வெறிநாய்க்கடி நோய்க்கு தடுப்பு மருந்து

Vinkmag ad

அறிவியல் கதிர்

வெறிநாய்க்கடி நோய்க்கு தடுப்பு மருந்து
பேராசிரியர் கே. ராஜு

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ரேபீஸ் நோய்க்கு (வெறிநாய்க்கடியால் வருவது) 20,000 மக்கள் பலியாகின்றனர். இந்த நோய்க்கு உலகில் பலியாவோரில் இது மூன்றில் ஒரு பங்கு. பத்தாண்டுகளாக இந்த எண்ணிக்கை அநேகமாக மாறாமல் இருக்கிறது.  அறிவிக்கத்தகு நோய்களில் இது இடம் பெறவில்லை என்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருக்கக் கூடும்.
“வெறிநாய் கடித்துவிட்டால் மரணம் நூறு சதம் நிச்சயம்.. ஆனால் மரணத்தைத் தடுப்பதும் 100 சதம் சாத்தியம் தான்” என்கிறார் பெங்களூருவில் உள்ள உளவியல் நலன் மற்றும் நரம்பியல் நோய்களுக்கான நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரீட்டா சுப்பிரமணியம் மாணி.
பெரும்பாலான மரணங்களைத் தடுக்க முடியாமல் போவதற்குக் காரணம், குறித்த நேரத்தில் நோயாளிகளுக்கு நாய்க்கடி நோய்த் தடுப்பூசி கிட்டாமல் போவதுதான். இந்தத் தடுப்பூசியை ஒரு தடவை போட்டுக்கொண்டால் போதாது, ஐந்து தடவை போட்டுக்கொள்ள வேண்டும். அப்படி தேவையான தடவை தடுப்புமருந்தை எடுத்துக் கொள்வோர் அநேகமாகக் கிடையாது. வெறிநாய் கடித்த இடத்தில் ரேபீஸ் இம்முனோகுளோபின் எதிர்மருந்து ஊசியை உடனே போட்டுக் கொள்ளும் வாய்ப்பு பலருக்குக் கிடைப்பதில்லை. இந்தியாவில் இந்த மருந்துக்கு எப்போதுமே பற்றாக்குறை தான். ரேபீஸ் நோய் தாக்கியபிறகு உயிர் பிழைக்க இயலாது என்ற நிலை 2010ஆம் ஆண்டு வரை இருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் ஆறு நோயாளிகள் மரணத்திலிருந்து தப்பித்துள்ளனர். உலகம் முழுதும் எடுத்துக் கொண்டாலும் இதுவரை 15 நோயாளிகளே மரணத்திலிருந்து தப்பித்துள்ளனர்.
குதிரையிலிருந்து தயாரிக்கப்படும் eRIG தடுப்பு மருந்தைத் தயாரிக்க அதிக காலம் ஆகும் என்பதால் அதை தேவையான அளவுக்குத் தயாரிக்க முடிவதில்லை. இந்த மருந்துக்கு பக்க விளைவுகள் இருப்பதாலும் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. மனிதர்களிலிருந்து தயாரிக்கப்படும் hRIG தடுப்பு மருந்து பாதுகாப்பானது.. ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை. இறக்குமதி செய்யப்படும் இம்மருந்து விலை மிகுந்தது (சுமார் ரூ. 20,000). கடி வாங்குவோர் எல்லாம் அநேகமாக ஏழை எளிய மக்கள் என்பதால் அவர்களுக்கு இந்த விலை கட்டுபடியாகாது.
இந்தப் பின்னணியில், புனேயிலுள்ள செரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள தடுப்பு மருந்து முக்கியத்துவம் பெறுகிறது. அது வேகமாகச் செயல்படக் கூடியது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் பலியாகும் நூற்றுக்கணக்கான ரேபீஸ் மரணங்களைத் தடுப்பதில் முக்கியப் பங்கினை அது ஆற்ற முடியும்.  ரேபிஷீல்ட் (Rabishield) என்ற இம்மருந்தை சந்தைக்குக் கொண்டுசெல்ல அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதிக அளவில் ரேபிஷீல்ட் மருந்தைத் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொணர ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ரேபிஷீல்ட் மருந்தின் விலை hRIG மருந்தின் விலையில் 10-லிருந்து 15 சதம் மட்டுமே இருக்கும்.  வெறிநாய் கடித்த இடத்தில் உள்ள காயத்தில் உள்ள கிருமியை இம்முனோகுளோபின் அழிக்கிறது.. அதன் மூலம்  கிருமியை நரம்பு மண்டலத்தில் சேரவிடாமல்  தடுக்கிறது.  நாய்க்கடி ஆழமாக இருப்பின், காயத்தின் எல்லாப் பகுதிகளையும் தடுப்பு மருந்து சேர்ந்தடைவது கடினம். அதனால் இம்முனோகுளோபின் தடுப்பு மருந்தினை 0-3-7-14-28 வது நாட்களில் செலுத்துவது அவசியம் என்கிறார் பேராசிரியர் ரீட்டா சுப்பிரமணியம் மாணி.
காயத்தில் ரத்தப் போக்கு அதிகமாக இருந்தால், கடிபட்ட இடத்தை குழாயிலிருந்து கொட்டும் தண்ணீரில் 10-15 நிமிடங்கள் வைத்து நன்கு கழுவிவிட வேண்டும். இதுவே 50-லிருந்து 70 சதக் கிருமிகளை அகற்றிவிடும். இது மிக முக்கியம். அதே சமயம், காயத்தில் மஞ்சளையோ சுண்ணாம்பையோ வைப்பது கூடாது. அது காயத்தைக் கிளறி கிருமிகள் நரம்பு மண்டலத்தினுள் நுழையவே வழிவகுக்கும்.

