புற்றுநோய் மரணங்களுக்கு காரணம்தான் என்ன?

Vinkmag ad

புற்றுநோய் மரணங்களுக்கு காரணம்தான் என்ன?     

புகைப்பழக்கமா? தொழிற்சாலை கழிவுகளா?

பெயரளவுக்கு கடைபிடிக்கிற தினங்களில் ஒன்றாகவே பார்க்கப்படும் உலக சுகாதார நிறுவனம் (WHO) 1887ல் அறிவித்த உத்தரவுகளில் ஒன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்… நாடெங்கும் பேரணிகள், விழிப்புணர்வு கூட்டங்கள் நடக்கும். பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளை வறுத்தெடுத்து பல பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மத்திய மாநில அரசுகளே இதற்கான செவினங்களையும் ஏற்றுக் கொள்ளும். இந்த நிதிகளை பங்கிட்டு வழிநடத்த அரசின் கீழ் பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் செயல்படும். எல்லாமே ஒருவித கண்துடைப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால் உலகம் முழுவதும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவே புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி. உலக சுகாதார நிறுவனம் (WHO) எடுத்த சர்வேயில்தான் இந்த அதிர்ச்சி தகவல். அநேக மக்களின் மரணங்களுக்கும் காலனும் இதுவே என்கிறது அந்த ஆய்வறிக்கை. எய்ட்ஸ், காசநோய், வாகன விபத்து ஆகியவற்றில் ஏற்படும் மரணங்களை விட புகைப்பழக்கத்தால் ஏற்படும் மரணங்களே அதிகமாம்.

உலக அளவில் ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் மரணம் அடைகிறார்கள் என்றால் அதில் 10 லட்சம் பேர் இந்தியர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும். புகையிலைப்பழக்கதால் வாய்ப்புற்று நோய் ஏற்பட்டு மரணமடைந்தவர்களின் இந்தியர்களே முதலிடம். ஒவ்வொரு 8 வினாடிக்கு ஒருவர் மரணமடைகிறார். வாய், நுரையீரல், சிறுநீரகம், மார்பகம் என படிப்படியாக பாதிக்கப்பட்டு புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத்தன்மை, மலட்டுத்தன்மை போன்ற எண்ணற்ற நோய்கள் உயிரைக் கொல்கின்றன.

இந்தியாவைப்பொறுத்தவரை 40 சதவீத மரணங்கள் புகையிலை பழக்கம் வாயிலாகவே நேரிடுகிறது. இந்த விவரங்கள் எல்லாம் தெரியாமல் மக்கள் புகையிலைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றை தவிர்ப்பதை விட்டு தொழிற்சாலை கழிவுகள், மாசுகள் மட்டுமே காரணம் என்றிருக்கிறார்கள். உண்மையில் தொழிற்சாலைகளின் கழிவுகள் வாயிலாக புற்றுநோயால் இறந்ததாக இதுவரை எந்த ஆய்வறிக்கையும் தெளிவுற வெளிவரவில்லை என்பதே நிதர்சனம்.

அப்படியென்றால் அந்த தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களுக்குத் தானே முதலில் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரவேண்டும். தொழிற்சாலை சார்பில் ஏற்படுத்தப்பட்ட குடியிருப்புகளில்தானே அவர்களும் குடும்பம் குடும்பமாக குழந்தை குட்டிகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஏன் புற்றுநோய் வரவில்லை? என்ற கேள்விகள் வியப்பின் விளிம்பில் நடுநிலையாளர்களை நிறுத்துகின்றன. அப்படியான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை என்பதாக அல்ல இந்த கட்டுரையின் வாதம். இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களுக்கு, முறையே 56 சதவீதம் மற்றும் 44 சதவீதம் புகையிலை காரணமாக இருக்கிறது என்கிறது புள்ளிவிவரம். இதனை யார் தெளிவு படுத்துவது?

அப்படியானால் தொழில்நகரங்களில் புற்றுநோய் அதிகம் பரவுகிறது என்றால் அந்த தொழிற்சாலைகள்தானே காரணமாக இருக்க முடியும் என்று பலர் வாதிடலாம். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாமே தவிர அதுமட்டுமே காரணமாக அமைந்துவிடாது. தொழில்நகரங்களை பொறுத்தவரை அந்த நகரைச்சார்ந்து அடிப்படை கூலித்தொழிலாளிகள், ஊழியர் குடும்பங்கள் என குடியிருப்புகள் தாறுமாறான எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளுக்காக பெருகிவிடும். லட்சக்கணக்கான எண்ணிக்கையில் தினக்கூலி, மாத ஊதிய நபர்கள் அந்த நகரில் வாழும் பட்சத்தில் இவர்களில் பெரும்பாலானோருக்கு புகைப்பழக்கம் என்பது சிறுவயது முதலே தொடர்ந்து வரும் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது.

பலவருட புகைப்பழக்கம் நாளடைவில் அவரது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி புற்றுநோய்க்கு அடிகோலிடும். தன் வாழ்நாளை அந்த தொழில்நகரிலேயே கழிக்க நேரிடும் அந்த தொழிலாளர்கள் இறுதியில் மரணத்தை தழுவுவது பெரும்பாலும் புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட புகைப்பழக்க காரணிகளால்தான். தொழிற்சாலைகளின் கழிவுகளால், மாசுக்களால் மட்டுமே என்று கூறுவது சாத்தியமற்றது. அதற்காக தொழிற்சாலைக்கழிவுகளும், மாசுக்களும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று வாதிடுவதற்கில்லை. புகைப்பழக்கத்தை விட அபாயகரமானது வேறு எதுவுமில்லை என்பதே இக்கட்டுரை வழங்கும் செய்தி.

சமீபத்தில் கூட தென்மாவட்டங்களில் சர்ச்சைக்குள்ளான ஒரு தொழிற்சாலை போராட்டங்கள் செய்தி வடிவில் வெளிவந்தன. போராட்டம் உச்சக்கட்டத்திற்கு சென்று துப்பாக்கி சூடு வரை நிகழ்ந்தது. அந்த போராட்டத்தின் அடிப்படை சித்தாந்தம் என்பது சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் காற்றுமாசு காரணமாக புற்றுநோய் ஏற்படுகிறது என்பதுதான். ஆனால் அதுமட்டுமே காரணமா? என்பதுதான் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கும் கேள்வி.

அந்த பகுதியில் மக்கள் தொகை அடிப்படையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் நேர்முக, மறைமுக ஊழியர்கள், கூலித்தொழிலாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் எவ்வளவு சதவீதம் புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் என்ற புள்ளி விவரம் எடுக்கப்பட்டுள்ளதா? அவர்கள் எத்தனை வருடங்களாக இந்த பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள்? என்ற விவரம் தொகுக்கப்பட்டுள்ளதா? புற்றுநோய்க்கு தொடர்புரிய மற்ற தொழில்கள் அந்த பகுதியில் மேற்கொள்ளப்படுகிறதா? என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என்பது போன்ற எல்லா கேள்விகளுக்குமே பதில் இல்லை.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் 5 லட்சத்து 50 ஆயிரம் பீடி சுற்றும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த விவரம் யுனிசெப் நிறுவனத்தால் அளிக்கப்பட்ட ஆதாரம். போராட்டம் நடந்த தூத்துக்குடி மாவட்டத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அங்குள்ள மக்கள் தொகை 17,50,176 பேர். இதில் தொழிற்சாலை பணியாளர்கள் என்று கணக்கிட்டால் பல்வேறு நிலைகளில் 7,48,095 பேர். விவசாயிகள் விவரம் இதில் தனி.

தூத்துக்குடி மாவட்டத்தில் அப்படி என்னவெல்லாம் தொழிற்சாலைகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன என்றால், உப்பளத்தொழில், ஸ்பிக் ஆலை, ஆல்கலைன் தொழிற்சாலைகள், ஸின்கோரியம் தொழிற்சாலைகள், கெமிக்கல் ஆலைகள், தாமிர ஆலை, தாதுமணல் எனப்படும் மினரல் ஆலைகள், டைட்டானியம் தொழிற்சாலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், சமையல் எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள், பீடி கம்பெனிகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், அனல் மின்நிலையம், என பல உள்ளன. இதனால்தான் தமிழ்நாட்டின் தொழில்நகரங்களில் தூத்துக்குடியும் பிரதான இடத்தை பிடித்துள்ளது. இங்குள்ள உப்பள தொழிற்சாலைகளால் மட்டும் தமிழ்நாட்டின் 70 சதவீத தேவையையும், இந்தியாவின் 30 சதவீத தேவையையும் ஈடு செய்ய முடிகிறது என்றால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். நிலம் மாசடைவதற்கும், நிலத்தடிநீர் மோசமாவதற்கும் உப்பளங்கள் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது இதுவரை வெளியரங்கமாகாத உண்மை. அது தனி விவாதமும் கூட.

புற்றுநோயின் அடிப்படை புகைப்பழக்கமே என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படவில்லை என்பதையே இந்த போராட்டக்களம் உணர்த்திய பேருண்மை. இதிலும் புகைப்பழக்கத்தின் அடிப்படையான பீடித்தொழில் வேரூன்றி உள்ள இந்த தென்மாவட்டங்களில் புற்றுநோய்க்கான காரணிகளை வீட்டிலேயே வைத்துக் கொண்டு வெளியில் தேடுவது பத்தாம்பசலித் தனமானது என்பது நடுநிலையாளர்களின் வாதம். இதேநிலைதான் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ள மாவட்டங்கள், சாயப்பட்டறை நிறைந்துள்ள மாவட்டங்கள் என பாகுபாடின்றி தமிழ்நாடு முழுவதும் நீடித்து வருகிறது.

அறிவியல் உண்மைகளோடு மக்களை விழிப்புணர்வு அடையச்செய்வது நாட்டை ஆள்பவர்களின் கையில்தான் உள்ளது. ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டால் சரி.

——————————

(கடையத்தான்)

News

Read Previous

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Read Next

ஹஜ் யாத்ரீகர்களின் சவூதி வருகை இமிக்ரேஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *