சென்னையில் 2025 மே மாதத்தில் 12-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

Vinkmag ad

சென்னையில் 2025 மே மாதத்தில் 12-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

27 ஜனவரி  2024

பன்னிரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அடுத்தாண்டு மே மாதத்தில் சென்னையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இந்தியக் கிளைத் தலைவர் எம்.பி. நிர்மலா ஐஏஎஸ் தெரிவித்தார்.

இந்த மாநாட்டை நடத்துவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசிய எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிறுவனர் – வேந்தரான பாரிவேந்தர், மாநாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

கலந்தாய்வின் நிறைவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைச் சென்னையில் 2025 மே மாதத்தில் நடத்துவதென்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

மாநாட்டில் சிறப்பு அம்சங்கள்:
 _ 2023, 2024 ஆம் ஆண்டுகளில் வெளியான தமிழ் நூல்கள் பற்றிய குறிப்புகளும் விமர்சனங்களும் மாநாட்டிலும், இணைய வாயிலாகவும் வெளியிடப்படும்.

_ வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஊடகவியலாளர்கள், பள்ளியாசிரியர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.

_ பாரம்பரிய, நவீன ஓவியங்கள் இம்மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும்..

_ தமிழ்த் திரைப்பட வரலாறு காட்சிப்படுத்தப்படும்.

_  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கென கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

_ உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்கள், தமிழ் மன்றங்கள், தமிழ் அமைப்புகள் அழைக்கப்பட இருக்கின்றன.

_ சிறந்த தமிழ் நூல், ஆவணப்படம், குறும்படத்திற்கு பரிசுகள் வழங்கப்படும்.

_  சிறந்த தமிழ்ச்சேவை புரிந்தவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, மாநாட்டில் விருதுகள் வழங்கப்படும்.

_  கடந்த மாநாட்டைப் போலவே, இந்த மாநாட்டிலும் கலந்துகொள்ள, அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

_ வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சிறப்பாகத் தமிழ்ப் பணி செய்யும் அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.

_ சென்ற முறை அறிவிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், இந்த மாநாட்டில் வெளியிடப்படும்.

_  சென்ற முறை அறிவித்த பெண்கள் மலர் இந்த மாநாட்டில் வெளியிடப்படும்

_  பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழில் ஆய்வு செய்தவர்கள் அனைவரும் மாநாட்டுக்கு அழைக்கப்படுவார்கள்.

_  வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலுள்ள பிற மொழி அறிஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

_  சிறந்த தமிழ்ப்படைப்புகள் நாடகமாக்கப்படும்.

_  மாநாட்டையொட்டி, பாரம்பரிய தமிழ் விளையாட்டுகளும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

_ மூன்றாம் பாலினம், மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு அமர்வு அமைப்பட உள்ளது.

_ தமிழர் பாரம்பரிய உணவு, மருத்துவம், கலை, கைத்திறன், நெசவு போன்றவை காட்சிப்படுத்தப்படும்.

_ ஒவ்வொரு நாட்டிலும் தமிழ் வளர்ச்சி பற்றிய ஆய்வரங்கு அமைக்கப்படும்.

_ எழுத்தாளர்களையும் அவர்களின் நூல்களையும் அறிமுகப்படுத்த தனி அரங்கு ஏற்பாடு செய்யப்படும். அவர்களின் நூல்களில் சில பிரதிகள் வாங்கிக் கொள்ளப்படும்.

_ சிறுபத்திரிகைகளுக்குத் தனி அரங்கு ஏற்பாடு செய்யப்படும்.

_  நவீன இலக்கியத்திற்குத் தனி அரங்கு ஏற்பாடு செய்யப்படும்.

_  பக்தி இலக்கியத்திற்கென அரங்கு அமைக்கப்படும்.

_  தமிழ் மொழிக்கு தேசிய, திராவிட, தமிழ், பொதுவுடமை இயக்கங்களின் பங்களிப்பு பற்றிய அமர்வுகளுக்கெனத் தனி அரங்கு அமைக்கப்படும்.

_ தமிழில் கணினி தொடர்பான அமர்வுகளுக்குத் தனி அரங்கு அமைக்கப்படும்.

_ சிறார் இலக்கியத்துக்கெனத் தனி அரங்கு அமைக்கப்படும்.

_  தமிழ் மருத்துவம் தொடர்பான அமர்வுகளுக்கெனத் தனி அரங்கு அமைக்கப்படும்.

இதுபோன்று மேலும் சில அமர்வுகள் திட்டமிடப்பட்டு வருவதாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் இந்தியக் கிளையினர் தெரிவித்துள்ளனர்.

கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மாசிலாமணி நந்தன், செயலர் அபிதா சபாபதி, முனைவர்கள் பாரதிபாலன், அரங்க.பாரி, கரு. நாகராஜன், அருள்செல்வன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

News

Read Previous

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் 75வது குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம்

Read Next

கோவை ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

Leave a Reply

Your email address will not be published.