சுவனத் தென்றலின் சுவை!

Vinkmag ad

#சுவனத்தென்றலின்சுவை!

யர்முக் போரின்போது ரோமப் படைத் தளபதி மஹன் என்பவன், ஃகாலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து ஏளனமாகப் பேசினான். “பஞ்சைப் பராரிகளே… தேவையான பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓடி விடுங்கள்’‘ என்றான்.

“நீ தவறாகப் புரிந்துகொண்டாய். உங்கள் இரத்தத்தைச் சுவைக்கவே நாங்கள் இங்கே வந்துள்ளோம்’‘ என்று அவனுக்குப் பதிலடி கொடுத்த ஃகாலித், தன் தோழர்களைப் பார்த்து இவ்வாறு முழங்கினார்: “என் அருமைத் தோழர்களே, சுவனத்தின் தென்றல் காற்று இதமாக வீசுவதை நீங்கள் உணரவில்லையா? அதன் குளிர்ச்சி உங்களை மகிழ்விக்கக் காத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா? வெற்றியின் நற்பேறும் காத்திருக்கிறது. முன்னேறுங்கள்!”

சுவனத் தென்றலின் சுவையை உணரத் துடித்த முஸ்லிம்கள் அன்று தீரமாகப் போராடி ஒரே நாளில் 1,20,000 ரோமர்களைக் கொன்றொழித்தார்கள். முஸ்லிம்களிலும் நிறைய பேர் ஷஹீதானார்கள்.

இந்தப் போரில் கலந்துகொண்ட ஜர்ஜாஹ் என்ற ரோமப் படைத்தளபதி ஃகாலிதிடம் வந்து, “உங்கள் நபி வானத்திலிருந்து வாள் ஒன்றைப் பெற்றுத் தந்தார்களோ? உங்களைச் சந்திக்கும் எதிரிகள் அனைவரும் தோற்று ஓடுகிறார்களே…” என்று கேட்டான்.

அதற்கு ஃகாலித் இவ்வாறு பதிலளித்தார்: “நான் இஸ்லாமுக்கெதிரான கொடிய எதிரியாக இருந்தேன். பிறகு நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன். ஒருமுறை நபி ﷺ அவர்கள், “ஃகாலிதே, நீங்கள் அல்லாஹ்வின் வாள்! உங்கள் வாள் வலிமையானது. எதிரிகளின் வலிமையை அது அழித்தொழிக்கும்” என்றார்கள். அதிலிருந்து “ஸைஃபுல்லாஹ்” என்று எனக்கு பெயர் வந்தது.”

உடனே, “இந்தக் கொள்கையை நான் ஏற்றுக்கொண்டால் நீங்கள் அடைந்த இந்த நற்பேறுகளை நான் அடைந்துகொள்ள முடியுமா? அதிலும் குறிப்பாக உங்களைப் போன்றே ஆக முடியுமா?” என்று ஜர்ஜாஹ் கேட்டார். “ஆம்” என்று கூறிய காலித் அவருக்கு அழகிய முறையில் இஸ்லாமை எடுத்து வைத்தார். ஜர்ஜாஹ் தன் இதயத்தினுள் இஸ்லாமை ஏந்தி புனித கலிமாவை முன்மொழிந்தார்.

என்னே ஆச்சரியம்…! மறுநாள் நடந்த போரில் முஸ்லிம்களின் படையில் பங்கெடுத்து அவர் ஷஹீதானார்.

ஃகாலிதின் உந்துதல் பேச்சால் நூற்றுக்கணக்கான தோழர்கள் ஷஹாதத் பதவியை அன்று அடைந்தார்கள். அதேபோன்று முந்தைய நாள் இஸ்லாமைத் தழுவிய ஜர்ஜாஹுக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்தது. ஆனால் அவர்களின் ஷஹாதத்துக்கெல்லாம் காரணமாக இருந்த ஃகாலிதுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை.

ஃகாலித் ரலியல்லாஹு அன்ஹு மரணத் தறுவாயில் கிடந்தபொழுது அழுதுகொண்டே இவ்வாறு கூறினார்: “நான் எத்தனை போர்களில் கலந்துகொண்டிருப்பேன்… எத்தனை வாள்களையும் அம்புகளையும் என் உடல் சந்தித்திருக்கும்… அப்போதெல்லாம் உயிர்த் தியாகியாக மாறி, சுவனத் தோட்டங்களிலும் அல்லாஹ்வின் அர்ஷிலும் பச்சைப் பறவையாக பறக்கத் துடித்தேனே… என் உடம்பில்தான் எத்தனை தழும்புகள்! இதில் ஒன்றாவது என்னை உயிர்த் தியாகியின் அந்தஸ்தில் சுவனத்தில் சேர்க்கவில்லையே… என் ஆசைகள் நிறைவேறாத நிலையில் மரணம் என்னைத் தழுவுகின்றதே!”

அந்த நிலையிலேயே ஹிஜ்ரி 21ல் அவருக்கு மரணம் நிகழ்ந்தது.

#MSAH_வரலாற்றுத்_துளிகள்

News

Read Previous

அரபு மொழிப் பாடம்

Read Next

ராமநாதபுரம் தொகுதி

Leave a Reply

Your email address will not be published.