தமிழக அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

Vinkmag ad

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து நிற்போருக்குத் தன்னார்வலர்கள் உணவு அளிக்க தமிழக அரசு தடை –பட்டினிச் சாவுக்கு வழிவகுக்கும்

தமிழக அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் பொது மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாட காய்ச்சிகள். பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை அரசு மற்றும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தற்போது கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற காரணம் சொல்லி நிவாரண பொருட்களை விநியோகம் செய்யும் அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இச்சேவையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டள்ளது. நிவாரண பொருட்களை மாவட்டங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் அல்லது உள்ளாட்சி அலுவலர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் இதனை மீறுபவர்கள் மீது ஊரடங்கு சட்டத்தை மீறியதாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட காவல்துறை அலுவலர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கிய மக்களில் அன்றாடம் உழைத்தால் தான் உணவு என்ற நிலையில் வாழும் உழைப்பாளிகள். முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர்.

இவர்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் செய்யும் உதவியைத் தவிர வேறு உதவியில்லை.

முதியோர்களுக்கு மருந்து பொருட்களும், ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொருட்களையும் அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் விநியோகிக்கவில்லை எனில் முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோரின் உயிர் வாழ்வு என்பது கேள்வி குறியாகிவிடும். அரசு இயந்திரத்தை மட்டும் வைத்து தமிழகத்தில் உள்ள அனைவரின் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்வது இயலாத காரியமாகும். இது பட்டினிச் சாவிற்கு கூட வழிவகுத்து விடும்.

அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனாவிற்கு எதிரான இந்த யுத்தத்தில் பாடுபட வேண்டும் என்ற நிலையில் அரசியல் மாச்சரியங்களால் தமிழக அரசு இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, தமிழக அரசு இந்த அசாதாரண சூழ்நிலையிலும் அரசியல் மாச்சரியங்களைத் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் உதவிகளை உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பொதுமக்கள் பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மக்களுக்கு உதவிட பிறப்பித்துள்ள தடை உத்தரவைத் தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு

எம் எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
தலைமையகம்
7 வடமரைக்காயர் தெரு
சென்னை 600 001
12-04-2020

News

Read Previous

தனியார் மருத்துவமனை சோதனையில் கொரோனா பாசிடிவ்: அரசு சோதனையில் நெகடிவ்

Read Next

இனிய சித்திரை பூக்கட்டும்

Leave a Reply

Your email address will not be published.