அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை

Vinkmag ad

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதாவது, முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

“மனித வள மேலாண்மைத் துறையின் 2021-2022ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள், தமிழக அரசுப் பள்ளிகள் தமிழ் மொழியில் பயின்றவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டப் பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் அறிவித்தார்.

2010-2011-ம் கல்வியாண்டு முதல் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து ஒற்றைச் சாளர முறையில் தொழிற் கல்வி பயில தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், அம்மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் முழுவதையும் சில நிபந்தனைகளுடன் அரசே ஏற்று கொள்ளும் என கடந்த 2010-ம் ஆண்டு ஆணையிடப்பட்டது.

*• THE SEITHIKATHIR | TELEGRAM |

இதையடுத்து வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கடந்த 2021ம் ஆண்டு மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும், மேற்குறிப்பிட்ட அரசாணையின் அடிப்படையில், முன்னுரிமை பெற்றுள்ள பிரிவினராக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துகொள்வதற்கும், முன்னுரிமை முறை பின்பற்றப்படும் பணியாளர் தெரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் பொருட்டும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ் வழங்கிடும் வகையில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தேவையான ஆணைகள், அறிவுறுத்தல்களை வழங்குமாறு மனிதவள மேலாண்மைத் துறை கேட்டுக் கொண்டது.

இதையடுத்து கூடுதல் தலைமைச் செயலாளர், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் குறித்த அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் அரசினால் பரிந்துரைக்கப்பட்ட குறிப்புரையின்படி அரசாணை பிறப்பிக்குமாறு கோரினார்.

மனித வள மேலாண்மைத் துறை மற்றும் உயர் கல்வித் துறையின் ஆய்வுரைகளையும், கூடுதல் தலைமைச் செயலாளரின் குறிப்புரையையும் அரசு நன்கு கவனமுடன் பரிசீலித்து வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு ஆணையிடுகிறது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தக்க அறிவுரைகளை வழங்கவும், வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் வழங்குவதற்காக முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான புதிய இணைய தொகுப்பு உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

*• THE SEITHIKATHIR | TELEGRAM |

வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள்:

ஒரு குடும்பத்தில் முதலில் பட்டப் படிப்பினை முடிப்பவருக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்கி வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கலாம்.

அண்ணன், தம்பிகள் அவர்களுடைய மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோருடன் இணைந்து ஒரு கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கும் பட்சத்தில் அக்குடும்பத்தில் முதலில் பட்டப் படிப்பு முடித்தவருக்கு மட்டும் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்கலாம்.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நபர் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தொலைதூர கல்வி மற்றும் திறந்தவெளி கல்வி பயின்று முதல் தலைமுறை சான்றிதழுக்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ம் வகுப்பு, பிளஸ் 2-வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இரட்டையர்கள் உள்ள பட்டதாரி இல்லாத குடும்பத்தில், முதல் பட்டதாரி சலுகை கோரும் இரட்டையர்கள் இருவருக்கும் வழங்கலாம்.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு வயது வரம்பு எதும் இல்லை.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு வரையறை கிடையாது.

மேலும், எந்த ஆண்டு பட்டப் படிப்பு முடித்திருந்தாலும் முதல் தலைமுறை பட்டதாரியாக இருக்கும் பட்சத்தில் சான்றிதழ் பெற தகுதியுடையவர்.

ஒரு குடும்பத்தில் அவர்களது முன்னோர், ஏற்கனவே இச்சலுகையினை பயன்படுத்தியுள்ளனரா என்பது தொடர்பாக கண்டறிய மாணவர்கள் பட்டப் படிப்பு சேர்க்கையின்போது, கல்விக் கட்டணச் சலுகை பெற முதல் பட்டதாரி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் பொழுது பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை பின்பற்றலாம்.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெற சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

புகைப்படம், முகவரிக்கான சான்று, மனுதாரரின் மாற்றுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அட்டை, மனுதாரர் மற்றும் பெற்றோரின் உறுதிமொழி படிவம், பெற்றோரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ், குடும்ப அட்டை, மனுதாரரின் கல்விச் சான்றிதழ்கள்.

முதல் தலைமுறை பட்டதாரி சான்று வழங்கும் நடைமுறை:

மனுதாரர் ஆவணங்களுடன் பொது இ-சேவை மையத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் கிராம நிருவாக அலுவலர் விசாரணைக்குப் பின் வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பப்படும்.

கிராம நிருவாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளர் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரி பார்த்தும், கள விசாரணை மேற்கொண்டும் விண்ணப்பத்தினை ஏற்கவோ, திருப்பியனுப்பவோ, நிராகரிக்கவோ தகுந்த காரணங்களுடன் மண்டல துணை வட்டாட்சியருக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

வருவாய் ஆய்வாளரின் அறிக்கை கிடைக்கப் பெற்ற ஒரு வார காலத்திற்குள் மண்டல துணை வட்டாட்சியர் சான்று வழங்கிட வேண்டும்.

மனுதாரர் முதல் தலைமுறை பட்டதாரி சான்றினை குறுஞ்செய்தி வரப் பெற்றவுடன் இணைய வழியில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

மனுதாரர் தவறான தகவல் அளித்து கல்வி கட்டண சலுகை பெற்ற மாணவ / மாணவியர் மீதும் மற்றும் அதேபோன்று முதல் தலைமுறை பட்டதாரி சான்று பெற்று அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற்றிருப்பவரின் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை மூன்று மடங்காக சம்மந்தப்பட்ட மாணவர்களிடமிருந்தோ அல்லது அவரது பெற்றோரிடமிருந்தோ வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கலாம்.

மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி சான்று பெற்று அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற்றிருப்பவரின் மொத்த முழு ஊதியத்தையும் வசூலிக்கலாம்.

தவறான உறுதிமொழி அல்லது தவறான ஆவணங்களை சமர்ப்பித்து முதல் தலைமுறை பட்டாதாரி சான்றிதழ் பெறப்பட்டதாக பின்னர் தெரிய வந்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் வட்டாட்சியரால் ரத்து செய்யப்படும்.”

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

News

Read Previous

பத்மஸ்ரீ டாக்டர் சித்திக் அவர்களுக்கு பாராட்டு விழா

Read Next

அமெரிக்காவின் சான் பிரன்சிஸ்கோ நூலகத்தைவிட பிரம்மாண்டமானது: மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்

Leave a Reply

Your email address will not be published.