வானம் வசப்படும்

Vinkmag ad
வானம் வசப்படும்
*********************
மழைத் தூறலில்
 சிதறி தெறிக்கிற
கரையான் புற்றில்
வாழ்விற்கான தேடல்
இன்னமும் மிச்சமிருக்கிறது….
இறகு விரித்த
 சிறு  பொழுதில்
வாஞ்சையோடு
ஈசல் கூட
வாழத்தான் செய்கிறது வாழ்க்கையை
கனப்பொழுது கொண்டாட்டமாய்…
பத்தடி தூரமே
பாரமாய் இருக்கலாம்
வண்ணத்துப்பூச்சியின் மென்மைக்கு…
தன்னை ஒருபோதும்
தாழ்வாய்க் கருதவில்லை அது!!!
கூடு கலைந்ததற்காய்
தற்கொலை செய்த குருவி…
உயிர் போராட்டம் அலுத்துப்போய் தண்டவாளத்தில் தாவிய மான்…
கண்டதுண்டோ நீங்கள்???
கொட்டிக் கிடக்கிற நட்சத்திரங்கள்
தூரத்துப் பார்வைக்குச்
 சிறியதாய் சித்தரிக்கப் படலாம்…
நிலவொளியின் நிஜமே தானென்பதை
பறைசாற்ற பாடுபடுகிறதா அது????
கனியின் சுவைக்குக்
காரணம் நானென்று
மரம் என்ன நஷ்டஈடு கேட்கிறதா?
என்னை
 விலகிச் சென்றவன் இவனென்று
சிட்டுக்குருவி என்ன குடும்பநல நீதிமன்றத்தில் காத்துக்கிடக்கிறதா???
என் எச்சில் வீட்டை கலைத்த
 எதிர் வீட்டுக்காரனை
வெட்டியே தீருவேன் என
வீராவேசம் பேசுகிறதா
 எட்டுக்கால் பூச்சி???
மழை நேர எறும்பின் வரிசையாய்
மரண வாசலில்
காத்திருக்கும் மாந்தர்களே!!!
சாவது சாவதுதான்
சரித்திரமாய்ச் சாகலாம்….
பகுத்தறிவின்  பரமாத்துமாக்களே
கொஞ்சம் கோபுரங்களை
அண்ணாந்து பாருங்கள்…
அதற்கு மேலும் வானமுண்டு…
கடிவாளத்தை
உங்கள் கண்களுக்கு
கவசம் ஆக்குங்கள்!!!
உங்கள் மதிப்பெண் பட்டியலில்
என்னை மதிப்பிட நான் தயாரில்லை….
உம் பார்வையின்
கோணத்தில் அகப்படவும்
உங்கள் விட்டிலில் விழுந்து எரியவும்
தயாரில்லை நான்!!!
உங்கள் கூண்டுகளை
உடைத்தெறிந்து விட்டேன்…
என் தூரம் இறகு விரிக்கிற வரைதான்….
என் தூரம் இறகு விரிக்கிற வரைதான்….
வானம் மட்டுமே
என் விழிகளில்
பரவலாய்!!!
இதோ வான வெளிகளை
வசப்படுத்தும் என் வலசை…
படபடக்கிற இறகுகளின் ஓசையோடு
என் வானம் வசப்படும்….
  – கவிமுகில் அனு

News

Read Previous

வாழ்க்கை வாழ்வதற்கே!

Read Next

சவ வண்டியானது கங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *