துபாயில் தங்க மழை

Vinkmag ad

 

துபாய் என்ற உடன் நம் பலரின் மனதில் தோன்றிடும் ஒன்று அங்கு எங்கு தோண்டினாலும் பெட்ரோலிய எண்ணை கிடைத்திடும்.  அதனால் அங்கு வேலைக்குச் சென்றால் பெட்டி பெட்டியாய்த் தங்கம் கொண்டு வரலாம் என்னும் எண்ணம்.

 

அங்கு சென்று பணி புரிவொரின் எண்ணங்கள் எ்ப்படி இருக்கும், அவர்கள் பட்டிடும் கஷ்டங்கள் என்ன என்ற எண்ணங்கள் ஒரு நாளும் நம் சிந்தனையில் வருவதில்லை.

 

1984லில் பம்பாய் விமான நிலையத்தில் அகமதாபாத் சென்றிடும் விமானத்திற்காக நான் காத்திருந்தேன்.  அப்போது என் பக்கத்து இருக்கையில் ஒரு 23 – 25 வயது இளைஞர் வந்து அமர்ந்தார்.  அவர் கையில் ஒரு சாதாரண துணிப் பை.

 

அவர் என்னைப் பார்த்து, “எங்கெ போறிங்க?” என்றார்.  என் முகத்தில் தமிழன் என்று எழுதி ஒட்டி இருந்தோ அல்லது வேறு மொழி எதுவும் அறியாததால் அப்படிக் கேட்டிருப்பாரோ?  எதுவானால் என்ன?  தமிழில் பதிலளித்தேன், “அகமதாபாத் செல்கிறேன்” என்று.

 

நான் கேட்டேன் அவரை, “நீங்க எங்கிருந்து வறீங்க?  எங்கெ போறீங்க?” என்று.

 

“அபுதாபீலேந்து வாறேன்.  அறந்தாங்கி போறேன்.”

 

“அபுதாபீலேந்து வறேன்னு சொல்லுறீங்க.  கையிலெ ஒண்ணும் பெரிசா கைப் பெட்டியோ, தோல் பையோ காணுமே.”

 

“அதெ ஏன் சார் கேக்குறீங்க.  ஒவ்வொரு வாட்டியும் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, கூடப் படிச்ச நண்பனுங்கன்னு ஒவ்வொருத்தருக்கும் எதுனா ஒரு சாமானு, செவனோ கிளாக்கு பிளேடுலேந்து சோப்பு, சீப்பு, கண்ணாடி, வாட்சு, தங்க மோதிரம், சங்கிலின்னு வாங்கிட்டு வருவேன் சார்.  ஆனா இங்கெ வந்து எறங்கினதும் சுங்க பரிசோதனெங்கெற பேருலெ பொட்டீலெ இருக்குற சாமானுங்களெ அவனவனும் எடுத்து வெச்சிக்கறானுங்க பிச்சக் காரப் பசங்க.”

 

“அப்பிடியா சொல்றீங்க?”

 

“ஆமாம் சார்.  அதான் இந்த வாட்டி என் துணியெத் தவிற வேறெ ஒண்ணும் கொண்டு வரெலெ சார்.  என்ன ஒண்ணு ஊருக்குப் போனதும் என் பொட்டியெத் தொறந்து பாக்குற என் அண்ணன் தம்பி அக்கா தங்கச்சிங்களுக்கு தான் ஏமாத்தமா இருக்கும்.  நம்ம ஊருக்கு வந்தப்புறம் என்ன வெலெ ஒசந்த பொருளு வாங்கிக் குடுத்தாலும் அங்கேருந்து கொண்டு வர சுண்டைக்கா சோப்புக்கு இணையாத் தோணாது சார் அவுங்க மனசுலெ.”

 

“ஊருக்கு மாசா மாசம் பணம் அனுப்பறது உண்டா?”

 

“எனக்கு மாசம் கிட்டத் தட்ட எட்டாயிரம் வரும் சார்.  அதுலெ ஆறாயிரம் ஊருக்கு அனுப்சூடுவேன்.  ரெண்டாயிரத்துலெ என் பாட்டெ நான் பாத்துப்பேன் சார்.”

 

“தம்பி என்ன வேலெ பாக்குறே நீ?”

 

“ஒரு ஆபீசுலெ லஸ்கரா இருக்கேன் சார்.”

 

“இன்னமே யாருனா ஒன்னெ என்னெ வேலெ பாக்குறேன்னு கேட்டா லஸ்கரா இருக்கேன்னு சொல்லாதெ.  ஆபீசு அசிஸ்டென்டா இருக்கென்னு சொல்லு.  நான் இங்கெ ஒர் பெரிய கம்பெனிலெ ஒரு பிரிவுக்கு மேலாளரா இருக்கேன்.  என் சம்பளம் ஆராயிரந்தான்.”

 

அப்போது என் விமானத்தில் ஏறிட அழைப்பு வந்தது.  நான் எழுந்திருந்தேன்.  உடனே அந்த இளைஞன் தன் பையுள் கையை விட்டு ஒரு வாசனை சோப்பினை எடுத்து என் கையில் கொடுத்த், “சார் இதெ அன் அன்பளிப்பா வெச்சுக்கோங்க சார்” என்றான்.

 

“தம்பீ நீயே வெச்சுக்கோ அதெ.  இன்னும் சென்னை விமான் நிலையம் வேறெ இருக்கு ஒனக்கு” என்றபடி நகர்ந்தேன்.  அவன் முகத்தில் அன்று நான் கண்ட பாசமும் நேசமும் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் அவனை மறந்திடாமல் இருக்கச் செய்கிறது.

 

(படம் அன்பர் பாலாஜீ பாஸ்கரின் மடலில் இருந்து)

 

நடராஜன் கல்பட்டு                                          14-03-2014

 

 

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்…….http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

 

 

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

 

வேறொன் றறியேன் பராபரமே

News

Read Previous

ஷார்ஜா மற்றும் அஜ்மான் பகுதிகளில் தமிழ் தொலைக்காட்சி சேவை பெற ….

Read Next

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா ?

Leave a Reply

Your email address will not be published.