ஊடகச்சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்

Vinkmag ad

ஊடகச்சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்

 

தற்போதைய மத்திய அரசின் கீழ் ஊடகச்சுதந்திரம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருகிறது. ஊடகங்களை அரசின் ஊதுகுழலாக மாற்றும் இழிமுயற்சிக்கு இணங்காமல்  மக்களின் கண்ணோட்டத்திலிருந்து அரசை விமர்சிக்கின்ற ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது பொய்வழக்கு பதிவது, ஒளிபரப்பை நிறுத்துவது, கைது செய்வது, சிறைப்படுத்துவது, விளம்பரங்களை மறுப்பது உள்ளிட்ட போன்ற அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.. அரசையும் ஆளுங்கட்சியையும் விமர்சிக்கும் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தேசவிரோத சக்திகள், அர்பன் நக்சல்கள், அன்னிய கைக்கூலிகள், நடுநிலை தவறியவர்கள் என்று  இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பொதுவெளியில் பரப்பி வருகின்றனர். ஊடக விவாதங்கள் அனைத்திலும் தங்கள் தரப்பை இடம்பெறச் செய்யவேண்டும் என்று மிரட்டுவதும், விவாதப் பொருள் குறித்த அடிப்படையறிவுகூட இல்லாத பலரை நானாவிதப் பெயர்களில் உள்ளே நுழைப்பதும், விவாதங்களில் நெறியாள்பவர்களையும் கருத்தாளர்களையும் கண்ணியமற்ற முறையில் வசைபாடுவதுமாக இவர்களது அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக உலகளாவிய ஊடகச்சுதந்திரம் குறித்தான அட்டவணையில் இந்தியா 142ஆவது இடத்தைப் பெற்று கீழிறங்கியுள்ளது.

தமிழகத்தில் பெண் ஊடகவியலாளர்களை, கருத்தாளர்களை பாலினரீதியாக சிறுமைப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. இப்போது நியூஸ் 18 தொலைக் காட்சியில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீது புகார் ஒன்று அந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் ஏராளமான பொய்களும் தகவல் பிழைகளும் இருக்கின்றன.. அதில் பெரியாரிய அம்பேத்கரிய, மார்க்சிய கருத்தியல்கள் மீதான வெறுப்பு மலிந்துள்ளது. தங்களை விமர்சிக்கிற யாரும் பணியில் தொடர முடியாது என அச்சுறுத்த இந்தப் பொய்ப்புகாரை இறக்கியுள்ளவர்களுக்கு தமுஎகச தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துகொள்கிறது. இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக கண்டனம் எழுப்புமாறு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரையும் தமுஎகச கேட்டுகொள்கிறது. இந்த அடாவடி கும்பல் மீது சட்டரீதியான நடவடிக்கை  எடுத்து ஊடகச்சுதந்திரத்தை பாதுகாக்கும் அரசியல் சாசனக் கடமையை நிறைவேற்றுமாறு தமிழக அரசை தமுஎகச வற்புறுத்துகிறது.

-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்

 

News

Read Previous

கொரோனா துதி

Read Next

கோடை கால வகுப்புகள்

Leave a Reply

Your email address will not be published.