விவசாய தண்ணீர் பற்றாக்குறைக்கு இப்படியும் சுலபமான தீர்வு!

Vinkmag ad

விவசாய தண்ணீர் பற்றாக்குறைக்கு இப்படியும் சுலபமான தீர்வு!

வறண்ட பகுதிகளில் அதிகம் மூங்கில் மரங்களை நடும் நண்பர் ஒருவர் இருக்கிறார். நாங்கள் எல்லாரும் அவரை விநோதமாக பார்ப்போம், “ஏங்க குடிக்கிறதுக்கே தண்ணீ இல்லாம, அவனவன் கஷ்டப்படுறான்… நீங்க என்னான்னா… மரமா நட்டுக்கிட்டு இருக்கீங்க… அதுக்கு யாருங்க தண்ணீர் ஊத்துறது….?” என்று கேள்வி எழுப்பினால், சிரிச்சுக்கிடே… “நாம என்ன இயற்கையை சுரண்டவா செய்யுறோம்… மரம் நடுவோம்… மிச்சதெல்லாம் இயற்கை பார்த்துக்கும்” என்பார்.

நாங்கள் எல்லாம், என்ன இவ்வளவு முட்டாள் தனமாக இருக்கிறாரே என்று ஆதங்கப்படுவோம். ஆனால், அவர் தோட்டத்தில் மட்டும் மூங்கில் மரங்கள் எல்லாம், செழிப்பாக வளரும்.  அவரிடம் ஒரு நாள், “எப்படிங்க மரமெல்லாம் இப்படி வளர்ந்து இருக்கு…?…. உங்க தோட்டத்துல போர்வெல்லும் இல்ல… மழையும் பெய்யல… பிறகு, நீங்க எப்படி தண்ணீர் பாய்ச்சுனீங்க…? என்ன அற்புதத்தை நிகழ்த்துனீங்க…” என்று கேட்டே விட்டேன்…

ஆழ்ந்த மெளனத்திற்கு பிறகு…. சீடனுக்கு அரிய புதிருக்கான விடையை சொல்லப்போகும் ஒரு குருவின் தோரணையில் பேச்சை துவங்கினார், “ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்… பூமிக்கு அடியில் இருக்கும் எந்த ஆற்றலும் நமக்கு இல்லை… இது புரியாமல், நாம் அளவிற்கு அதிகமாக அந்த புதுப்பிக்க இயலாத ஆற்றலை சுரண்டுகிறோம்… ஒரு நாள் தண்ணீர், பெட்ரோல் எல்லாம் வற்றி போகும், அப்போது நாம் என்ன செய்யப்போகிறோம்…? இது ஏதோ… எதார்தத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கும் ஒரு இயற்கை காதலனின் பேச்சல்ல… படிம எரிபொருட்களை நுகர்வதுதான், புவிவெப்பமாயதலுக்கு காரணம்… அதை உலக நாடுகள் படிப்படியாக குறைத்து கொள்ள வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபையே உலக நாடுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது… இது தண்ணீருக்கும் பொருந்தும் என்று நம்புகிறேன்… ஆழ்துளை கிணறுகள் போட்டு எல்லா தண்ணீரையும் உறிஞ்சி விட்டால், நம் குழந்தைகள் தண்ணீருக்கு என்ன செய்யும்…? நீர் இல்லாமல் உங்கள் குழந்தைகள் மாண்டு விழுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா…?” என்றார்.

புரிகிறது. ஆனால், நான் உங்களிடம், உங்கள் தோட்டத்து மூங்கில்கள் எப்படி இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்று தான் கேட்டேன்….?, என்றேன்.

“ஆம். ஆனால், நாம் புதுப்பிக்க இயலாத ஆற்றல்களை எப்படி சுரண்டுகிறோம். அதனால், ஏற்படும் பாதிப்புகளை நீங்கள் புரிந்து கொள்ளாமல், என் தோட்டத்து மூங்கில்கள் எப்படி வளர்ந்தது என்று புரிந்து கொள்ள முடியாது…” என்று சொன்னவர், “சரி… உங்கள் கேள்விக்கான விடையை சொல்கிறேன்… “என்று தீர்வை சொல்ல துவங்கினார்…

“நீங்கள் மரம் நட்டவுடன்… அதன் பக்கத்தில் ஓரடியில் குழி தோண்டுங்கள்… அந்த குழியில் முதலில் கரியைப்போடுங்கள்… பின்பு அதற்கு மேல் சிறிய கற்களைப்போட்டு அந்த குழியை மூடுங்கள்…”

நீங்கள் மூடாக்கு போடும் முறையை சொல்கிறீர்கள்…?

“ஆம். அதுதான். நம் பகுதியில் அதிகம் பனிப்பெய்கிறது அல்லவா…. நிலத்தில் விழும் பனியை, இந்த கரி தேக்கி வைத்துக் கொள்ளும். கரிக்கு அந்த தன்மை உண்டு. அருகில் உள்ள மரங்களுக்கு அந்த கரி தன்னகத்தே தேக்கி வைத்துள்ள நீரை தரும்…

மிக எளிமையாக அல்லவா இருக்கிறது….?

ஆம். அதனால்தான் நாம் அதை உதாசீனப்படுத்துகிறோம்.

அவரிடம் நடந்த இந்த உரையாடலை, கட்டுரையாக தட்டச்சு செய்யும்

போது, நண்பர் சரவணன் ஒரு வீடியோவை அனுப்பினார்…

அந்த வீடியோவும், இது போன்ற ஒரு எளிய தீர்வைதான் முன்  மொழிகிறது. வலை அமைப்பு உள்ள ஒரு நீண்ட துணியை தோட்டத்தில் கட்ட வேண்டும்… பனி அந்த துணியில் விழுந்து, நீராக மாறி அடியில் உள்ள குழாய் மூலமாக தோட்டத்தில் பாயும்.

அந்த வீடியோ கீழே….

 

-மு. நியாஸ் அகமது

 
 

https://youtu.be/h8vlzZ25vtg

News

Read Previous

நதியிலாடும் நிலவு

Read Next

முதுகுளத்தூரில் 1068 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

Leave a Reply

Your email address will not be published.