தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா

Vinkmag ad

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 11.03.2023 மாலை “காலா பாணி” என்ற வரலாற்று நாவலுக்கு,  சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர், டாக்டர் மு.7.)ராஜேந்திரன், இஆப அவர்களுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்துணைத்தலைவர் இராகவன் நாயுடு தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

தில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், “மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் மற்றும் கலைஞர்களைப் பாராட்டி கெளரவிப்பதை தில்லித் தமிழ்ச் சங்கம் பாரம்பரியமாக செய்து வருகிறது. நல்ல தரமான இலக்கியத் தரம் வாய்ந்த நூல்களை யாரேனும் எழுதினால், அதை தில்லித் தமிழ்ச் சங்கம் பதிப்பித்து வெளியிட உதவும்” என்றார்.

கவிஞர் மு.முருகேஷ் தனது வாழ்த்துரையில், “நேற்றின் வரலாறு தெரியாமல் போனால் இன்று என்ன செய்வது என்பது புரியாமல் போகும்; இன்று என்ன செய்வதென்பது புரியாமல் போனால் நாளை என்பது நம் கையில் இல்லை’ என்பார்கள் வரலாற்று ஆய்வறிஞர்கள்.

பொதுவாகவே, தமிழர்கள் வரலாற்று ஆவணங்களை முறையாக பாதுகாப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. அதில், பெருமளவு உண்மையும் இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள தகவல்களைத் தேடியெடுத்துத் தொகுக்கும் பணியைச் செய்வதில் நாம் இன்னமும் பின்தங்கிப்போய்தான் இருக்கின்றோம்.                                      

    இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தது தென்தமிழகம். தென்தமிழகத்தின் ஆட்சியாளர்களாக இருந்த பாளையக்காரர்களுக்கும், பிரிட்டீஷ் அரசாங்கத்தின் ஏஜெண்டுகளாக இருந்த நவாபுகளுக்குமிடையே வரி வசூல் தொடர்பாய் அவ்வப்போது பிரச்சினைகள் இருந்தன. நவாபுகளின் தந்திரத்தைப் புரிந்துகொண்ட பிரிட்டீஷ் அரசாங்கம், நேரடியாகப் பாளையக்காரர்களுடன் மோதலைத் தொடங்கியது. புலித்தேவன், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர் உள்ளிட்ட பாளையக்காரர்களுடன் போர் நடத்தினார்கள் பிரிட்டீஷ்க்காரர்கள். தங்களுடன் மோதுபவர்களுக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்க, போராளிகளைத் தூக்கிலிட்டார்கள். 1802-ஆம் ஆண்டு போராளிகளை முதன்முறையாக நாடு கடத்தினார்கள். நாடு கடத்துவதை ‘காலா பாணி’ (கறுப்புத் தண்ணீர்) என்றழைத்தார்கள் பிரிட்டீஷார்.

 தென்தமிழகத்தில் இருந்து சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவரும், போராளிகள் 72 பேரும் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார்கள். 73 நாள்கள் நீடித்த கடுமையான கடல் பயணத்திற்குப் பிறகு, அரசியல் கைதிகள் பினாங்கில் சிறை வைக்கப்பட்டனர். பெரிய உடையணத் தேவரை மட்டும் பினாங்கில் இருந்து சுமத்திரா தீவிற்கு மாற்றினார்கள். அங்கு மால்பரோ கோட்டையில் சிறை வைக்கப்பட்ட அரசர், நான்கு மாதங்களில் இறந்து போகிறார்.

தூத்துக்குடியில் இருந்து போராளிகள் கப்பலில் அழைத்துச் செல்வதில் தொடங்கி, மால்பரோ கோட்டையின் சிறையில் சிவகங்கை அரசர் உயிர்விடுவது வரையிலான சம்பவங்களைத் துயரக் காவியமாக எழுதியுள்ளார் மு.ராஜேந்திரன். கப்பல் பயணமும், போராளிகளின் துயரமும் படிப்பவரைக் கண்ணீர் விட வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இப்படியாக இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் முதல் போராட்டத்தைப் பற்றி டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கி இருப்பது, நம் தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை இனி வடதமிழகமும் அறிந்துகொள்ள உதவியாக அமைந்துள்ளது” என்று கூறினார்.

கவிஞர் மற்றும் எழுத்தாளர் அ.வெண்ணிலா வாழ்த்திப் பேசுகையில், “எழுத்தாளர்  மு.ராஜேந்திரன் தனது ஆட்சிப்பணியில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை ‘செயலே சிறந்த சொல்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். 10 முதல் 15 ஆண்டுகளாக இலக்கியப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கவிதைகளை எழுத ஆரம்பித்த இவர், 4 நாவல்களை எழுதியுள்ளார். பிறகு செப்பேடுகளைப் பற்றி எளிய முறையில் எழுதியதுடன், தொடர்ச்சியாக தனது குடும்பம் பற்றி வரலாற்று நாவலாக எழுதினார். காலணிய ஆதிக்கம் பற்றி ‘1801’எனும் நாவலில் யாரும் அறியா தகவல்களைநமக்கு அறிய தந்துள்ளார். ‘காலா பாணி’ நாவலுக்கென சுமத்ரா, பினாங்கு தீவுச் சிறைச்சாலை சென்று உண்மையான தரவுகளைச் சேகரித்து நூல் எழுதியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது” என்றார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஜவஹர்லால் நேரு  பல்கலைக்கழகப் பேராசிரியர் அறவேந்தன் தனது உரையில், “ஓர் ஆட்சிப்பணி அதிகாரி பல கடமைகளுக்கிடையே வரலாற்று நூல் எழுதுவதென்பது பாராட்டுக்குரியது. வரலாறு என்பது மிகவும் கவனத்துடன் கையாளப்பட வேண்டியனவாகும். அதை நூலாக ஒவ்வொரு பக்கத்திலும், கதையினூடே வரலாற்றையும் இணைத்து கோர்வையாக  எழுதியுள்ளது மிகவும் அருமை. அவருக்கு மிகுந்த பாராட்டுகள்” எனக்கூறி நிறைவு செய்தார்.

விருது பெற்ற எழுத்தாளர், டாக்டர் மு.ராஜேந்திரன், தனது ஏற்புரையில், “நான் ‘காலா பாணி’ நூலுக்கென இரண்டு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தேன். பலவிதமான அனுபவங்கள் ஏற்பட்டது. சிறைச்சாலையில் பல மனிதர்களைச் சந்தித்து விஷயங்களை அறிய முடிந்தது. வரலாறு மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. தமிழ்ச் சமூகம் எவ்வாறெல்லாம் இம்மண்ணில் வாழ்ந்துள்ளது?  என்பதை நாம் அறிந்து,  நமது பாரம்பரியம் பெற்ற தமிழ் மண்ணைக் காக்க வேண்டும். அதற்காகவே இந்த வரலாற்று நூலை எழுதியுள்ளேன்.  பாராட்டு விழா ஏற்பாடு செய்த நிர்வாகத்தினருக்கு நன்றி” என்றார். 

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ரெங்கநாதன் நன்றியுரை ஆற்றினார்.

தில்லித் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சுந்தரேசன் மற்றும் தில்லி வாழ் தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர்.

News

Read Previous

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் அருகில் சாக்கடை நுர்நாற்றம்

Read Next

துபாயில் மதிப்புமிகு முனைவர் பட்டம் பெற்ற முதுவை ஹிதாயத்துக்கு பாராட்டு விழா

Leave a Reply

Your email address will not be published.