பரோட்டா பயங்கரம்!

Vinkmag ad
பரோட்டா பயங்கரம்!
 
தர்மபுரியில் தமிழ் மண்ணே வணக்கம்

 

 

ல்லூரி மேடைகளின் வாயிலாக கருத்துகளைப் பரிமாறிவரும் நிகழ்ச்சி ‘தமிழ் மண்ணே வணக்கம்.’ தர்மபுரி ஜெயம் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் அண்டு டெக்னாலஜியில் அரங்கேறிய இந்த நிகழ்ச்சியில், ”நீங்கள் நல்ல பொறியாளர்களாகவோ அல்லது தொழிலதிபர்களாகவோ இந்தச் சமூகத்தில் தடம் பதிப்பதைத் தாண்டி, நல்ல அறம் சார்ந்த மனிதர்களாக வரவேண்டும். துறைசார்ந்த அறிவைத் தாண்டி, உங்கள் தொழில்நுட்பத்தின் மூலமாக உங்களை இந்த இடத்துக்குக் கொண்டுவந்த மண்ணுக்கு… 

கிராமத்து மக்களுக்கு… நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை உங்களுக்குள்ளே வரவேண்டும்” என்று பேச்சை ஆரம்பித்தார் மருத்துவர் கு.சிவராமன்.  

 

 

 தொடர்ந்து பேசிய அவர், ”இன்றைக்கு பல ஆயிரக்கணக்கான உணவுக்கூறுகள் நம்முடைய உணவில் கலந்துவிட்டன. 30 வயது இளைஞருக்கு சர்க்கரை நோய் வருவதற்கும்,  20 வயது பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் நம்முடைய கண்களுக்குத் தெரியாமல் உணவுகளில் கலந்துவிட்ட அந்த உணவுக்கூறுகள்தான் காரணம். ஆனால் இன்று என்ன நடக்கிறது? 

 

ஒரு கோழி வறுவலுக்கு 108 ரசாயனங்களைத் தெளிக்கிறார்கள். அந்த ரசாயனங்கள் அனைத்தும் நம்முடைய மக்களைத் தொற்றாத நோய்க்கூட்டத்தில் சிக்கவைக்கிறது. சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் பேசிய ஒரு பேராசிரியர்,

‘நம்முடைய அடுத்த தலைமுறையின் மரணத்தைக் கண்ணால் பார்க்கப்போகிற முதல் தலைமுறை நாம்தான்’ என்று எச்சரித்தார். இன்றைக்குப் பலருக்கு சிறுதானியங்களைப் பற்றியே தெரியாது. குதிரைவாலி, தினை அரிசி, கம்பு, கேழ்வரகு இவற்றின் முன்னால் நாம் ருசித்துக்கொண்டிருக்கும் பீட்ஸாவும், பர்கரும் நிற்கவே முடியாது. 

இன்றைய பெரும்பாலான பெண்களுக்கு ரத்தச்சோகை இருக்கிறது. அது கர்ப்பக்காலத்தில்தான் அவர்களுக்கே தெரியவருகிறது என்பது இன்னும் வேதனை. மாதவிடாய்க் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் ரத்தத்தை இழக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு இயல்பாகவே இரும்புச்சத்து அதிகம் தேவைப்படுகிறது. அந்த இரும்புச்சத்து முழுக்க முழுக்க நிரம்பியது நம்முடைய கம்பு. இப்படி ஒவ்வொரு சிறுதானியங்களிலும் பல சிறப்புகள் இருக்கின்றன. அதேபோலத்தான் நம் ஊரில் விளையும் வாழைப்பழத்துக்கு ஈடு உலகில் எங்காவது உண்டா? 

 

இரவு சாப்பிடக்கூடிய உணவான பரோட்டாவில், ‘அலாக்ஸான்’ என்ற பொருள் கலக்கப்பட்டிருக்கிறது. அந்த அலாக்ஸான், எலிகளுக்குச் செயற்கையாக சர்க்கரை நோயை வரவழைத்து சோதனை செய்வதற்காகப் பயன்படுத்தப்படுவது. 

 

நீங்கள்  பரோட்டா சாப்பிட்டால், நிச்சயம் உங்களை அல்லது உங்களது சந்ததியினரை சர்க்கரை நோய் தாக்கும். ஆக, இவையெல்லாம் நமது அடுத்த தலைமுறையினரையும், இந்த மண்ணையும் அழிப்பதற்கான முயற்சிகள். இதிலிருந்து மீள்வதற்கு நாம் நிச்சயம் சிறுதானியங்கள் பக்கம் திரும்பியாக வேண்டும்” என்று முடித்தார்.

 

 

 

‘நேற்றைய வரலாறு தெரியாதவனுக்கு இன்றைக்கு நடப்பது எதுவும் புரியாது. இன்றைய நிதர்சனம் புரியாதவனுக்கு நாளை பற்றிய சிந்தனை அறவே இருக்காது’

 

News

Read Previous

மறக்க முடியுமா …………….

Read Next

அருகம் புல்லின் பயன்கள்

Leave a Reply

Your email address will not be published.