கரு தாங்கிய பெண்ணின் கண்ணீர் காவியம்

Vinkmag ad

கரு தாங்கிய பெண்ணின் கண்ணீர் காவியம்

என்னிடம் சென்ற மாதம் நஜ்முன்னிசா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற 67 வயது பாட்டி ஆலோசனைக்கு வந்தார்.அவருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள்.அதில் ஐந்து பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை ஆகும்.அந்த ஆணிற்கு வயது 28 .அந்த பெண்ணின் கணவர் அந்த குழந்தையின் இரண்டு வயதிலே வஃபாத்தாகி விட்டார்.அதன் பிறகு இந்த தாய் மிகவும் ஏழ்மை நிலையில் கஷ்டப்பட்டு வீட்டு வேலைகள் செய்து அந்த ஐந்து பெண்களையும் கரையேற்றி உள்ளார்.அந்த கடைசி ஆண் குழந்தையையும் கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார்.அந்த பையனும் அம்மாவின் கஷ்டம் உணர்ந்து நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்து சிறந்த வேலையிலும் அமர்ந்தான்.அந்த தாயின் உச்சி குளிர்ந்தது.தன் கிராமத்தில் அவள் தனியாக நின்று கஷ்டப்பட்டு தன் மகனை அந்த ஊரில் முதல் பட்டதாரியாக்கியவுடன் தான் பிறந்த பாக்கியத்தை அடைந்தது போல் உணர்ந்தார்.

சரி,இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்.அந்த தாய் என்னிடம் தனக்கு கர்ப்பப்பை இறங்கியுள்ளதாகவும் அதனால் சிறுநீர் கழிக்க சிரமமாக உள்ளது என்று கூறினார்.அவரை பரிசோதித்த நான் அதிர்ச்சியானேன்.கர்ப்ப ப்பையோடு சேர்ந்து மூத்திர பையும் இறங்கியிருந்தது.அது நெடுங்காலமாக இருந்திருக்கலாம்.அவரிடம் மேலும் விசாரித்த போது அந்த கடைசி ஆண் குழந்தை பிறந்ததிலிருந்து அவருக்கு இந்த கர்ப்பப்பை இறக்கம் உள்ளது என்றும் தன் மகனை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதனாலும் தன் பொருளாதார நிலை காரணமாகவும் தான் அதை தன் மகள்களிடம் கூட மறைத்ததை கேட்டு என் கண்கள் குளமானது.ஒரு சின்ன தலை வலிக்கே அய்யோ! அம்மா! என்று அலறும் இன்றைய சமுதாயத்தினர் மத்தியில் ஒரு தாயின் தியாகமும்.,பொறுமையும் கண்டு மெய் சிலிர்த்து போனேன்.
அவருக்கு இருதய பிரச்சனை வேறு இருந்தது.இருதய பிரச்சனை உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் பொழுது மற்றும் மயக்க மருந்து கொடுக்கும் போதும் பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.அவர்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. பல யோசனைகளுக்கு பின் என் கணவர் தந்த ஊக்கத்தினால் அல்லாஹ்வின் மேல் பாரத்தை போட்டு அவருக்கு நானும் எனது கணவரும் அறுவை சிகிச்சை செய்தோம்.அல்ஹம்துலில்லாஹ்!ஆபரேசன் நல்லபடியாக முடிந்தது.

அந்த தாயின் கருவறையின் கண்ணீர் காவியத்தை அவள் மொழியில் எழுதுகிறேன்
“””
பல விதமான பரிசோதனைகளுக்கு பின் டாக்டரை சந்திக்கச் சென்றேன்.”இது ஒண்ணும் பெரிய விக்ஷயம் இல்லம்மா.,இந்த வயசுல எல்லா பெண்களுக்கும் வர்ற பிரச்சனை தான்,கர்ப்பப்பை எடுத்தால் எல்லாம் சரியாகி விடும்.ஆறு நாள் மருத்துவமனையில் இருந்தா போதும்.யோசிச்சு சொல்லுங்க.” என்று சொல்லி முடிக்க எத்தனையோ யோசனைகளோடு வீடு வந்தேன்.மகள்களிடம் சொல்ல ,”பயப்படாதம்மா ஒண்ணும் ஆகாது,எல்லோரும் பண்ணிக்கிறது தானே,” என்று தைரியப்படுத்தினார்கள்.
மகனிடம் சொல்ல ,”கர்ப்பப்பை மாற்று சிகிச்சை செய்து குழந்தை பிறக்க வைக்கும் இப்போ இருக்கிற advance technology ல  இதெல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரண ஆபரேசன் மா நகத்தை வெட்டி எடுக்கிற மாதிரி ஈஸியா பண்ணிடறாங்க.பயப்படுறதுக்கு எதுவுமே இல்லை,தைரியமா இரும்மா” என்று சமாதானப் படுத்தினான்.எனக்கு மட்டும் தயக்கமாகவே இருந்தது.ஆபரேசன் நாளன்று பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கூட ஆஸ்பிடலுக்கு வந்துவிட்டார்கள்.என்னுடைய தயக்கம் மட்டும் போகவே இல்லை.ஆபரேசன் முடிந்து சில மணி நேரத்தில் கண் விழித்தேன்.குழந்தைகள்,பேரப்பிள்ளைகள்,உறவினர்கள்,நண்பர்கள் என எல்லோரும் பார்க்க வந்துவிட்டார்கள்.ஆனால் நான் பார்க்க விரும்பியது இவர்கள் யாரையும் இல்லை,ஆபரேசன் செய்து எடுக்கப்பட்ட என்னுடைய கர்ப்பப்பையை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.ஏற்கனவே நான் சொல்லி வைத்ததால் ஐஸ் பெட்டிக்குள் எடுத்து வைத்திருப்பதாக சொன்னார்கள்.கஷ்டப்பட்டு எழுந்தேன்,கஷ்டப்பட்டு நடந்தேன்,அடிவயிற்றின் வலி நடக்கமுடியாமல் தடுத்தது.ஆனாலும் நடந்தேன்!ஐஸ் பெட்டியில் இருந்து வெளியே எடுத்தார்கள்.மெல்ல தடவிய படி தொட்டுப்பார்த்தேன்.

