முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா ?

Vinkmag ad

அரசு கல்லூரி மாணவர்களின் உயர்கல்வி சிக்கல்; நிரப்பப்படாத பேராசிரியர் பணியிடங்கள்

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அரசு கலைக்கல்லூரிகளில், பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் தானே படித்து தெரிந்துகொள்வதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கல்வித்தரம் பாதிக்கும் என்பதால் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பும் அரிதாகி, குறைந்த சம்பள வேலையே கிடைக்கும் அவலமும் உருவாகி இருக்கிறது. ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலையில் 1,700 மாணவர்கள் படிக்கின்றனர். 2007-08 முதல் சுழற்சி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் துறையில் 12க்கு 6, ஆங்கிலம் 11க்கு 9, கணிதம் 8க்கு 3, இயற்பியல் 10க்கு 3, வேதியியல் 9க்கு 6, தாவரவியல் 6க்கு 5, விலங்கியல் 4க்கு 2, பொருளியல் 10க்கு 3, வணிகவியல் 10க்கு 8 என 45 பேராசிரியர் பணியிடங்கள் நடப்பு கல்வியாண்டில் காலியாக இருந்தன.

ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர், கடலாடி அரசு கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் தொடர்ந்து காலியாக உள்ளன. இங்கு பயிலும் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் பாதித்து, உயர்கல்விக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு மாணவி எம்.சரிகா ஸ்ரீ: இக்கல்லூரியில் மூன்றாண்டுகளாக பல்வேறு துறைகளில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை போக்க துறை, பாட வாரியாக பேராசிரியர்கள் இன்றி சிரமம் அடைந்துள்ளோம். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இக்கல்லூரி ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு மாணவர் ஆர்.ராஜேஷ்குமார்: பேராசிரியர் காலிப் பணியிடங்களால், எங்களின் கல்வித்தரம், தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களால் பாடங்கள் நடத்தப்படுகின்றன. நிரந்தர பேராசிரியர்கள் நியமிக்க, கல்லூரி கல்வி இணை இயக்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கல்லூரி ஆசிரியர் மன்ற மாநில இணைச் செயலாளர் ஜி.பாரதி: மாவட்டத்திலுள்ள ஆறு அரசு கல்லூரிகளில், 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 1995ல் துவங்கிய அரசு மகளிர் கல்லூரி மற்றும் பரமக்குடி, நடப்பு கல்வி ஆண்டில் துவங்கிய திருவாடானை, முதுகுளத்தூர், கடலாடி அரசு கல்லூரிகளில் முதல்வர், தமிழ், ஆங்கிலம் பேராசிரியர்கள் தவிர, இதர பாடங்களுக்கு பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தேர்வு காலம் நெருங்கியபோதும், மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. கவுரவ விரிவுரையாளர்களுக்கு, மாதம் தோறும் முதல் வாரத்தில் சம்பளம் வழங்கப்படாததால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். பேராசிரியர் நியமனத்தின்போது, கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க, கல்லூரி கல்வி இயக்குனரகம் முன் வரவேண்டும், என்றார்.

News

Read Previous

துபாயில் தங்க மழை

Read Next

முதுகுளத்தூர் அருகே வாகனச் சோதனையில் ரூ. 1.75 லட்சம் பறிமுதல்

Leave a Reply

Your email address will not be published.