மதுப்பழக்கம்—மருத்துவர்களின் பார்வையில்

Vinkmag ad
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒருவர் தனது சுவரில் இப்படி எழுதியிருந்தார்.‘முன்னாடியெல்லாம் பாண்டிச்சேரின்னா, ‘கிர்ர்ர்’ருன்னு இருக்கும். இப்போ அந்தப் பேரைக் கேட்டாலே, ‘கொர்ர்’ன்னு இருக்கு. தமிழ்நாடுன்னு சொன்னால்தான் இப்பல்லாம் ‘விர்ர்’ன்னு இருக்கு’ – இந்தக் கருத்தில் நையாண்டி இருக்கலாம். ஆனால், இதற்குப் பின்னே உள்ள வேதனையை குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களால்தான் உணர முடியும்.

 

இந்நாள் முதல்வர்  கடந்த தனது ஆட்சியில் டாஸ்மாக்கைக் கொண்டு வந்தபோது, அவரே அது இந்த அளவுக்குப் பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்போது ஆண்டுக்கு கிட்டதட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தருகிறது டாஸ்மாக். இந்த வருமானம், அரசாள்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், டாஸ்மாக் கடைகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைக் கேட்டால், கண்களில் ஓரம் நீர்த்துளிகளே வெளிப்படும். கோடிக்கணக்கில் அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக்தான் லட்சக் கணக்கானவர்களின் உடல்நலனைப் பாதித்து, அவர்களை நம்பியிருக்கும் குடும்பங்களை நடுவீதியில் நிறுத்தியிருக்கிறது. அதுவும் முப்பது வயதுக்குள்ளேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு, கணையம் செயலிழப்பு, பக்கவாதம், கிட்னி ஃபெயிலியர் என்று மீள முடியா பெருந்துயரங்களுக்கு ஆளாகி, வைத்தியத்துக்கு செலவு செய்ய வழியற்ற நிலையில் இறந்து போகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியும், சோகமும் கலந்த உண்மை. முப்பது வயதுக்குள் மேற்கண்ட பாதிப்புகள் மிகவும் அரிதாக நடக்கக் கூடியவைதான். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இந்தப் பாதிப்புகளின் சதவீதம் அதிகரித்து வருவதாகக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த கார்டியாலஜிஸ்ட் ஒருவர்.

 

கண்ணனுக்கு 27 வயது. சேலம்தான் சோந்த ஊர். இரண்டு ஆண்டுகளாக பொருத்தமான பெண்ணைத் தேடியலைந்து, அபிராமியை நிச்சயம் செய்துவைத்தார்கள். திருமணத்திற்கு முதல் நாள் நண்பர்கள் ரொம்ப வற்புறுத்தியதால், ‘பார்ட்டி’ வைத்தார். மதுபான பார்ட்டி களை கட்டியபோது, திடீரென்று கண்ணனுக்குத் தாங்க முடியாத வயிற்று வலி. விடிந்தால் கல்யாணம், என்ன செய்வது? ‘எப்படியோ சமாளி, தாலி கட்டியபிறகு டாக்டரிடம் காட்டிக் கொள்ளலாம்’ என்று நெருங்கியவர்கள் அட்வைஸ் செய்ய, திருமணம் முடிந்த கையோடு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். எல்லா பரிசோதனைகளையும் செய்து பார்த்த டாக்டர்கள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துப்போகச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்டான்லியில் தீவிர சிகிச்சை தரப்பட்டது. நான்கைந்து அறுவைச் சிகிச்சைகளும் நடந்தன. இருந்தாலும் எந்தப் பலனும் இல்லை. கண்ணனைக் காப்பாற்ற முடியவில்லை.

 

இந்தச் சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றைக்கும் கண்ணனுக்கு ட்ரீட்மெண்ட் செய்த அந்த டாக்டரின்  நினைவுகளில் பெரும் சோகமாகத் தங்கியிருக்கிறது அந்த சம்பவம்..”அவருக்கு வந்த பிரச்சினை, அக்யூட் பேங்க்ரியாடிடிஸ் (acute pancreatitis). ரெகுலராக அவருக்கு குடிப்பழக்கம் இல்லை. முதன்முறையாக அன்றுதான் குடிக்கிறார். இந்த அக்யூட் பேங்க்ரியாடிடிஸ் முதன்முறையாகக் குடிப்பவர்கள் பலருக்கு வரும் பிரச்சினை. கண்ணனுடன் ஒரு வார்த்தை கூட பேசியிராத, முகத்தைச் சரியாகப் பார்க்கக்கூட அவகாசம் வாய்க்காத அந்தப் பெண், அன்று மருத்துவமனையில் கண்ணில் பட்ட டாக்டரை எல்லாம் பார்த்து ‘எப்படியாவது காப்பாத்துங்க’  கைகளைக் கூப்பி கெஞ்சியதுதான் இன்னும் என் நினைவுகளில் இருந்து நீங்காமல் தங்கியிருக்கிறது. ஒரே நாளில் எல்லாம் முடிந்து விட்டது” என்கிறார் அந்த டாக்டர்  பெருமூச்சுடன்.


ஆண்டுதோறும் மதுகுடிப்பவர்களின் சதவீதம் அதிகரித்து வருவதாகக் கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். கூடவே மதுப்பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்படுபவர்களின் சதவீதமும் ஆண்டுதோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரு டாஸ்மாக் கடைக்குப் போய்ப்பார்த்தால் ஜேஜே என்று திரண்டிருக்கும் கூட்டத்தில் 20, 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கூட்டம்தான் 60 சதவீதம் இருக்கும். “இதில் இன்னொரு அதிர்ச்சியான தகவலும் உண்டு. இத்தகைய மதுப்பழக்கம் உள்ள இளைஞர்களில் நன்கு படித்து, பன்னாட்டு நிறுவனங்களில் கை நிறைய சம்பாதிக்கும் இளைஞர்களும் உண்டு. பொதுவாக, பரம்பரை நோய் என்று கூறப்படும் நீரிழிவு போன்ற நோய்கள் இன்று லைஃப் ஸ்டைல் நோய்களாக மாறியுள்ள நிலையில், உடல் உழைப்பு இல்லாத டெட்லைன், டார்கெட் போன்ற நெருக்கடிகளில் பணிபுரியும் இவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். இந்த நிலையில் இவர்கள் மதுப்பழக்கத்தையும் தொடரும்போது கல்லீரல் பாதிப்பு, கணையம் செயலிழத்தல், கிட்னி சார்ந்த பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்ற அதிர்ச்சித்தகவலைத் தருகிறார்கள் மருத்துவர்கள்.

“கடந்த சில ஆண்டுகளாகக் குடிப்பழக்கத்தால் இளைஞர்களின் உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான்” என்று கூறும் டாக்டர்கள்  குடிப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல், கணையம் பாதிப்பு என்று அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக தற்போது உயர்ந்துள்ளதாகக் கூறுகிறார்.

மேலும் அதுபற்றிக் கூறும்போது, “1969லிருந்து 77வரை இதே கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பை நாங்கள் முடித்த காலத்தில் இது  போன்ற பாதிப்புகள் பற்றி எல்லாம் புத்தகத்தில் மட்டுமே படித்திருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் பார்த்ததில்லை.


ரொம்ப அபூர்வமாக வட இந்தியாவில் இதுபோன்ற பாதிப்புகள் இருக்கும். அப்படி இருந்தாலும் இவர்களின் இறப்பு சதவீதம் வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும். ஆனால், தற்போது தமிழக மருத்துவமனைகளிலேயே  சர்வ சாதாரணமாக தினமும் நோயாளிகள் வருவதைப் பார்க்கலாம். தற்போது இறப்பு விகிதம் 70 சதவீதம். அதிலும் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் மிக அதிகம். ஐ.டி., மென்பொருள் போன்றவற்றில் வேலை பார்ப்பவர்களுக்கு கல்லீரல், கணையப் பாதிப்பு இன்று சர்வ சாதாரணம். மது குடிப்பது மேற்கத்திய நாடுகளில் கலாசாரத்தோடு இணைந்தது என்பதால் அங்கு பாதிப்புகளும் அதிகமாக இருந்தன. இன்று வரையும் நவீன மருத்துவத்தில் ஜெர்மனி நாட்டில் அளிக்கப்படும் சிகிச்சை முறையைத்தான் இங்கும் அளிக்கிறோம். இங்கு ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல வேண்டும்… ஒரு முறை கொச்சியில் நடந்த சர்வதேச மருத்துவ மாநாட்டில் ஜெர்மனி டாக்டர்கள் கலந்துகொண்டார்கள். மேற்கத்திய நாடுகளில் தற்போது வியக்கத்தகும் விதமாக மக்களிடம் மதுப்பழக்கம் குறைந்திருப்பதாகக் கூறினார்கள். ஆனால், நம் நிலையோ அதற்கு நேரேதிராக உள்ளது” என்று வேதனையுடன் கூறுகிறார்கள் நம்மூர் மருத்துவர்கள்.


