துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் இத‌ழின் “மனசு” சிற‌ப்பித‌ழ் வெளியீட்டு விழா

Vinkmag ad

துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 57 வது மாத இதழான “மனசு” சிறப்பிதழ் வெளியீடு மற்றும் ஆற்றல் என்னும் தலைப்பில் கவியரங்கம் நிகழ்ச்சி  09.03.2012 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில்  துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்தினை நிவேதிதா பாடிட நிகழ்ச்சி இனிதே துவங்கியது. 
வழக்கமாக கவியரங்கத்துக்கு இருவர் தலைமையேற்கும் வழக்கம் தவிர்த்து முதன் முறையாக ஒருவரே தலைமையேற்ற சிறப்பினை மகளிர் தினம் முன்னிட்டும் பெண்களுக்கு முன்னுரிமை தரும்பொருட்டும் கவிதாயினி ஜெயாபழனி பொறுப்பேற்று நடத்திய கவியரங்கம் களை கட்டியது! ஆம்.. கவிஞர்களை அழைக்கும் பாணியில் புதுமை வகுத்த அவர் திறமை மெச்சத்தக்கது! ஏற்கனவே கவிஞர்கள் எழுதிய அவர்தம் வரிகளில் சிலவற்றை படித்துக்காட்டி.. இக்கவிதை எழுதிய கவிஞரை இப்போது கவிதை சொல்ல நான் அழைக்கிறேன் என்று புதிய பரிமாணம் காட்டியபோது.. அரங்கத்தின் முழுகவனத்தையும் ஈர்த்தார் என்பதைவிட.. பாராட்டுதல்களையும் பெற்றார்.
மனசு பற்றிய தலைப்பில் சிலரும் ஆற்றல் பற்றிய தலைப்பில் சிலரும் கவிதைகளை வழங்க.. சுவைஞர்களின் கரகோஷம் ஆதரவினை பன்மடங்கு நல்கியது.  கவியரங்கில்.. ஜியாவுதீன், புதுவை ரமணி, காவிரிமைந்தன், நிவேதிதா, ஜெயாபழனி, குத்புதீன் ஐபக், விருதை மு.செய்யது உசேன் ஆகியோர் பங்கேற்று தம் கவிதைகளை வழங்கினர்.  அடுத்த மாதத் தலைப்பான ‘பூ’ என்கிற தலைப்பில் சிறப்புக் கவிதையினை அதிரை இளையசாகுல் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வழங்கிய பெருமக்கள் முத்துப்பேட்டை அ.சர்புதீன், குத்தாலம் அஷ்ரப் ஆகியோர் சபையினை தங்கள் திறன்மிக்க பேச்சாற்றலால் மகிழ்ச்சியில் மூழ்கவைத்தனர்! 
நிகழ்ச்சியில் மேலும் இருவேறு விருந்துகளும் கிடைத்தன.  புதிய பாடகராய் அரங்கேறினார் ச..காதர் மைதீன் அவர்கள்.
 தென்னகத்தின் பி.எச். அப்துல் ஹமீது என்று கருதப்படும் தஞ்சை பேசில் ராஜா பங்கேற்று தமது சிறப்பான குரல்வளத்தால் அனேக அபிமான அறிவிப்பாளர்களின் குரல்களில் வழங்கிய பல்குரல் விருந்து, நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.  குறிப்பாக அமைப்பின் தலைவர் எல்.கோவிந்தராஜ் ப‌லகுர‌ல் ம‌ன்ன‌ல் பேசில் ராஜாவை மனமாரப் பாராட்டினார்.
சிறப்பு விருந்தினராக கீழக்கரை நாசர் ஷுஐபு பங்கேற்றார்.  அவர்தம் பேச்சில் ஒவ்வொரு வரியும் பொருள் வாய்ந்ததாக இருந்தது.  நகைச்சுவை இழையோடிக்கிடந்தது!  புதிய புதிய தகவல்களை அள்ளித்தந்தார்.  தமிழின் சுவையை தம் கவிதை நடையில் அவர் வழங்கி அனைத்துக் கவிஞர்களின் கவிதைகளிலும் உள்ள நயங்களை எடுத்துரைத்து குறைகளையும் சுட்டிக்காட்டி அவற்றைக் களைவது எளிதென்றும் குறிப்பிட்டார்.
ஆறாம் வகுப்பு முதல் கவிதை எழுதும் ஆற்றல் பெற்ற கீழக்கரை கவிஞர் நாசர் ஷுஐபு ஆற்றல் கவியரங்கத்திற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது எத்தனைப் பொருத்தம் என்று எல்லோரையும் எண்ண வைத்தார். தமது இனிய பேச்சுநடையால் இன்முகம் காட்டி மென்மை கலந்து எடுத்துக்காட்டுகளிலும் முன்னின்று நிகழ்த்திய உரை அவையோர் அனைவரையும் கவர்ந்தது எனில் அது மிகையில்லை!
கீழக்கரை நாசர் ஷுஐபுக்கு  வானலை வளர்தமிழ் தலைவர் எல்.கோவிந்தராஜ் பொன்னாடை அணிவிக்க.. நினைவுப் பரிசினை இணைச் செயலாளர் ஜியாவுதீன் வழங்கினார். 
கவியரங்கத் தலைமை ஏற்ற ஜெயாபழனிக்கு கீழக்கரை நாசர் ஷுஐபு நினைவுப்பரிசு வழங்கினார்.  ஒவ்வொரு இதழையும் தன் உழைப்பால் மெருகேற்றி வடிவமைக்கும் பொறுப்பாசிரியர் ஜியாவுதீனுக்கு  எல்.கோவிந்தராஜ் நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தார்.
நிகழ்ச்சியில் முதலில் மனசு இதழ்  வெளியிடப்பட்டது.
மனசு இதழின் முதல் பிரதியை ஜெயாபழனி வெளியிட குத்புதீன் ஐபக் பெற்றுக்கொண்டார்.  இரண்டாம் இதழை காத்தீம் நிசா  வெளியிட ஜாபர் அலி பெற்றுக்கொண்டார். மூன்றாம் இதழை பல்கீஸ் வெளியிட சாகுல் பெற்றுக் கொண்டார்.
ஆற்றல் இதழின் முதல் பிரதியை கவிஞர் நாசர் ஷுஐபு அவர்கள் வெளியிட அப்துல் ரகுமான் பெற்றுக் கொண்டார். இரண்டாம் இதழை தலைவர் கோவிந்தராஜ் வெளியிட விமல் பெற்றுக்கொண்டார்.  மூன்றாம் இதழை குத்தாலம் அஷ்ரப் வெளியிட வாணிஆனந்தன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் புதுவை ரமணி அவர்கள்  நன்றியுரையாற்றினார்.  அமைப்பின் ஆலோசகர்  காவிரிமைந்தன் நிகழ்வினை தொகுத்து வ‌ழ‌ங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை காவிரிமைந்தன், ஜியாவுதீன், சிம்மபாரதி, ஆதிபழனி மற்றும் புதுவை ரமணி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
 

News

Read Previous

அப்துல் ஹ‌க்கீம்-க்கு பெண் குழ‌ந்தை

Read Next

துபாயில் மதுரை அமீனுக்கு இரட்டைக் குழந்தை

Leave a Reply

Your email address will not be published.