நிலவில் தண்ணீர் இருக்கிறது .. ஏராளமாய்!

Vinkmag ad

அறிவியல் கதிர்

நிலவில் தண்ணீர் இருக்கிறது .. ஏராளமாய்!
பேராசிரியர் கே. ராஜு

இந்தியாவுக்கு சில பெருமைகள் உண்டு. கணிதத்தில் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தது இந்தியர்கள். 1988ஆம் ஆண்டு தென்கொரியத் தலைநகர் சியோலில்  நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் நமக்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை. India gave the world zero.. Seoul gave it back to Indiaஎன நம்மைக் கிண்டல் செய்தார் ஒருவர். ரியோ டி ஜெனரோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளிலும் அந்த வரலாறு பெரிதும் மாறிவிடுவதற்கான அறிகுறிகள் இல்லை.  அதை விடுங்கள்.
2008ஆம் ஆண்டில் நாம் நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்-1 நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்து உலகிற்கு முதலில் அறிவிக்கும் பெருமை பெற்றது இந்தியா. 1960-களில் நிலவிலிருந்து கொணரப்பட்ட பாறைகளை வைத்து அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா  கூட நிலவில் கட்டாந்தரைகளே உள்ளதென்ற முடிவில் இருந்தது. நாம் அறிவித்த பிறகு தனது ஆய்வுகளைத் தொடர்ந்த நாசா நிலவில் நீர் இருப்பது உண்மைதான் என நமது கூற்றை உறுதி செய்தது.
நிலவின் மேற்பரப்பு காய்ந்திருந்தாலும் அதில் இருப்பதாகத் தோன்றும் அளவைவிட 10,000-த்திலிருந்து 10 மில்லியன் மடங்கு அதிகமாக உள்பகுதியில் நீர் இருக்கக்கூடும் என அண்மைக்காலங்களில் மேலும் மேம்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் செய்யப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிலவிலிருந்து அல்லது விண்கற்களிலிருந்து கொணரப்பட்ட பல்வேறு மாதிரிகளை இங்கிலாந்து நாட்டு திறந்தவெளிப் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் ஜெஸ்ஸிகா ஜேம்ஸ் தலைமையில் ஆய்வு செய்தனர். குறிப்பாக, நிலவில் தண்ணீர் உருவானதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விண் பாறைகளில் ஹைட்ரஜன், கன ஹைட்ரஜன் ஆகிய இரு வாயுக்கள் எந்த விகிதத்தில் உள்ளன என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினர். நிலவில் உள்ள ஹைட்ரஜன்-கன ஹைட்ரஜன் விகிதம் சில வகை சிறுகோள்களில் (asteroids) உள்ள விகிதத்தை ஒத்திருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.
450 கோடி வருடங்களுக்கு முன் பூமியும் செவ்வாய் அளவில் இருந்த ஒரு கிரகமும் மோதியதில் நிலவு பிறந்தது. அப்போது நிலவின் மீது நீர் நிறைந்த சிறுகோள்கள் மோதிக் கொண்டே இருந்தன. இந்த மோதல் ஓரிரு நாட்களுக்கு அல்ல, பல மில்லியன் வருடங்களுக்குத் தொடர்ந்தது. பெரும்பாலும் சிறுகோள்களிலிருந்தே நிலவுக்கு தண்ணீர் கிடைத்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர். 430-லிருந்து 450 கோடி வருடங்களுக்கு முன்னதாக நிலவில் உள்ள நீரில் 80 சதம் பல்வேறு சிறுகோள்களிலிருந்தே கிடைத்திருக்க வேண்டும் என்றும் வால்நட்நத்திரங்களிலிருந்து (comets) மீதி 20 சதம் வந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தோன்றிய புதிதில் நிலவின் மேற்பரப்பு பெரும் தீக்குழம்பாக இருந்தது. நிலவில் விழுந்த சிறுகோள்கள் இந்தக் குழம்பில் மூழ்கியிருக்க வேண்டும். சிறுகோள்களையும் வால்நட்சத்திரங்களையும் தவிர, நிலவு உருவானபோது ஆதிகால பூமியிலிருந்தும் அதற்கு நீர் கிடைத்திருக்கக் கூடும். பூமிக்கு தண்ணீர் கிடைத்தது கூட சிறுகோள்கள் மோதல் காரணமாகவே என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நிலவின் உள்ளே 1,000 ட்ரில்லியன் டன்கள் நீர் இருக்கக்கூடும் என்றும் ஹைட்ராக்சில் (OH) அயனிகள் வடிவில் கனிமப் பொருட்களுக்குள் அது 300, 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சிறைப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். மேற்பரப்பில் சூரிய ஒளியே படாத நிலவின் வட தென் துருவப் பகுதிகளில் உள்ள எரிமலைக் குழிகளுக்குள் (craters) 100 கோடி டன்கள் வரை நீர் உறைபனியாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஐரோப்பிய விண் ஆராய்ச்சி நிலையம், நாசா போன்ற விண்ஆராய்ச்சி நிறுவனங்கள் மனித எந்திரன்களை நிலவுக்கு அனுப்பி உறைபனி அளவைத் துல்லியமாகக் கணக்கிடும் முயற்சியில் இறங்கியுள்ளன. நிலவில் நீர் கிடைக்குமென்றால் ஆக்சிஜனை அதிலிருந்து உருவாக்கிக் கொள்ளவும் ஆய்வாளர்கள் எதிர்காலத்தில் முயலக் கூடும். (மனிதர்கள் வசிக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்தால் பூமியிலிருந்து முதலில் கிளம்புபவர்கள் ரியல் எஸ்டேட் வணிகர்களாகத்தான் இருப்பார்கள். பிளாட் போட்டு விற்றாக வேண்டுமே? ).
(ஆதாரம் : ட்ரீம் 2017 ஆகஸ்ட் இதழில் பிமன் பாசு எழுதிய கட்டுரை)

News

Read Previous

நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவனுக்கு எழுதிய கடிதம்

Read Next

இந்திய விடுதலை – ஓர் அமானிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *