உலக ஆஸ்துமா தினம்: இந்தியாவில் 3 கோடி பேர் பாதிப்பு

Vinkmag ad

இந்தியாவில் 3 கோடி பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குணசிங் தெரிவித்தார்.

உலக ஆஸ்துமா தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து,  கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெஞ்சக நோய் பிரிவு சார்பில் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மனிதச் சங்கிலியைத் தொடங்கி வைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குணசிங் பேசியது: இருமல், மூச்சுத் திணறல், மூச்சுவிடும்போது விசில் போன்ற சப்தம் வருவது போன்றவை ஆஸ்துமா நோயின் அறிகுறியாகும். சில நோயாளிகளுக்கு மார்பில் இறுக்கம், அடிக்கடி ஜலதோசம் மற்றும் தும்மல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த அறிகுறிகள் தூசி, புகை ஆகியவற்றால் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

உலகம் முழுவதும் 30 கோடி பேரும், இந்தியாவில் 3 கோடி பேரும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு, மேல் தட்டு உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் போதிய உடற்பயிற்சி இன்மையால் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக நகரங்களில் வாழும் குழந்தைகளில் 10 சதவிகிதம் பேர் ஆஸ்துமாவினால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்துமா நோயாளிகள் சரியான அளவில் மருந்துகளை உள்கொள்ள வேண்டும். அத்துடன் உடற்பயிற்சி செய்வதும் அவசியம் என்றார்.

நிகழ்ச்சியில் நெஞ்சக நோய் பிரிவு மருத்துவர்கள் முத்துக்குமார், ஜோசப், துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சமூக மருந்தியல் துறைத் தலைவர் டாக்டர் சுரேஷ்பாலன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

News

Read Previous

சுவர் இடிந்து விழுந்து 7 ஆடுகள் பலி

Read Next

காய் காய் புடலங்காய் ​

Leave a Reply

Your email address will not be published.