இந்திய விடுதலை – ஓர் அமானிதம்

Vinkmag ad
இந்திய விடுதலை – ஓர் அமானிதம்
இஸ்லாம் ஓர் ஆன்மீக மார்க்கம். அது வணக்க வழிபாடுகளை மட்டுமே பெரிதும் வலியுறுத்துகின்றது என்பதே பெரும்பாலான முஸ்லிம்களின் புரிதலாக இருக்கிறது. இந்தத் தவறான புரிதலே முஸ்லிம்கள் பல விடயங்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுக்கத் தவறுவதன் முக்கியக் காரணமாகவும் விளங்குகின்றது. இஸ்லாமிய மார்க்கத்தை ஆன்மீக மார்க்கமாக மட்டுமல்லாது அறிவியல் மார்க்கமாகவும், வாழ்வியல் மார்க்கமாகவும் அணுகி, ஆராய்ந்தால் மட்டுமே இஸ்லாத்தின் முழுமையான வடிவம் விளங்கும். இஸ்லாம் எதையெல்லாம் வலியுறுத்துகின்றது என்ற உண்மை புரியும்.
தொழுகை, நோன்பு போன்ற வணக்கவழிபாடுகளை மட்டும் கடைப்பிடித்தால் போதும் என்றே பெரும்பாலான முஸ்லிம்கள் நினைக்கின்றனர். ஆனால் இஸ்லாமோ வணக்க வழிபாடுகளை மட்டும் வலியுறுத்தவில்லை. நாம் கவனம் செலுத்தாத எத்தனையோ விஷயங்களை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் சுற்றுச்சூழல் பாதுகாப்பை  இஸ்லாம் அதிகம் வலியுறுத்துவதன் காரணமாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  தேங்கி நிற்கும் நீரிலும், நிழல் தரும் மரங்களின் கீழும் அசுத்தம் செய்யாதீர்கள் என்று போதித்தார்கள். அறிவியலையும், ஆராய்ச்சியையும் இஸ்லாம் வலியுறுத்துவதன் காரணமாகவே சுமார் 600 ஆண்டுகாலம் முஸ்லிம்கள் விஞ்ஞானத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
கல்வியை உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று பிரித்து அணுகுவதைப் போன்று  வரலாற்றையும் இஸ்லாமிய வரலாறு, இஸ்லாம் அல்லாத வரலாறு என்று பிரித்து அணுகுகிறோம். வாய்ப்புக் கேடாக இந்திய விடுதலை வரலாறும் இஸ்லாம் அல்லாத வரலாற்றிற்குள் அடங்கியதன் காரணத்தினாலோ என்னவோ இந்திய விடுதலை வரலாற்றிலும் அதன் பாதுகாப்பிலும் நாம் கவனம் செலுத்தாமல் இருக்கின்றோம்.
இஸ்லாம் கல்வியையும், அறிவியலையும், ஆராய்ச்சியையும், அரசியலையும், பண்பாட்டையும் வலியுறுத்தும் அளவிற்கு நாட்டுப்பற்றையும்  அதிகம் வலியுறுத்துகின்றது. ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈமானின் கிளைகளை வகைப்படுத்தும்போது தான் சார்ந்த நாட்டின் மீது பற்று வைப்பதையும், நாட்டுக்காகப் போரிடுவதையும் ஈமானின் ஒரு கிளையாக வகைப்படுத்தினார்கள்.
ஈமானின் அந்தவொரு கிளை அன்றைய இந்திய முஸ்லிம்களிடத்தில் காணப்பட்டதாலேயே தன் தாய் நாட்டின் மீது மிகுந்த பற்று வைத்து, நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்கள். இந்திய விடுதலைக்கு முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்தார்கள் என்று சொல்வதைவிட, இந்திய விடுதலைப் போராட்டத்தை முஸ்லிம்கள் முன்னெடுத்துச் சென்றார்கள் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். நம் முன்னோர்கள் போராடிப் பெற்ற இந்திய விடுதலையை மார்க்கத்தோடும், நபிகளாரின் வழிகாட்டுதலின்படியும் அணுக வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இந்திய முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்திய விடுதலையென்பது ஓர் அமானிதமாகும்.
‘அமானிதம்’ என்னும் சொல்லுக்கு ‘மனிதனால் பெறப்பட்டு பாதுகாக்க வேண்டிய ஒரு பொருள்’ என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. அமானிதம் இரு வகைப்படும். ஒன்று மனிதர்கள் இறைவனிடமிருந்துப் பெற்றவை. காற்று, நீர், நிலம் போன்றவை மனிதர்கள் இறைவனிடமிருந்துப் பெற்றவை என்ற வகையில் முதலாவது அமானிதத்திற்குள் வருகிறது. இவற்றை நாம் எந்த வகையிலும் மாசுபடுத்தக்கூடாது என்பதற்காகவே பெருமானார் (ஸல்) சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியுள்ளார்கள். மற்றொன்று மனிதர்களுக்குள் ஒருவர் மற்றொருவரிடமிருந்து பெற்ற அமானிதங்கள். நாம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் போராடிப் பெற்று நமக்கு வழங்கியது என்ற வகையில் இந்திய விடுதலையும் இரண்டாவது அமானிதத்திற்குள் வருகிறது. ஆனால் நாமோ ஒருவரிடமிருந்துப் பெறும் பணம், நகை உள்ளிட்டவை மட்டுமே அமானிதங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
