ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

Vinkmag ad

ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

வாழ்த்துக்கள்

அது ஒரு வனம்.
வேட்டைக்கு வந்த
வேடன் ஜரா
கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை
காண்பதற்கு இரை
ஒன்றுமில்லாமல்
களைத்து இருந்தான்
பசித்தும் இருந்தான்

பசியில் பார்வை மங்கி
பார்த்த ஓர் உருவத்தை
பட்சி என நினைத்து
அச்சுப்பிசகாமல்
அம்பெய்தான்…

அம்பு துளைத்து
ஆ என அலறியது
இரை அல்ல இறை
ஶ்ரீகிருஷ்ணன்..

புனரபி ஜனனம்
புனரபி மரணம் என
புனித தத்துவத்தை
பூமிக்கு வழங்கிய
சாமி அவன்…..

எட்டப் பார்வையில்
எது என தெரியாமல்
கிட்டப் பார்வையில்
அது ஶ்ரீ கிருஷ்ணன் என
தெரிந்து கொண்ட
வேடன் ஜரா
வியர்த்து நின்றான்
வேதனையில் புலம்பினான்

தவறுக்கும் தவறான
தவறை செய்துவிட்டேன்
யது குலத்தின்
தலைவனை கொய்த
தறுதலையை
மன்னிக்க என
கீழே விழுந்த
ஶ்ரீ கிருஷ்ணனை தன்
மடியில் கிடத்தி
மன்றாடி கெஞ்சினான்
வேடன் ஜரா…

பதறிய ஜடாவின்
பதட்டத்தை தனித்தும்
ருசியான பழங்களை
பசியாறக் கொடுத்தும்
தன் கதையை கூறினார்

எதிர்கால சந்ததிகளுக்கும்
என் கதையை
எடுத்து இயம்பு என
ஜரா எனும் வேடருக்கு
வேண்டுகோள் வைத்தார்
ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா…

அந்தகர்களின்
அரசன் உக்கிரசேனன்
அவனின் அன்புத்தம்பி தேவகன்
தேவகனின் செல்ல மகள்
தேவகி எனும் குலமகள்….

சூரர்களின் அரசர்
வசுதேவருக்கும்
தேவதை தேவகிக்கும்
மணமுடிக்க எண்ணி
மனப்பூர்வ தீர்மானம் ஏற்றி
மணவிழாவும் நிகழ்ந்தது….

உக்கிரசேனனின்
ஒரு மகன் கம்சன்
தேவகிக்கு அவன்
ஒன்று விட்ட அண்ணன்..

மறுவீடு செல்லும்
பாசமலர் தங்கை
தேவகியின் தேரை
தானே ஓட்டி
தன்பாசம் காட்ட நினைத்த
தன்னிகரில்லா மன்னன் …

“தங்கை தேவகியின்
எட்டாவது பிள்ளை உன்
எமனாகப் போகிறது” என
எங்கிருந்தோ ஒரு குரல்
கம்சனின்
காதில் விழுகிறது

காதில் நுழைந்த குரல்
கருத்தினில் நுழைந்து
கள்ளம் கபடமற்ற
கம்சன் என்பவன்
கசாப்பு கடைகாரனாகிறான்…

மதுரா நகரில் தோன்றிய
மழலைச் செல்வங்களை
மனதில் இரக்கமின்றி
வெறித்தனமாக
வெட்டிச்சாய்க்கிறான்
மனிதன் என்ற நிலையிலிருந்து
எட்டி நிற்கிறான்…

வசு தேவர் தேவகி
தம்பதியருக்கு
எட்டாவது பிள்ளையாக
மதுரா நகரின்
சிறையில் பூத்த சின்னமலர்
ஶ்ரீ கிருஷ்ணர் …

கண்ட சிசுக்களை
கனநேரம் யோசிக்காமல்
கொலை செய்யும்
கொலைகாரன்
கம்சனிடமிருந்து
காப்பாற்ற எத்தனித்து
சிசுமாற்றம் அங்கு
சிறப்பாக நடந்தது ..