“எப்போதாவது குடிக்கிறேன். வாரத்தில் ஒருநாள்தான் குடிப்பேன். பார்ட்டியில மட்டும்தான் குடிப்பேன். அளவான மதுப்பழக்கம் உடலுக்கு நல்லது’ போன்ற எல்லா காரணங்களும்  நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானங்கள்தானே தவிர, அதில் உண்மையில்லை. ஒரு சொட்டு விஷமாய் இருந்தால் என்ன? ஒரு குடமாய் இருந்தால் என்ன? விஷம் விஷம்தான். பீர் மட்டும்தான் குடிப்பேன் என்றும் சிலர் சொல்கிறார்கள். மதுவின் பெயர்கள்தான் வேறு வேறானவையே தவிர, அதனால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் ஒரே ரகமானவையே.


“குடிப்பழக்கம் உள்ளவர்களில் 20 சதவீதம் பேர் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இது உடல் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, மனம் சார்ந்ததும்கூட. கல்லூரி மாணவன் ஒருவன், தற்போது எங்கள் மையத்தில் தொடர் சிகிச்சையில் இருக்கிறான். 20 வயதான அவன், நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தவன், கொஞ்ச நாட்களிலேயே மதுவுக்கு அடிமையாகி விட்டான். குடும்ப கவுரவம் போய்விடுமே என்று பயந்தவர்கள் முதலில் வீட்டில் வைத்து, ‘இது தப்பு’ என்று சொல்லி திருத்தப் பார்த்திருக்கிறார்கள். யாருமே இல்லாத சமயத்தில் அமைதியாக இருப்பவன், வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போது, பயங்கரக் கலாட்டா செய்வது, மிரட்டுவது, குடிப்பதற்கு பணம் தராவிட்டால் விருந்தினர்களுக்கு தருவதற்கு எடுத்துச் செல்லும் தேநீரைப் பிடுங்கி, எதிர்பாராத நேரத்தில் அவர்கள் மீது கொட்டுவது என்று அவன் செயல்பாடுகள் மிக மோசமாக இருக்க… இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். தொடர்ந்து சிகிச்சை தருகிறோம்” என்கிறார் ஒரு மருத்துவர்.

“குடிக்கு அடிமையாகி, சிகிச்சைக்குச் சேர்க்கப்படுபவர்கள்  முற்றிலும் மதுவை நிறுத்தவேண்டும்..அதன் பிறகு , தொடர்ந்து பல  நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே ஓரளவு உடல் நிலை தேறும். ஆனால், அதே நேரம் ஒருமுறை கணையத்தில் பிரச்சினை வந்தால், தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். அதன் பிறகு மதுவையே தொடாவிட்டாலும் சிகிச்சையும் தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பும் தேவை. கணையம் பாதிப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க அவருக்கு  ஆகும் செலவு பல  லட்சங்கள்”

 

“கடந்த 20 ஆண்டுகளில் ஆண்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் குடிப்பழக்கம் அதிர்ச்சியளிக்கும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. 

 

மதுப்பழக்கமுள்ளோர் வயது விகிதம்
50+ வயதினர் = 18%
15 – 20 வயதினர் = 10%
30 – 50 வயதினர் = 37%
20 – 30 வயதினர் = 35%

உடலைக் கெடுத்து, குடும்பத்தையும், நாசப்படுத்தும் மது தேவைதானா? யோசியுங்கள் மதுப்பிரியர்களே!
Dr. தமிழ் 

News

Read Previous

அச்சுறுத்தும் டெங்கு! என்ன செய்யலாம், எப்படித் தப்பிக்கலாம்?

Read Next

பைத்துல்மால் வ‌ழிகாட்டி

Leave a Reply

Your email address will not be published.