“என் கருவறை”

இது வரை நான்
உன் இருப்பிடத்தை
தொட்டதே இல்லை .
இன்றே தொடுகிறேன்……
என் உடல்
சிலிர்ப்பதும் ஏனோ?????
என் கைகள்
உதறுவதும் ஏனோ????
என் கண்கள்
ஈரமாவதும் ஏனோ????
என் இதயம்
பரபரப்பதும் ஏனோ????
என் மக்களை நீ
சுமந்ததாலோ?!

அழகான அந்த கருவறை அங்கங்கு வீங்கியும்,முடிச்சுகளாகியும்,சிறுசிறு கட்டிகளோடும் உருக்குலைந்து போயிருந்தது!மற்றவர்களை பொறுத்தவரை இது சாதாரண கர்ப்பப்பை,என்னை பொறுத்தவரை இது என்னுடைய உயி்ர்!
என் ஆறு குழந்தைகளின் பாரத்தை மட்டும் தான் நான் சுமந்திருக்கிறேன்!பாதுகாப்பாய் சுமந்தது இந்த கருவறை தான்!ஒரு தாயாக இந்த உலகத்தில் பெருமையோடு வலம் வர காரணமே இந்த கருவறை தான்!என் குழந்தைகளை கலைந்து போகாமல் காப்பாற்றியது இந்தக் கருவறை தான்!எல்லோரும் எடுத்துவிடலாம்  என கூறிய போது நான் தயங்கியதன் காரணம் உயிருக்கு பயந்து அல்ல,என்னை தாயாக்கிய இந்த தாயை இழந்து விடுவேனோ என்று தான் ! நாலைந்து வருடங்களாய் குழந்தையின்றி நான் அலைந்து சிரமப்பட்டது சகலமும் அறிந்த அல்லாஹ்விற்கு தான் தெரியும்.
மலடி என்று சொல்லி என் மாமியார் வேறுபெண் பார்க்க தேடிய போது ஏற்ப்பட்ட இரணத்தை குணமாக்கியது இந்த கருவறை தான்!முதல் குழந்தையை இழந்தது போன்ற இந்த வலியை முதன்முதலாக உணர்கிறேன்!நான் உன்னை சரியாக பார்த்துக் கொள்ளாமல் விட்டுவிட்டேனோ என்கின்ற குற்றவுணர்ச்சி மேலோங்க,எல்லாம் தந்த அந்த கருவறைக்கு சில துளி கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்கி விட்டு அங்கிருந்து திரும்புகிறேன்.அந்த கடவுள் தந்த அத்தனை உறவுகளும் என்னைத்தாங்க ஒடி வருகிறது! உடலளவில் கொஞ்சம் லேசாகிறேன்,மனது மட்டுமே கனமாகிறது.””””””

ஒரு தாயின் தியாக உள்ளமும் விடாமுயற்சியும் என்னை வியக்க வைத்தது.அவள் தன் மகனுக்கு பிறந்த பேரப் பிள்ளையோடு எந்த கவலையுமின்றி கொஞ்சி விளையாடியதை கண்டு நோயையும் கொடுத்து அதற்குரிய ஷிஃபாவையும் தந்து இந்த தியாகத் தாய்க்கு உதவ எனக்கு ஒரு சந்தர்ப்பமும் அளித்த இறைவனிடம் நன்றி கூறினேன்.

News

Read Previous

மருந்து கடை தொழிலாளி கொலை: மேலும் மூவர் கைது

Read Next

மார்பக புற்றுநோய்

Leave a Reply

Your email address will not be published.