எக்காலத்துக்குமான ஃப்ளூ தடுப்பு மருந்து

Vinkmag ad

அறிவியல் கதிர்

எக்காலத்துக்குமான ஃப்ளூ தடுப்பு மருந்து
பேராசிரியர் கே. ராஜு

ஃப்ளூ என பொதுவாக அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்சா என்ற சுவாசக் கோளாறினால் ஏற்படும் பாதிப்பு இன்ஃப்ளூயன்சா கிருமிகளால் உருவாகிறது. உலகம் முழுதும் ஒவ்வோர் ஆண்டும் 30-லிருந்து 50 லட்சம் பேர்கள் வரை இந்த நோய்க்கு ஆளாகி,  2,50,000-லிருந்து 5,50,000 பேர்கள் வரை பலியாகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். சமீப காலம் வரை ஃப்ளூ தடுப்பூசிகள் மூலம் கிருமிகளிலிருந்து பாதுகாப்பை நாடுவது ஒன்றே சிறந்த வழி எனக் கருதப்பட்டு வந்தது. ஆனால்  தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் உடல்நலனையும் வயதையும் பொருத்தே ஃப்ளூ தடுப்பு மருந்து ஒவ்வோர் ஆண்டும் செயல்படக் கூடியது என அமெரிக்காவிலுள்ள நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன.   தடுப்பு மருந்து செயல்படக்கூடிய நிலையில் உள்ளதா அல்லது செயலிழந்துவிட்டதா என்பது முக்கியம். இந்தத் தடுப்பூசிகள் பருவகால தடுப்பூசிகள் (seasonal vaccines) என அழைக்கப்படுகின்றன. தடுப்பு மருந்து பயன்பாட்டில் இருக்கும்போதே ஃப்ளூ கிருமியை எதிர்த்துப் போராடும் எதிர்ப்பொருட்களின் (antibodies) குணங்கள் சற்றே மாறிவிடுகின்றன. இப்படி கிருமியின் மரபணுத் தன்மை சற்று மாறுபாடு அடைவதே தடுப்பு மருந்து செயலிழந்துவிடுவதற்கான முக்கியக் காரணம். அனைத்து விதமான ஃப்ளூ கிருமிகளுக்கும் எதிராக திறனுடன் போராடி பாதுகாப்பு தரும் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய தடுப்பு மருந்தைக் (universal vaccine) கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் சிறிது காலமாகவே முயன்று வருகின்றனர். உலகம் முழுதும் எளிதில் பரவும் தன்மை கொண்ட ஃப்ளூ நோயிலிருந்து மனிதகுலம் விடுதலை அடைய வேண்டும் என்பதே அவர்களது இலக்கு. கனடாவில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம், இரண்டு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சர்வதேச ஆய்வாளர்கள் குழு தற்போது அப்படிப்பட்ட தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் இலக்கை நெருங்கியுள்ளனர். ஒரே ஒரு முறை அந்த மருந்தை எடுத்துக் கொண்டாலே நோயிலிருந்து வாழ்நாள் முழுதும் பாதுகாப்பு தரக்கூடிய தடுப்பூசியாக அது இருக்கும்.  உலகம் முழுதும் பரவி லட்சக்கணக்கானோரை பலிவாங்கும் நோயிலிருந்து மனிதர்களை அது விடுவிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற நல்ல செய்தியை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மூன்று நான்கு விதமான ஃப்ளூ கிருமிகளுக்கெதிராக பாதுகாப்பளிக்கும் பருவகால ஃப்ளூ தடுப்பூசிகள், உடலில் மருந்தைச் செலுத்திய இரு வாரங்களுக்குப் பிறகு உடலில் எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்து கிருமிகளை அழித்து நம்மைக் காப்பாற்றுபவை. இந்த எதிர்ப்பொருட்கள் கிருமியோடு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு அது செல்களில் பரவி தொற்று ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தும் வேலையைச் செய்கின்றன. எக்காலத்துக்கும் பொருந்தும் தடுப்பூசிகளும் இதே அடிப்படையில்தான் வேலை செய்கின்றன. அதே சமயம், அவை தொற்றினால் பாதிப்படைந்த  செல்களை அழிக்க வெள்ளை ரத்த அணுக்களையும் பயன்படுத்துகின்றன என்பதே செயல்பாட்டில் உள்ள வித்தியாசம்.
கனடா, அமெரிக்க ஆய்வாளர்கள் ஃப்ளூ கிருமிகளில் மிகவும் ஆபத்தானவற்றை செயலற்றவையாக ஆக்கும் திறனுடைய புதிய எதிர்ப்பொருட்களை ஏற்கனவே உருவாக்கியிருந்தனர். அந்த எதிர்ப்பொருட்கள் ஒவ்வோர் ஆண்டும் தாக்கும் கிருமிகளில் மாற்றமடையாமல் இருக்கும் பகுதியைக் கண்டுபிடிக்கக்கூடியவை. அது வாழ்நாள் முழுதும் பாதுகாப்பைத் தரக்கூடிய தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் இலக்கிற்கு ஆய்வாளர்களை இட்டுச் சென்றது. ஃப்ளூ கிருமி மாற்றமடையும்போது மாற்றமடையாத பகுதியை எப்போதும் அடையாளம் காண முடிந்த காரணத்தினாலேயே இந்த வெற்றியை அவர்கள் அடைய முடிந்தது.
“தற்போது எதிர்ப்பொருட்கள் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்ட இடங்கள் நமக்குத் தெரிந்துவிட்டதால், அந்த எதிர்ப்பொருட்கள் இன்னும் கூடுதலாக உற்பத்தியாகும் விதத்தில் தடுப்பூசிகளை நாம் மாற்றியமைக்க முடியும். இந்த தகவலைப் பயன்படுத்தி, மிகவும் தேவையான எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்யவும் நாம் விரும்பும் செயல்பாடுளைத் தடுக்கும் எதிர்ப்பொருட்களைத் தவிர்க்கவும் உதவும் வகையில் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய தடுப்பு மருந்தை வடிவமைக்க முடியும். அப்படி செய்யும்போது அந்தத் தடுப்பூசி மிகவும் திறனுடன் செயல்படுவதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடியும்” என்கிறார் மேற்கண்ட ஆய்வுக் குழுவைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி மாத்யூ மில்லர்.
        (உதவிய கட்டுரை : 2016 டிசம்பர் ட்ரீம் 2017 இதழில் பிமன் பாசு எழுதியது)

News

Read Previous

முதுகுளத்தூர், கமுதி பகுதிகளில் விலையில்லா சைக்கிள் வழங்கல்

Read Next

திருநெல்வேலிக்காரன் என்பதில் எனக்கும் பெருமையே

Leave a Reply

Your email address will not be published.