எப்படி பதவி ஓர் அமானிதம் என்று சொல்கிறோமோ அதைப் போன்றே இந்திய விடுதலையும் ஓர் அமானிதமாகும். அந்த அமானிதத்தை/பெற்ற சுதந்தித்தைப் பேணிக் காக்க நாம் முயல்கிறோமா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
விடுதலை  என்றால் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதை மட்டும் குறிப்பதாகாது. மாறாக, விடுதலையென்பது அறியாமையிலிருந்து விடுதலை, வறுமையிலிருந்து விடுதலை, அடக்குமுறையிலிருந்து விடுதலை, ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை, அதிகார வர்க்கத்திடமிருந்து விடுதலை, நீதி மறுக்கப்படும் அவலத்திலிருந்து விடுதலை என்று விளங்கினால் மட்டுமே விடுதலை என்னும் சொல் முழுமை பெறும்.
            இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட எவரும் தங்களது சுகபோகத்திற்காகப் பாடுபடவில்லை. விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று தனது செல்வத்தை, தனது குடும்பத்தை, தனது இன்னுயிரை நீர்த்தவர்களின் தியாகங்களுக்குப் பின்னால் நம் சந்ததிகளாவது அடிமைத்தளையிலிருந்து, அறியாமையிலிருந்து, வறுமையிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருந்தது.
            எண்ணற்ற முஸ்லிம்களின் தியாகத்தால் மலர்ந்த சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கிறது…? கல்விக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுக்கத் தவறியதால் அதிகாரம் சார்ந்த படிப்புகளிலும், பதவிகளிலும் நமது பிரதிநதித்துவத்தை இழந்து நிற்கிறோம். தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாவும் சித்தரிக்கப்பட்டு சிறைகளில் மட்டும் நம் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.   ஆளுக்கொரு கூட்டமாகப் பிரிந்து  அரசியலில் கவனம் செலுத்தத் தவறியதால் நாடாளுமன்ற உறுப்பினர்களிலும், சட்டமன்ற உறுப்பினர்களிலும் முஸ்லிம்களை தேடிக் கொண்டிருக்கிறோம். நமக்கான உரிமைகளையும், சலுகைகளையும் பயன்படுத்தத் தவறியதால் பொருளாதாரத்தில் பின்தங்கி வறுமையில் வாடுகிறோம். பெற்ற சுதந்திரத்தை அதிகார வர்க்கம் மட்டும் அனுபவிக்கக்கொடுத்துவிட்டு நாம் அடக்குமுறைக்கும், நீதி மறுக்கப்படும் நிலைக்கும் ஆளாகி வருகிறோம்.
            1947, ஆகஸ்ட் 15ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்ற இந்தியாவின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசும் போது பண்டித ஜவஹர்லால் நேரு When the world in deep sleep india is awaking என்று குறிப்பிட்டுப் பேசினார். அதாவது, உலகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிற போது இந்தியா கண் விழிக்கிறது என்றார். ஆனால் சுதந்திர இந்தியாவில் இன்னமும்கூட முஸ்லிம்கள் அறியாமை என்னும் ஆழ்ந்த உறக்கத்தில்தான் இருக்கிறார்கள்.
             சுதந்திரப் போராட்டத்தின்போது நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப் படைக்கு பல லட்சங்களை வாரி வழங்கிய தியாகி அமீர்; ஹம்ஸா வறுமையின் காரணமாக தனது மருத்துவச் செலவுகளைக்கூட கவனிக்க இயலாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி சமீபத்தில் மரணித்தார். இன்றைக்கு அவரது வாரிசுகள் கல்வி கற்கக்கூட வழியில்லாமல் நிற்கின்றனர். அரசின் எந்தவொரு உதவியும் அவருக்கு கடைசிவரை கிடைக்கவில்லை. முஸ்லிம்கள் அரசியலில் கவனம் செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்தால் அமீர் ஹம்ஸா போன்றோருக்கும், அவர்களது குடும்பத்திற்கும் கிடைக்கவேண்டிய குறைந்த பட்ச உதவியாவது கிடைத்திருக்கும். திப்பு சுல்தானின் வாரிசுகள் கொல்கத்தா வீதிகளில் ரிக் ஷா ஓட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள். முகலாய சாம்ராஜ்யத்தின் வாரிசுகள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டோரையும், சிறுபான்மையினரையும் எந்த இடத்தில் வைத்துப் பார்க்க நினைக்கிறார்களோ அந்த இடத்தில் நாமே நம்மை வைத்துள்ளோம் என்பதே கசப்பான உண்மை.
அடக்கு முறைக்கு ஆளாக்கப்படும்போதும் நீதி மறுக்கப்படும்போதும் நாம் தெருவில் நின்று கோஷமிடுவது ஜனநாயக முறையில் நமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக அமையுமே தவிர ஒருபோதும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. நீதி வழங்கும் இடத்தில் முஸ்லிம்கள் அமர்ந்தால் மட்டுமே பாராபட்சமற்ற நீதி சாத்தியமாகும் என்பதைப் புரிந்து என்றைக்கு நீதித்துறை, காவல்துறை போன்ற படிப்புகளிலும், பணிகளிலும் கவனம் செலுத்தப் போகிறோம் என்பன போன்ற கேள்விகளுக்கு இந்திய முஸ்லிம்களிடத்தில் இன்றுவரை பதில் இல்லை.
            இஸ்லாமிய வரலாறு, இஸ்லாம் அல்லாத வரலாறு என்ற பாகுபாடு இல்லாமல் வரலாற்றை பொதுவில் வைத்து அணுகி இந்திய வரலாற்றை நாம் படித்திருந்தால், பரப்பியிருந்தால் பொது வெளியில் நிலவும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துருவாக்கத்தைத் தடுத்திருக்க முடியும். நினைவுகூற வேண்டிய ஆளுமைகளையும் விஷயங்களையும் நினைவுகூறத் தவறிய தவறை நாம் செய்துவிட்டு வரலாற்றை மறைத்துவிட்டார்கள், திரித்துவிட்டார்கள் என்று பேசிக் கொண்டிருப்பது எந்தவிதத்திலும் ஏற்புடையதாகாது. இது நமக்கான சுதந்திரம், நாம் பயன்படுத்த வேண்டிய சுதந்திரம் என்ற எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் ஏற்பட வேண்டும். அரசியலிலும், கல்வியிலும், அதிகாரத்திலும், இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்தாதவரையில் மாற்றத்திற்கான அறிகுறிகள் இங்கே தென்படாது. ‘தன் சொந்த வரலாறு அறியாத சமூகம் வரலாறு படைக்கவே முடியாது’ என்ற மால்கம் எக்ஸின் பொன்மொழியை இங்கே நினைவு கூறவது பொருத்தமானதாக இருக்கும்.
சஹாபாக்களின் வாழ்வையும், தியாகத்தையும், போராட்டத்தையும் பற்றிப் பல மேடைகளிலும், பிரசங்களிலும் பேசி அவர்களின் வாழ்வையும், தியாகத்தையும் நினைவு கூறும் நாம் முஸ்லிம் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்வையும், தியாகத்தையும் நினைவு கூறாமைக்குக் காரணம் சஹாபாக்களின் வாழ்வை மார்க்க விஷயமாகவும், விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்வை உலக விஷயமாகவும் அணுகுவதேயாகும். முதலில் இந்த மனநிலை மாற வேண்டும். அதற்கு மேற்கூறப்பட்டது போல் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை மார்க்கத்தோடும், நபிகளாரின் வழிகாட்டுதலின்படியும் அணுக வேண்டும். அப்படி அணுகினால் மட்டுமே இந்திய விடுதலை ஓர் அமானிதம் என்பது விளங்கி அதனைப் பாதுகாக்க மனதளவில் தயாராவோம்.
அலி சகோதரர்களில் ஒருவரான மௌலானா முகமது அலி அவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவிற்குச் சென்ற போது தனது மறுமை வாழ்விற்காக மட்டும் பிரார்த்தனை செய்யவில்லை. ‘இறைவா… என் தாய் நாட்டிற்கு விடுதலையைத் தா… இந்திய முஸ்லிம்களுக்கு அமைதியான வாழ்வைத் தா…’ என்றும் பிரார்த்தித்தார்கள். அதுபோன்ற எத்தனையோ பிரார்த்தனைகளின் மூலமாகவும், நம் முன்னோர்களின் தியாகத்தினாலும் நமக்குக் கிடைத்த விடுதலையை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்ற கேள்வியையும் நாளை இறைவன் நம்மிடம் கேட்கலாம். அப்படிக் கேட்கப்பட்டால் நாம் என்ன பதிலைச் சொல்லிவிட முடியும்…?
-துபாயிலிருந்து ராபியா குமாரன்
மின்னஞ்சல்: rabiyakumaaran@ gmail.com
Mob: 00971 557541369

News

Read Previous

நிலவில் தண்ணீர் இருக்கிறது .. ஏராளமாய்!

Read Next

முதுகுளத்தூர் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

Leave a Reply

Your email address will not be published.