(உதவிய கட்டுரை 2016 ஆகஸ்ட் 7 ஆங்கில இந்து நாளிதழில் ஆர். பிரசாத் எழுதியது).

இதில் நமக்கு சில கேள்விகள் உள்ளன. வெறிநாய்க் கடிக்கு வேகமாகச் செயல்படக் கூடிய, விலை மலிவான புதிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியடையலாம். ஆனால் அந்த மருந்து பரவலாக அனைத்து மருத்துவமனைகளிலும் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் உத்தரவாதப்படுத்துமா? மருத்துவமனைகளில் பல்வேறு மருந்துகளின் இருப்பு பற்றி இதுவரை நமக்கு உள்ள அனுபவங்கள் நம்பிக்கை தருவதாக இல்லை.
இது ஒரு புறம் இருக்க தெருநாய்களைப் பற்றியே ஒரு விவாதம் ஊடகங்களில் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் நாய்கள் இப்படி சுதந்திரமாக தெருக்களில் சுற்ற அனுமதிப்பதில்லை. வீடுகளில் வளர்க்கும் நாய்கள், காவல் துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் மோப்ப நாய்கள் ஆகிய இருவித நாய்களே அங்கெல்லாம் அனுமதிக்கப்படுகின்றன.
பிரியமாக வளர்ப்போர் வீடுகளில் செல்ல நாய்கள் இருப்பதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது. காவல் துறையில் மோப்ப நாய்கள் இருப்பது புலனாய்வுக்குத் தேவையான ஒன்றாகவே ஆகிவிடுகிறது. மற்றபடி தெருக்களில் உணவுக்கு அலையும்படி நாய்களைப் பரிதாபமான நிலையில் வைத்திருப்பது தேவைதானா என்று யோசிக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். அண்மையில் கேரளாவில் வீட்டுக்கு வெளியே படுத்திருந்த முதியவர் ஒருவரை சில நாய்கள் கடித்துக் குதறியதில் அவர் உயிரையே இழக்க நேர்ந்தது. கேரள அரசுக்கும் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கும் இடையே தெருநாய்கள் பராமரிப்பு தொடர்பாக ஒரு சர்ச்சை நடந்து வருகிறது. நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி அவற்றை தெருவில் அலையாமல் வைத்திருக்க வழி ஏதும் உண்டா.. இரவில் வீடு திரும்புவோருக்கு நாய்கள் விரட்டும் தொல்லையிலிருந்தும் வெறிநாய்க்கடிக்கு ஆளாகும் ஆபத்திலிருந்தும் விடுதலை உண்டா என்ற பல கேள்விகளுக்கு நாம் விடை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. மனித உயிர் முக்கியமா, தெருநாய்களின் சுதந்திரம் முக்கியமா என்ற கேள்விக்கு விடையாக அது இருக்கட்டும்.

News

Read Previous

தீபாவளிக்குறும்பாக்கள்

Read Next

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா……???

Leave a Reply

Your email address will not be published.