திருக்குறளின் அறத்துப்பாலுக்கு கதையெழுதிய மாணவர்கள்..

Vinkmag ad

திருக்குறளின் அறத்துப்பாலுக்கு கதையெழுதிய மாணவர்கள்…

       மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் 10, 11, 12-ஆம்
வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் திருக்குறளின் அறத்துப்பாலிலுள்ள
38 குறள்களுக்கு, 38 கதைகளை எழுதியுள்ளனர். இப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியர்
கோ.மாலினி, இக்கதைகளைத் தொகுத்து ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்’ எனும்
நூலாக்கியுள்ளார். இந்நூலின் அட்டை ஓவியத்தையும் பள்ளி மாணவரே வரைந்துள்ளார்.

       இப்பள்ளியின் தமிழ்த்துறை சார்பில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதியன்று
பள்ளி வளாகத்திலுள்ள ஆற்றல் அவைக்களம் அரங்கில் இந்நூலின் வெளியீட்டு விழா
நடைபெற்றது.
       ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்’ எனும் இந்நூலை பள்ளியின் தாளாளர் சக்தி ஸ்ரீதேவி வெளியிட,
கவிஞர் மு.முருகேஷ் பெற்றுக்கொண்டார். விழாவில் கல்வி இயக்குநர் கு.உதயகுமாரி, பள்ளி முதல்வர்
மு.ஜெயக்குமார், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவியர்களும் கலந்து கொண்டனர்.

 “வகுப்பறையில் நடத்தப்படும் பள்ளிப் பாடப்புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது; அதையும்
தாண்டி குழந்தைகளிடம் புத்தக வாசிப்புத் திறனை அதிகரிக்க வேண்டும், பள்ளிக் குழந்தைகளிடம்
இன்னமும் அறியப்படாமலிருக்கும் பல்துறை ஆற்றலை வெளிக்கொண்டுவருவதற்கான முன்னெடுப்புகளை
இப்பள்ளி தொடர்ந்து செய்துவருவது பாராட்டுக்குரியது” என்று கவிஞர் மு.முருகேஷ் குறிப்பிட்டார்.
      “கதைகள் மட்டுமல்ல, ஓவியம், இசை, ஆரோக்கியம், சமூக அறம் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளிலும்
மாணவர்கள் ஆர்வமுடன் செயல்பட, இப்பள்ளி அவர்களுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் 
என்றைக்கும் அளிக்கும்” என்றார் தாளாளர் சக்தி ஸ்ரீதேவி.

     இந்த நூல் வெளியீட்டு விழாவானது மாணவர்களிடையே படைப்பாற்றலுக்கான புதிய
திறப்புகளை வழங்கும் விதமாக சிறப்பான முறையில் நடைபெற்றது.

News

Read Previous

தீபாவளி நல்வாழ்த்துக்கள்- 2022

Read Next

‘ஆன்லைன்’ முனைவர் படிப்புக்கு யு.ஜி.சி., அங்கீகாரம் இல்லை…

Leave a Reply

Your email address will not be published.