மத்திய அரசுக்குப் பிடிக்காத திட்டம்

Vinkmag ad

மத்திய அரசுக்குப் பிடிக்காத திட்டம்

 

2005-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இடதுசாரிகளின் ஆதரவுடன் பதவியில் இருந்தபொழுது இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தால் கொண்டுவரப்பட்ட முக்கியமான திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம். பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருந்த பொழுதும் பின்னர் 2014-ம் ஆண்டு பதவியேற்ற பொழுதும் இந்த திட்டத்தை ஆதரித்தது இல்லை. இந்த திட்டத்திற்கு நிதி அதிகம் வேண்டும் என கோரிய பொழுது “முந்தைய அரசாங்கத்தின் மிகப்பெரிய தோல்வியின் அடை யாளமாக மட்டுமே இது தொடரும்” என மோடி கூறினார். அதாவது இந்தத் திட்டம் தேவையற்றது என்பது மோடி அரசாங்கத்தின் நிலை! எனவே தொடர்ந்து இந்தத் திட்டத்திற்குத் தரப்பட்ட முக்கியத்துவமும் நிதியும் குறைக்கப்பட்டே வந்தது.

 

கோவிட் 19 காலத்தில் 15 கோடிக்கும் அதிகமான உழைப்பாளிகள் வேலை இழந்துள்ளனர். கோவிட் பிரச்சனை எப்பொ ழுது முடியும் என்பதோ அல்லது வேலை இழந்த உழைப்பாளிகள் பலருக்கு எப்பொழுது மீண்டும் வேலை கிடைக்கும் என்பதோ எவருக்கும் தெரியாது. இந்த சூழலில் ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புறங்களில் தொடர வேண்டும் என்பது மட்டுமல்ல; இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பணி நாட்களும் ஊதியமும் அதிகரிக்க வேண்டும் எனவும் இந்தத் திட்டம் நகர்ப்புறங்களிலும் அமலாக்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரி வருகின்றனர். இதற்காக விவசாய சங்கங்களும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் தேசம் முழு தும் பல இயக்கங்களை நடத்தி வருகின்றன. இந்த வலுவான இயக்கங்களுக்குப் பின்னர்தான் மோடி அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்க முன்வந்தது. ஆனால் தேவையை ஒப்பிடும்பொழுது இது மிக குறைவுதான்.

குறிப்பாக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கிராமங்களுக்குத் திரும்பியுள்ள சமயத்தில் இந்த திட்டத்தின் தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளது. 25000 மற்றும் அதற்கு அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பிய 116 மாவட்டங்களில் சென்ற ஆண்டு மே மாதம் 48.22 லட்சம் குடும்பங்கள் இந்த திட்டத்தை நாடினர் எனில், இந்த ஆண்டு மே மாதம் 89.23 லட்சம் குடும்பங்கள் இந்த திட்டத்தை நாடியுள்ளனர். இது 86.27%  உயர்வு ஆகும்.

 

இந்த ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு ரூ 65,000 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் முந்தைய பாக்கி ரூ.11,500 கோடி ஆகும். எனவே உண்மையான ஒதுக்கீடு சுமார் 50,000 கோடி மட்டுமே. ஊரடங்குக்குப் பின்னர் கடுமையான விமர்சனம் கார ணமாக மேலும் 40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் கூட போதாது என சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ரூ.1,50,000 முதல் ரூ.1,90,000 கோடி ஒதுக்கீடு செய்தால்தான் கிராமப்புறங்களில் உள்ள வேலை இழந்த பெரும்பான்மையினருக்கு வேலையும் ஓரளவு நிவாரணமும் கிடைக்கும். மேலும் இதனை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.

எந்தத் திட்டம் அகற்றப்பட வேண்டும் என மோடி கூறினாரோ அந்த திட்டம்தான் இன்று மிக முக்கியத் தேவையாக மாறி உள்ளது. நவீன தாராளமயப் பொருளாதார கோணத்தில் இருந்து இந்த பிரச்சினையை அணுக முடியாது என்பதை கோவிட்19 பெருந்தொற்று தெளிவாக்கியுள்ளது.

(-ஜூலை 1 தீக்கதிர் நாளிதழில் அ. அன்வர் உசேன் எழுதிய கட்டுரையிலிருந்து)

News

Read Previous

வீடுகளில் மரம் மாத்திரமல்ல… அறமும் வளர்ப்போம்

Read Next

மேன்மக்கள்…

Leave a Reply

Your email address will not be published.