முகவரி

Vinkmag ad

முகவரி

காலிங்பெல் சப்தம் கேட்டு கதவைத் திறந்தாள் சுமதி. வாசலில் நாற்பது வயதைக் கடந்த ஒருவர் நின்றிருந்தார். “யாருப்பா நீங்க?”என்று கேட்ட சுமதியிடம், “என்பேரு தாமஸ், துபாயிலிருந்து வரேன். உங்க பேரு சுமதியா?இந்த முகவரி உங்களுடையதா?”என்று கேட்டு ஒரு கவரைக் கொடுத்தார்.

கவரை வாங்கிப் பார்த்த சுமதி “ஆமா, எம்பேரு சுமதிதான். என்ன விசயம்? யார் கொடுத்தது?”என்று கேட்டாள். “உள்ளே ஒரு கடிதம் இருக்கும்மா, படிச்சுப்பாருங்க”என்றார் தாமஸ். கவரைத் திறந்து கடிதத்தைப் படிக்கத் தொடங்கினாள் சுமதி.

அன்புள்ள சுமதிக்கு,
பரமு எழுதிக் கொள்வது. நலமா இருக்கியா சுமதி? நம் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்?முதலில் நான் செய்த தவறுகளுக்கும், பாவங்களுக்கும் மன்னிப்புக் கேட்டுக்கறேன். நமக்குக் கல்யாணமானபின்பு அழகான இரண்டு ஆண்பிள்ளைகளைக் கடவுள் வரமாகத் தந்தார். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தில் நம்ம நாலுபேரும் ரொம்பக் கஷ்டப்பட்டோம். எதை ஆரம்பித்தாலும் தோல்வியில் முடிந்தது.

அந்த நேரத்தில்தான் துபாய்க்கு ஆள் எடுக்கிறார்கள், நல்ல சம்பளம் கிடைக்கும்னு எனக்குத் தெரிஞ்சவங்க சொன்னாங்க. உன் நகைகளைவிற்று என்னை துபாய்க்கு அனுப்பிவைத்தாய். ஒரு அரபிவீட்டில் க்ளீனிங் வேலை கொடுத்து, தங்குவதற்கு இடமும், சாப்பாடும் கொடுத்தார்கள். சம்பளம் அப்படியே மிச்சமானது. உன்னுடைய பிரார்த்தனைதான் காரணமென்று சந்தோஷப்பட்டு நம் கடன், கஷ்டம் எல்லாத்தையும் போக்கிடலாம்னு நினச்சு உனக்கு ஒரு ஆறுமாசமா வாங்கின சம்பளத்தை அனுப்பிவச்சேன்.

அதற்குப்பிறகுதான் என்வாழ்க்கையில் நடக்கக்கூடாத சம்பவங்கள் நடந்துவிட்டது சுமதி. இங்கு சமையல்வேலை செய்யும், வேறநாட்டுப் பெண்ணுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பால், உன்னை மறந்தேன், நம்குழந்தைகளை மறந்தேன். உன் கடிதங்களுகெல்லாம் பதிலெழுதாமல் ஒதுக்கிவிட்டேன். சம்பளத்தையெல்லாம் அவளிடமே கொடுத்துவிட்டேன். எங்கள் தொடர்பை அவள், அரபியிடம் தெரிவிக்கவும், இருவருக்கும் இங்கேயே திருமணம் செய்து வைத்துவிட்டார்.

அவளுக்கும் இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்தது. இருபது வருடங்கள் ஓடிவிட்டன.நிறைய பணங்களைச் சேர்த்துக் கொண்டு அந்தப்பெண்,பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவள் சொந்த ஊருக்குப் போய்விட்டாள். வயது முதிர்ந்த காரணத்தால் என்னால் ஒருவேலையும் செய்ய முடியவில்லை. உங்களுக்கு நான் செய்த துரோகங்களுக்கு கடவுள் நல்ல தண்டனையைக் கொடுத்திட்டார் சுமதி. உங்கள் ஞாபகங்கள் என்னைத் தினமும் கொல்கிறது.

தயவுசெய்து என்னை மன்னித்துவிடு. நீ எங்கே இருக்கிறாய் என்று தெரியாததால் நமது பழைய முகவரிக்கு இந்த கடிதத்தை கொடுத்துள்ளேன். தாமஸ்..அரபிவீட்டில் டிரைவர் வேலை பார்க்கிறான். அவனிடமே பதிலெழுதி அனுப்புமா. அடுத்த மாசமே நான் அங்கே வந்துட்றேன். என் கடைசிக் காலமாவது உன்னோடும், பிள்ளைகளோடும் போகட்டும்.

இப்படிக்கு,
உன் பரமு.

கடிதத்தை மடித்து கவருக்குள் வைத்து தாமஸிடம் திருப்பிக் கொடுத்தாள் சுமதி. “சுமதினு என்பேரு எழுதியிருந்ததால பிரிச்சுப் படிச்சுட்டேன். இந்த முகவரி என்னுடையதில்ல. சரியான முகவரி கிடச்சா அவங்ககிட்ட குடுங்க. இல்லைனா எழுதினவருகிட்டேயே திருப்பிக் குடுத்துருங்க.” தாமஸின் பதிலுக்குக் காத்திருக்காமல் கதவை மூடிவிட்டு வீட்டிற்குள் நுழைந்த சுமதியின் செல்போன் ஒலித்தது. இரண்டு மகன்களும் கான்ஃபரனஸ் காலில் அழைத்தார்கள், “நல்லாருக்கீங்களாப்பா?மருமகள்களும் பிள்ளைகளும் எப்படியிருக்காங்க? பொண்டாட்டி பிள்ளைகள கண்கலங்காம, எந்தக் குறையுமில்லாமப் பார்த்துக்ணும்யா”, என்ற அம்மாவிடம்,எல்லாரும் நல்லா இருக்கோம்மா, வர்ற சனிக்கிழம உங்களப்பாக்க ஊருக்கு வர்றோம். போன வாரம்தான் வந்தோம் இருந்தாலும் எங்களுக்கு உங்ககூட இருக்கணும்னு ஆசை. எங்களோடவே வந்துருங்கம்மா” என்ற மகன்களிடம், “இல்லப்பா இது நம்ம பழையவீடு. இந்த வீட்டிலேயே நான் கடைசிவரைக்கும் இருந்துட்றேன். நீங்க ரெண்டு பேரும் எங்கே வேலைபாக்குறீங்களோ அங்கேயே குடும்பத்தோட இருங்க. அளவுக்கு அதிகமாகவே எனக்கு செலவுக்குப் பணம் அனுப்பறீங்க, அப்பப்போ வந்து என்னைப் பார்த்துட்டு மட்டு்ம் போனால் போதும்”என்றாள்.

வெளிநாடு சென்ற பரமு கொஞ்சநாட்களாக எந்தவித தொடர்புமில்லாம இருக்கிறாரே, என்ன ஆனதோ? எப்படி இருக்கிறாரோ? கடவுளே அவர் நல்லா இருக்கணும் என்று விரதமிருந்து, குழந்தைகளைக் காப்பாற்ற வீட்டுவேலைகள், நூறுநாள் வேலைகள் செய்து கஷ்டப்பட்ட சுமதிக்கு, துபாயிலிருந்து வந்த உறவினர் ஒருவர் அவன் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டது முதல் இன்றுவரை அதே வீட்டில் இருந்தாலும், சுமதியின் முகவரி… பரமுவுக்காக இல்லாமல் போனது.

ஃபாத்திமா,
ஷார்ஜா.

News

Read Previous

ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

Read Next

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *