தொழாத தொழுகைகள்….

Vinkmag ad

தொழாத தொழுகைகள்….
— மௌலவி நி. அமீருதீன் ஹசனி

 

 

இன்று இஸ்லாமியர்களில் பலர் தெரிந்தே செய்யும் மிகப்பெரிய, தவறான செயல் “தொழுகையை விடுவது” ஆகும். அவர்கள் தங்கள் செயலுக்கு பல காரண காரியங்களை கற்பித்தாலும், குர்ஆன் ஹதீஸ் ஒளியில் தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவம் என்பதை பற்றி விளக்குகிறது இக்கட்டுரை.

 

முஸ்லிமான ஒவ்வொரு ஆண் பெண் மீதும் ஐவேளை தொழுகை கடமையானது, அதாவது ஃபர்ளு என நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் (சூரா அன்கபூத் வசனம் 45 ல்) கூறுகிறான்  “நிச்சயமாக தொழுகை மானக்கேடான காரியங்கள் மற்றும் தீய செயல்களை விட்டும் தடுக்கின்றது”.

 

      இதன்மூலம் தொழுகையானது மனிதனை பாதுகாக்கிறது, கெட்ட செயல்களை செய்வதை விட்டும் மக்களைத்தடுக்கிறது என்பதை நம்மால் உணர முடியும்.மேலும் குர்ஆனில் 414 இடங்களில் “நீங்கள் தொழுகையை நிலைநாட்டுங்கள் மேலும் ஜக்காத் கொடுங்கள் “என்று அல்லாஹுத்தஆலா கூறுகிறான். 

 

இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும் ஒரு சட்டத்தை அல்லாஹுத்தஆலா ஒரு முறை சொல்லிவிட்டால் போதும் அதை முஸ்லிம் எவராலும் மறுக்க முடியாது.ஆனால் பல முறை, பல இடங்களில் தொழுகையை நிலை நாட்டுங்கள் என திரும்பத் திரும்ப கூறுவதற்கு காரணம் தொழுகை அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்குவதற்காகத் தான் . இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

தொழாமல் நாம் சொர்க்கத்தை அடைந்து கொள்ள முடியாது ஏனெனில் சொர்க்கத்தின் சாவி தொழுகை தான். ஹஸ்ரத் ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் “சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகை தொழுகையின் திறவுகோல் ஒளு” என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்( நூல் முஸ்னத் அஹமத் ஹதீஸ்  எண்.340).

 

ஒருபோதும் பெருமானார் அவர்கள் தொழுகையை விடுவதற்கு அனுமதி தரவில்லை. நின்று தொழுங்கள். உங்களால் நிற்க முடியவில்லையெனில் அமர்ந்து தொழுங்கள்.அதற்கும் சக்தி பெறவில்லையெனில் படுத்துக்கொண்டு சைகை மூலமாகதொழுங்கள். என்ற நபிமொழியை நாம் அறிந்தும் கூட நம்மில் பலர் தொழுகையை விட்டு காரணமின்றி விலகியே இருக்கிறார்கள்.பெருமானார் அவர்கள் மரணத் தருவாயில் இருக்கும்போது கூட உங்களுடைய தொழுகைகளை சரிசெய்து கொள்ளுங்கள் என திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தார்கள் அப்படி இருந்தும் இன்று பலர் தொழுகைகளை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த குரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வீடுகளிலேயே தொழுது கொள்ளும் வாய்ப்பை பெற்றும் பலர் தொழுகையை விட்டு விடுகிறார்கள் அதில் சிலர் அலட்சியத்தால், சிலர் மறதியால் என பட்டியல் நீள்கிறது இன்னும் சிலரின் எண்ணம்” நமக்கு வயதான பின் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் முறையாக தொழுது கொள்ளலாம்” என்பதாக  உள்ளது.ஆனால் பெரும்பாலான மக்கள் தொழுகையை விடுவது பெரும் பாவம் என்பதை உணர்வதில்லை, மிகப்பெரிய நட்டம் என்பதையும் விளங்குவதில்லை. 

 

ஒரு மனிதன் ஒருவேளை தொழுகையை விட்டுவிட்டால் அவனுக்கு எவ்வளவு நட்டம் ஏற்படும் என்பதை பெருமானார் உடைய ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.நவ்ஃபல் பின் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் “ஒருவருக்கு ஒரு நேரத் தொழுகை தவறி விடுவது அவரது வீட்டார் பொருட்கள் செல்வங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டது போலாகும்” என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்  ( நூல் இப்னு ஹிப்பான்:330)

 

அல்லாஹ்விடமிருந்து பல்வேறு அருட்கொடைகளை பெற்றுக் கொண்ட மனிதன் நாளை மறுமை நாளில் மகிழ்ச்சியாக அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் அல்லவா? ஆனால் தொழுகையை விட்ட மனிதன் அல்லாஹ்வை எப்படி, எந்த சூழலில் சந்திப்பான் என்பதை பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.

 

“தொழுகையை விட்ட மனிதன், அல்லாஹுத்தஆலா அவன் மீது வெறுப்புற்று இருக்கும் நிலையில், அல்லாஹ்வை சந்திப்பான்” என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக ஹள்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் (நூல் தப்ரானி: 26).தொழுகை இல்லாதவருக்கு இஸ்லாத்தில் எந்தவித பங்கும் இல்லை மேலும் தொழுகை இல்லாமல் தீன் இல்லை உடலில் தலை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு தீனில் தொழுகை முக்கியமானதாகும் என்ற கருத்துள்ள நபி மொழிகள் எல்லாம் தொழுகையை விடும் மனிதரை எச்சரிக்கை செய்கிறது

 

இப்படி இவர்கள் தொழுகைகளை விட்டு விலகி வாழ காரணம் என்ன தெரியுமா? அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் “தங்களுடைய இறைவனை நிச்சயம் சந்திப்போம் என்றும் அவன் இடத்திலேயே நிச்சயம் செல்வோம் என்றும் நம்பிக்கை கொண்ட பயபக்தி அவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) இந்த தொழுகையை மிகச் சிரமமாகவே இருக்கும்”(அல்குர்ஆன் 2-45,46).

 

அதாவது யாருக்கு அல்லாஹ்விடத்தில் அச்சம் குறைந்து விட்டதோ அவர்களுக்கு தொழுகை ஒரு பெரும் பாரம் ஆகவே இருக்கும். தொழுவதை ஒரு சுமையாக அவர்கள் கருதுவார்கள். நாளை மறுமையில் முதன்முதலாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித்தான். அப்போது அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

 

தொழுகையை விட்டு விலகி வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பர்களே நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் நீங்கள் அல்லாஹ்வின் அன்பை விட்டு தூரமாகி கொண்டுள்ளீர்கள் உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ்வுடைய அச்சம் குறைந்துகொண்டே வருகிறது இதனுடைய முடிவு மிகக் கடுமையாக இருக்கும் எனவே நாம் நம்முடைய தொழுகைகளை பேணி பாதுகாத்து கொள்வோமாக. வல்ல அல்லாஹ் அதற்கு துணை புரிவானாக ஆமீன்

 

News

Read Previous

சூழலியல் – உயிரியல் புறக்கணிப்பு: மறைக்கிறோமா, மறைந்துபோகிறோமா?

Read Next

பரமக்குடி கொல்லம்பட்டறை ஜமாஅத் தலைவர் ஏ.இப்ராஹிம் மரணம்

Leave a Reply

Your email address will not be published.