இளைய கவிஞர்களின் வரவால் தமிழ்க் கவிதைகளின் அகமும் முகம் மாறியிருக்கிறது

Vinkmag ad

இளைய கவிஞர்களின் வரவால்

தமிழ்க் கவிதைகளின் அகமும் முகம் மாறியிருக்கிறது

    படைப்பியல் பயிலரங்கில் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு

சென்னை.
சென்னை அரும்பாக்கத்திலுள்ள டி.ஜி.வைணவக் கல்லூரியின்
தமிழ்த்துறை (சுழற்சி II) சார்பில் கடந்த அக்டோபர் 9, 10, 11 ஆகிய
மூன்று நாட்கள் படைப்பியல் பயிலரங்கு நடைபெற்றது.
இரண்டாம் நாள் நடைபெற்ற கவிதைப் பயிலரங்கிற்குத் தமிழ்
இலக்கியத் துறை & தமிழ்த்துறை (சுழற்சி II) தலைவர் முனைவர்
க.ர.லதா தலைமையேற்றார். பயிலரங்கில் சிறப்ப்பு விருந்தினராகப்
பங்கேற்ற கவிஞர் மு.முருகேஷ் பேசியதாவது:
“நீண்ட மரபினையுடைய தமிழ்க் கவிதையில் மகாகவி பாரதியார்
தொடங்கி வைத்த புதுக்கவிதைக்கான எழுச்சி, பலரையும் கவிதை
எழுதத் தூண்டியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில்
அறிமுகமான புதுக்கவிதை வடிவம், பெரிய எழுச்சியை உண்டாக்கியது.
அதுநாள் வரை இலக்கண வரையறைக்குள் நின்று, மரபுக்கவிதைகளை 
மட்டுமே எழுதிவந்த பண்டிதப் புலவர்கள் புதுக்கவிதையை எதிர்த்தனர்.
ஆனாலும்  காலத்தின் தேவையை சரியாய் புரிந்துகொண்ட புதுக்கவிதை,
எதிர்ப்புகளைத் தாண்டியும் தமிழில் நிலை பெற்றது.

தற்போது தமிழில் கஜல், ஹைக்கூ, லிமரிக், ஹைபுன் என உலகின் பல சிறந்த 
வடிவக் கவிதைகளும் எழுதப்படுகின்றன. காலத்தின் தேவை கருதியே எந்தப்
படைப்பும், எந்த வடிவமும் ஏற்றுக்கொள்ளப்படும். ‘பிறநாட்டுக் கலைச்செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்’ என்று பாரதி பாடிச்சென்ற தமிழ் நிலத்தில், 
மக்களின் வாழ்வைப் பற்றியும், சமூக அக்கறையோடும் படைக்கப்படும் எப்படைப்பும்
காலம் கடந்தும் வாழும்.

இன்றைக்கு தமிழில் ஏராளமான இளைய கவிஞர்கள் கவிதை ஆர்வத்தோடு கவிதைகளைப்
படைத்து வருகின்றனர். அவரவர் வாழ்க்கையை, அவரவர் பார்வையில் எழுதும்போது
கவிதையில் உண்மையும் உயிர்ப்பும் கூடுதலாகிறது. 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
நவீன அறிவியல் தொழில் நுட்பம் அமைத்துத்தந்துள்ள புதிய வழியில் இளைய தலைமுறை
கவிஞர்கள் எழுதும் கவிதைகளால், தமிழ்க் கவிதையின் அகமும் முகமும் மாறியிருக்கிறது
என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார்.

இந்நிகழ்வில் பேராசிரியர் சி.சிவராஜ் (கவிஞர் இல்லோடு சிவா) எழுதிய ‘உயிர்வதை’ எனும்
கவிதை நூலினை முனைவர் க.ர.லதா வெளியிட, கவிஞர் மு.முருகேஷ் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் முனைவர் ஆ.இரமேஷ், முனைவர் கு.வடிவேல்முருகன்,முனைவர் செல்லப்பிள்ளை,
முனைவர் கஜலட்சுமி, முனைவர் ஜ.சிவகுமார், முனைவர் ஏழுமலை,முனைவர் ராம்ராஜ்,
முனைவர் த.சிவலிங்கம், முனைவர் அ.சதாசிவம், முனைவர் ம.பிரபு, முனைவர் ம.செந்தில் குமார், 

முனைவர் மு.சண்முகம், முனைவர் க.மாரிமுத்து, முனைவர் சசிகலா, முனைவர் கு.கலைவாணன்,
முனைவர் துரை.அருண்பாண்டியன், முனைவர் அ.வீரமணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

படக்குறிப்பு:

சென்னை டி.ஜி.வைணவக் கல்லூரியில் நடைபெற்ற படைப்பியல் பயிலரங்கில் கவிதை குறித்து
உரையாற்றிய கவிஞர் மு.முருகேஷ்-க்கு,  தமிழ்த்துறை (சுழற்சி II) தலைவர் முனைவர்
க.ர.லதா நினைவுப்பரிசினை வழங்கினார். உடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள்.

News

Read Previous

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் புற்று நோய் விழிப்புணர்வு போட்டிகள்

Read Next

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published.