விமானமேறி விட்டுப்போனவனே வா..

Vinkmag ad

flightவிமானமேறி விட்டுப்போனவனே வா.. (கவிதை) வித்யாசாகர்

ருமாதம் தான் விடுமுறையென்று
வந்துபோனாய்,
உடம்பெல்லாம் பூசிய மஞ்சள்போல எரிக்கிறாய்..

நீ தொட்ட
இடத்திலெல்லாம் சுடுகிறாய், சொன்ன
சொல்லின் நினைவாகக்கூட வலிக்கிறாய்..

நெஞ்சில் விம்மி விம்மி
நனைகிறது உன் நினைவு, நீளும் இரவெங்கும்
நீயில்லாது சுடுகிறது கனவு..

வெப்பத்தில் தகிக்கிறது வாழ்க்கை
வெளியே நின்றாலும், உள்ளே வந்தாலும்
உனக்காகவே வாசலில் நிற்கிறது மனசு..

சமையலறையில் நீதான் தெரிகிறாய்
குளித்துமுடிக்கையில் நீதான் நனைகிறாய்
நேந்திக்கொண்டு திரும்பினாலும் நீதான் திருநீரிடுகிறாய்..

அடுப்படியில் கொதிக்கும் உலைபோல
கொதிக்கிற மனசுக்குத் தெரியவில்லை
பணம், உன் பதவியெல்லாம்..

மேலே பறக்கும் விமானத்தையும்
வீட்டினுள்கேட்கும் பாடல்களையும் வெறுத்து
இன்னும் எத்தனை வயதை நீயில்லாதுத் தீர்ப்பது..?

அடுக்குமாடி கட்டிடத்தொடும்
ஐ பேட் ஆறோடும்
நீ இல்லாத தனிமையை எப்படிக் கொண்டாடுவது ?

பிள்ளைகள் அழுகையில் தூக்கிக்கொள்ளவும்
அம்மா கேட்டால் வந்துநிற்கவும்
அன்புகாட்டி ஆயுளைக்கூட்டவும் நீ என்னோடு வேண்டாமா?

உடம்பு சுட்டால் பரவாயில்லை
தண்ணீரில் உடம்பு கலையும்
மனசு சுடுகிறதே தாங்குவதெப்படி ?

போதும்.. போதுமிந்த
கனலெனக் கடும்
பணத்திற்கான போர்; வீடு திரும்பு

விட்டு வா விண்முட்டும் கட்டிடங்களையும்
வை ஃபை வாழ்க்கையையும்,
இது நமக்கான மண்; இங்கே

இல்லாதச் சோற்றைப் பற்றி இனி
எதற்குக் கவலை ?

நீ அருகிலிருக்கும் ஆனந்தத்தில்
அடுக்கடுக்காய் சிரித்திருப்போம்; அன்பு பிசைந்தூட்டி
வறுமையை வீட்டிற்குள்ளேயே செரித்திருப்போம்;
பிரிவில்லா பிறப்பொன்றை பசியிலேனும் வாழ்ந்திடுவோம்..
——————————————————————-
வித்யாசாகர்

News

Read Previous

முதுகுளத்தூரில் சாலையோர கடைகள் அகற்றம்

Read Next

சென்னையில் உங்களது சொத்துக்களை பராமரிக்க வேண்டுமா ?

Leave a Reply

Your email address will not be published.