கிராமப்புற இந்தியாவில் சுகாதாரக் கட்டமைப்பு

Vinkmag ad

அறிவியல் கதிர்

கிராமப்புற இந்தியாவில் சுகாதாரக் கட்டமைப்பு
பேராசிரியர் கே. ராஜு

கிராமப்புறங்களில் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை வலுவாக ஏற்படுத்தத் தவறியதன் காரணமாக போலி டாக்டர்கள், பேயோட்டுபவர்கள், மந்திரம் ஜெபித்து நோயைக் குணப்படுத்துவேன் என்பவர்கள் அங்கே மலிந்து காணப்படுவது தற்செயலானதல்ல. சத்தீஸ்கர் மாநில பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள ஓர் அரசு சாரா நிறுவனம் மக்கள் உடல்நலன் தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய வரைபடங்களின் உதவியுடன் கிராமப்புற நிலையை தெளிவாக்குகிறது. கிராமப்புற மக்களின் வாழ்நிலையை அடிப்படையாக வைத்து அந்நிறுவனம் 50 கதைகளைத் தயாரித்திருக்கிறது. அக்கதைகளின் துணையுடன் மரணங்களுக்கு மருத்துவக் காரணங்களைக் காட்டிலும் சமூக, பொருளாதாரக் காரணங்களே அடிப்படையாக இருக்கின்றன என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
அப்படித் தயாரிக்கப்படும் வரைபடங்களில் பாம்புக்கடி மரணங்கள் தொடர்பான ஹெல்த் இந்தியா என்ற வரைபடம் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. அகனி பாய் என்பவரின் மகன் டால் சிங்கை ஒரு பாம்பு கடித்துவிடுகிறது. ஒரு தாவர வேரைத் தண்ணீருடன் கலந்து தயாரிக்கப்பட்ட கஷாயத்தை அவனுக்குக் கொடுக்கின்றனர். பாம்பின் விஷத்தை முறிக்கும் மூலிகை மருந்தாக அதை பைகா பழங்குடியினர் கருதுகின்றனர். அடுத்து டால் சிங்கிற்கு உள்ளூர் மருத்துவர்  உப்புத் தண்ணீரைக் கொடுக்கிறார். அடுத்த 24 மணி நேரத்தில் டால் சிங்கின் உடல் மஞ்சள் நிறமாகிறது.. விரல்கள் வீங்கிப் போகின்றன. மரித்துப் போகிறான். இது ஒரு உண்மைக்கதை. கிராமப்புறங்களில் மக்கள் பாம்புக்கடிக்கு ஆளாவது இரவு நேரங்களில். அந்த நேரத்தில் அருகில் உள்ள நகரத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல போக்குவரத்து வசதி கிடைப்பதில்லை. அப்படி மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லுமுன் முதலுதவியாக பாம்பு கடித்த இடத்தை மரத்துப் போக வைத்துவிட வேண்டும் என ஹெல்த் இந்தியா பரிந்துரைக்கிறது.
பிலாஸ்பூர் மாவட்டத்தில் செயல்படும் ஜேஎஸ்எஸ் என்ற அமைப்பு பல ஆண்டுகளாக இப்படிப்பட்ட உண்மைக் கதைகளைச் சேகரித்து                    An Atlas of Rural health: Chronicles from Central India என்ற ஆவணப் புத்தகத்தைத் தயாரித்திருக்கிறது. “இந்தப் புத்தகம் சத்தீஸ்கரைப் பற்றியது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது. இந்தியா முழுதும் உள்ள கிராமங்களின் நிலைமை இதுதான். மரணத்திற்கு இட்டுச் செல்லும் சமூக, பொருளாதாரக் காரணங்களைக் கண்டுபிடிக்க புத்தகம் முயற்சி செய்திருக்கிறது” என்கிறார் ஜேஎஸ்எஸ்ஸின் நிறுவனரும் செயலாளருமான டாக்டர் யோகேஷ் ஜெயின்.
மரணத்திற்கான முக்கியமான 10 காரணங்களில் ஒன்றாக பாம்புக்கடி இருக்கிறது என்கிறது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 46,000 பேர்கள் பாம்பு கடித்து இறக்கின்றனர். இந்த மரணங்களில் 97 சதம் கிராமப்புறங்களில் நடப்பவைதான். அதனால் இது ஊடகங்களால் ஒரு செய்தியாகவே பார்க்கப்படுவதில்லை. “தகவல், கல்வி, தகவல் தொடர்பு ஆகிய மூன்றுமே பொதுவாக நகரை மையமாகக் கொண்டு பார்க்கப்படுபவை. கிராமங்களின் நிலை மையநீரோட்டத்திற்கு வருவதில்லை. ஆனால் மேலே கூறப்பட்ட ஆவணப் புத்தகம் ஏழை எளிய மக்களுடனும் ஒதுக்கப்பட்ட பகுதியினருடனும் இணைந்து பணிபுரிபவர்களால் தயாரிக்கப்பட்டது. அறிவியலையும் சிக்கலான நோய்களையும் அது எளிமையான மொழியில் விளக்குகிறது. கிராமப்புறங்களில் உள்ள சுகாதார ஊழியர்கள் பயன்படுத்தும் கையேடாக அது இருக்கும்”  என்கிறார் புனேயில் உள்ள ஒரு பெண்கள் அமைப்பைச் சேர்ந்த மனிஷா குப்தே.
ஆவணப் புத்தகத்தின் மற்றொரு பிரிவு பொதுவாக வரக்கூடிய நோய்களை அறிவியல்பூர்வமாகத் தெரிந்துகொண்டு   சரியான முடிவுகள் எடுக்க உதவும் வகையில் எளிமையான மொழியில் விளக்கங்களை அளிக்கிறது. ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் எதிர்ப்புசக்தியின் காரணமாக ஒரு கட்டத்தில் செயல்படாமல் போய்விடக்கூடிய சூழலையும் எடுத்துச் சொல்கிறது.  நோய்களை வரைபடமாகக் காண்பிப்பது மட்டுமல்ல, மாநிலவாரியாக இருக்கக்கூடிய மாறுபட்ட சுகாதாரக் கட்டமைப்புகள், அவற்றின் காரணமாக உருவாகும் சமத்துவமின்மை ஆகியவற்றையும் வரைபடம் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக்குகிறது. வளம் குறைவான மாநிலங்கள் நோய்களின் சுமையை அதிகமாகச் சுமக்க நேரிடுகிறது என்பதை வரைபடங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக, சத்தீஸ்கர் உள்ளிட்ட கிழக்கே உள்ள மாநிலங்கள் நாட்டின் மற்ற பகுதிகளைவிட மலேரியாவினால் பாதிக்கப்பட்டிருப்பதை மலேரியா வரைபடம் காண்பிக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பிரசவகாலத்தில் பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் வடகிழக்கு மாநிலங்கள் இன்னமும் மிக மோசமான நிலையிலேயே இருப்பதை அது குறித்த வரைபடத்திலிருந்து தெரிந்துகொள்ள முடியும்.
இந்தியாவில் உள்ள மக்கள் உடல்நலன் குறித்த காட்சியைப் புதிய கோணத்தில் பார்க்க ஆவணப் புத்தகம் வழிகாட்டுகிறது. பொதுமக்களின் உடல்நலன் என்பதைவிட தனியார்மயம், அரசு-தனியார்மயக் கூட்டு போன்ற நடைமுறைகள் பரவலாக இருக்கும் ஒரு காலகட்டத்தில் நாட்டின் உண்மையான நிலையைப் படம் பிடித்துக் காட்ட வந்துள்ளது இந்த ஆவணப் புத்தகம்.
(நன்றி : 2017 பிப்ரவரி 12 ஆங்கில இந்துவில் ஜோத்ஸ்னா சிங் எழுதிய கட்டுரை)

News

Read Previous

வலி

Read Next

எங்களுக்கு ……..

Leave a Reply

Your email address will not be published.