மதுரா நகரின்
மாணிக்கம் கண்ணன்
யாதவர்களின் தலைவர்
நந்த கோபர் யசோதையிடம்
ஆயர்பாடி சென்றது
அவர்களின் பெண்பிள்ளை
மதுரா நகர்
சமத்தாக வந்தது
சந்தேகம் வரவில்லை கம்சனுக்கு…

ஆயர்பாடியில் கண்ணன்
அழகாக வளர்ந்தான்
அடுக்கு பானைகளில்
அமுதென இருந்த
வெண்ணையை
திருடி திண்ணும் அவன்
தீராத விளையாட்டுப்பிள்ளை..

அவன்பால்
அனைத்து பெண்களும்
ப்ரீதி கொண்டிருந்தனர்
யக்ஞ படையல்
இறைவனுக்கா?
இடையன் கிருஷ்ணனுக்கா?
என்று கேட்டால்
அக்ரஹாரத்தின்
அனைத்து
பெண்களின் பதில்
இடையன் ஶ்ரீ கிருஷ்ணன்

அவன் குழலோசையில்
ராதை மட்டுமல்ல
பிருந்தாவனமே
பித்துக்கொண்டிருந்தது…

வாசனை அடங்கிய
திரவியங்கள் விற்கும்
திரிவக்ரா எனும்
மூன்றிட கூன் பெண்ணின்
முதுகை தொட்டார்

மான் போன
மாயமென்ன என்பது போல
கூன் மாயமானது
மாயக்கார கண்ணனானார்….

கோகுலத்தை அழிக்க
இந்திரன் பெரு மழையை
பெய்யச் செய்தபோது
கோவர்த்தன மலையை
குடையாக மாற்றி
கோகுலத்தை காத்தார்
இன்றளவும் யதுகுல
காவலர் ஶ்ரீ கண்ணனே…

விருஷ்ணி குலத்தலைவர்
கம்சனின் மைத்துனர்
அமைச்சர் அக்ரூரர்
தான் நடத்தும்
தனூர் பூஜைக்கு
தந்திரமாக அழைத்து

கண்ணனை கொலை செய்ய
கருதி முடிவெடுத்த
கருணையற்ற மாமன்
கம்சனை அண்ணன்
பலராமனின்
பலத்தையும் சேர்த்து
அழித்து ஒழித்து
மதுராபுரியை
தாய்வழி தாத்தா
உக்கிரசேனரிடம்
ஒப்படைத்தார்
ஒப்பில்லாத ஶ்ரீகண்ணன்….

பிறக்கும்போதே
பாதி பேயாகவும்
பாதி முனியாகவும் பிறந்த
மகத தேச மன்னன்
ஜராசந்தன்
தன் இரு மகள்களை
கம்சனுக்கு
கட்டி கொடுத்தவன்

மகள் அல்ல
மகள்கள் தாலி அறுத்ததை
மனதில் பொறுக்காத
மகத தேச மன்னன்
ஜராசந்தன்
கண்ணனை அழிக்க
கணை தொடுத்தான்

பூர்வ குடிகளின்
புதுமையான ஆயுதத்தால்
ப்ரவர்ஷன குன்றில்
ஜராசந்தனை
வென்றான்
வித்தைக்கார கண்ணன்

விதர்ப தேச அரசன்
பீஷ்மகனின் மகள் ருக்மிணி
சிசுபாலனை
மணக்க மறுத்து
சிவன் கோயிலில் மறைந்தவள்
ஶ்ரீகிருஷ்ணனை மணந்தாள்
என்ற கூற்றும் உண்டு…

கேட்டதும் கொடுப்பவன்
கீதையின் நாயகன்
பகவான் விஷ்ணுவின்
எட்டாவது அவதாரமான
ஶ்ரீ கிருஷ்ணன் அவதரித்த
இந்நாளில் அனைவருக்கும்
ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

பா.திருநாகலிங்க பாண்டியன்

கீழச்சிறுபோது

News

Read Previous

தமிழக அமைச்சருடன் முதுகுளத்தூர் திடல் ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு

Read Next

முகவரி

Leave a Reply

Your email address will not be published.