மொழிபெயர்ப்புக்கு முதன்முதலாக  விருதுகளை வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்

Vinkmag ad

     

மொழிபெயர்ப்புக்கு முதன்முதலாக விருதுகளை

      வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்
    தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை ந.அருள் புகழாரம்

    சென்னையில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதியன்று எழுத்தாளரும் புரவலருமான நல்லி குப்புசாமியின் மூன்று
நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் ‘திசை எட்டும்’ மொழியாக்க விருதுகள் வழங்கும் விழாவும் ராஜா அண்ணாமலை
புரத்திலுள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அரங்கில் நடைபெற்றது.

     இவ்விழாவிற்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை ந.அருள் தலைமையேற்றதோடு, நூல்களை வெளியிட்டும்,
மொழியாக்க விருதுகளை வழங்கியும் தலைமையுரையாற்றினார். அவர் பேசியதாவது: “நாடறிந்த பெருந்தகையும்,
நல்லவர் நெஞ்சிலெல்லாம் புகழ் மணக்க வாழும் பட்டு வணிகத் திலகமாகவும்,  இசை ,நாடகம் ,ஆடல் ,ஆவணம் ,
மொழியாக்கம் ,தேசியம் , தெய்விகம் ,பாரதியம் , உடல்நலம் ,வணிக நுணுக்கம் முதலிய துறைகளில் தோய்ந்த
பெருமிதம் கொண்டவருமாக விளங்குபவர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி.


     உள்ளத்தில் பட்டதை, உண்மை என்றுணர்ந்ததை உலகுக்கு ஏற்றம் தரும் கருத்துக்களை, சிந்தனைக்குரிய
செய்திகளைத் தொகுத்து, நம் உள்ளம் தொட்டுப் பேசும் பரிவுமிக்க எழுத்துக்குச் சொந்தக்காரராகவும்
இருக்கும் நல்லி குப்புசாமி எழுதிய இரு நூல்களையும், அவரைப் பற்றி ஆர்.நடராஜன் எழுதிய நூலொன்றையும்
 வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறேன். 

     ‘திசை எட்டும்’ காலாண்டு இதழ் சார்பில் 2023-ஆம் ஆண்டிற்கான மொழியாக்க விருதுகள் 7 மொழிபெயர்ப்பாளர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது. தமிழில் மொழிபெயர்ப்பு பற்றி பொதுவெளியில் கவனம் இல்லாத காலமொன்று இருந்தது.
ஒருமுறை ‘திசை எட்டும்’ மொழியாக்க காலாண்டு இதழ் குறித்து பத்திரிகை ஒன்றில் ஒரு குறிப்பு வெளியானது. அதைப்
படித்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, உடனே அதுவரை வெளியான ‘திசை எட்டும்’ இதழ்கள் மொத்தத்தையும்
வாங்கி வரச் சொல்லிப் படித்தார். 

      கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி எனும் சிறிய ஊரில் இருந்து, மொழியாக்கத்திற்காக இப்படியொரு இதழா என்று
வியந்துபோனதோடு, மொழிபெயர்ப்பாளரும் ‘திசை எட்டும்’ இதழின் ஆசிரியருமான குறிஞ்சி வேலனையும் அழைத்துப்
பாராட்டினார். அத்தோடு நின்றுவிடவில்லை. தமிழக அரசின் சார்பில் ஜி.யு.போப் மொழியாக்க விருதினை வழங்கிட
உரிய ஏற்பாட்டினைச் செய்தார். மேலும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் உலக மொழிபெயர்ப்பு நாளை
முன்னிட்டு ஆண்டுதோறும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கிடவும் செய்த பெருமை கலைஞரையே
சாரும்” என்றார்.
   

         விழாவில், மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ச.வின்சென்ட்-டிற்கு மொழிபெயர்ப்புக்கான ‘வாழ்நாள்
சாதனையாளர் விருது’ம், இணைப்பேராசிரியர் மோ.செந்தில்குமார், சாய் சுப்புலட்சுமி, சதீஷ் வெங்கடேசன், பாக்கியம்
சர்மா, துளசி பட், ஆதி வள்ளியப்பன் ஆகியோருக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

         விழாவில், ’திசை எட்டும்’ ஆசிரியர் குறிஞ்சிவேலன், ‘கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்,
ரவிச்சந்திரன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஊடகவியலாளர்கள் மு.முருகேஷ்,
திருவேங்கிமலை சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

News

Read Previous

கலாச்சார விழிப்புணர்வு மூலம் வாழ்க்கை திறனுக்கான கல்வி – பேரா.முனைவர் ஜெ. ஜெயசித்ரா

Read Next

ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published.