இரட்சகன் உங்களுக்கு (மறுமையில் அளப்பரிய நற்கூலிகளை)வாரி வழங்குவான்.(அவற்றைக் கொண்டு)நீங்கள் திருப்தி அடைவீர்கள்.”(அல்குர்ஆன் 93 – 4,5)
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் குற்றத்திற்கும் முதல் காரணம் இவ்வுலக வாழ்வின் மீதான ஆசையே!இதுபோன்ற ஆசைகளை புறக்கணிக்க வேண்டுமென்ற நபிமொழியை நினைவில் கொள்வோம்.
“உலக ஆசை ஒவ்வொரு தவற்றுக்கும் தலைமையாகும்”எனவே அதை விட்டும் புறக்கணிப்பதை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்.(நபிமொழி- நூல்;மிஷ்காத்)
வானவர் கோமான் ஜிப்ரயீல்(அலை)அவர்கள் நபி நூஹு(அலை)அவர்களிடம் வந்து இந்த உலக வாழ்வைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக்கேட்டார்கள்?
அதற்கு இந்த உலக வாழ்வென்பது இரண்டு வாசல்களை கொண்ட ஒரு வீடு என நபி நூஹு(அலை)சொன்னார்கள்.ஏனென்றால் நான் ஒரு வாசல் வழியாக இவ்வுலகம் வந்தேன்,மறுவாசல் வழியாக வெளியே போகப்போகிறேன்.அதாவது மரணத்தின் வாயிலாக இந்த உலகத்தை விட்டு போகப்போகிறேன் எனச்சொன்னார்கள்.
900 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்ந்த நபி நூஹு(அலை)அவர்களின் மரணத்தின் வாயிலாக இவ்வுலகில் யாருமே நிரந்தரமானவர்கள் அல்ல என்பது மிகத்தெளிவாக புரிகிறது.
இம்மையும்,மறுமையும் இரு சக்களத்திகள் போல் இருக்கின்றன.ஒரு கணவன் தம் இரு மனைவியரில் எவளிடம் அதிகப்படியான அன்பும்,ஆதரவும் வைக்கிறானோ?அவள்தான் இவனிடத்தில் மிகவும் நேசமாக இருப்பாள் என ஹழ்ரத் அலி(ரலி)அவர்கள் கூறினார்கள்.(நூல்;மிஷ்காத்)
இம்மை,மறுமை என்ற இரு மனைவியரில் இன்பத்திலும்,துன்பத்திலும் யார் கடைசிவரை பங்கு பெறுகிறார்களோ?அவர்களைப் புரிந்து நாம் செயலாற்றிட வேண்டும்.
தேன் இனிக்கும் என்பது தெரிந்த பிறகுதான் அந்தத்தேனின் மீது நமக்கு ஆசை பிறக்கிறது.தீ கரிக்கும் என்பதை புரிந்த பிறகுதான் அது பற்றி எரியும் போது எட்டி நிற்கும் எண்ணம் பிறக்கிறது.இதைப் போலத்தான் இந்த உலக வாழ்வும்.
உலகமே,நீ யாருக்காகவும் நிலைத்திருக்க முடியாது,உனக்காக யாரும் நிலைத்திருக்கவுமாட்டார்கள்.என நபி இபுறாகீம்(அலை)அவர்களுக்கு வழங்கப்பட்ட சுஹுபு என்ற சிற்றேட்டில் அல்லாஹ் கூறியிருக்கிறான்.
நேற்று இருந்தோர் இன்று இல்லை,இன்று இருப்போர் நாளை இருப்பாரோ?என்ற எதார்த்த வாழ்வுக்கு சொந்தக்காரர்களாகிய நாம் இனிமேலாவது அழிந்துபட்டு போகும் இவ்வுலக வாழ்வின் ஆசைகளுக்கு அடிபணியாமல், நிலையான மறுமை வாழ்வுக்குரிய (நல் அமல்கள்)என்ற சேமிப்பின் மூலம் மறுமை வாழ்வை நேசிப்போம்!  (வஸ்ஸலாம்).

News

Read Previous

சர்க்கரை நோயை அதிகரிக்கும் பச்சரிசி

Read Next

அந்தக் கண்கள்

Leave a Reply

Your email address will not be published.