நாயகம் எங்கள் தாயகம்

Vinkmag ad
நாயகம் எங்கள் தாயகம்
–வலம்புரிஜான்
 
6. வள்ளல் வளர்ந்தார் !
(பக்கம் – 69)
O
முகம்மது வளர வளர
அற்புதங்கள் தங்களுக்கு
அரைஞாண்கயிறு
கட்டிக்கொண்டன …
அற்புதங்களா ?
இயற்கையே ஓர் அற்புதம்தான்.
ஆளில்லாக் காட்டிற்குள்
ஆயிரமாய் பூமலரும்.
ஆருமில்லை பார்ப்பதற்கு
அப்புறம் ஏன் பூக்கிறது?
காதில் முடி வளர்கிறது …
காது இப்போது வளர்கிறதா ?
கல்லுக்குள் தேரை …
நினைத்தால் பொறிக்கிற ஆமை …
உயர்ந்தே பிறக்கின்ற
ஒட்டகச் சிவிங்கி …
தூக்கத்தில் சிரிக்கும் குழந்தை …
தொட்டிக்குள்
சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும்
அத்திமரம் …
அலுமினிய ஆப்பிள்கள் …
பீங்கான் நாற்காலிகள் …
ஹெல்மெட்டோடு தூங்குகின்ற மனிதர்கள்
கொடிகளை அறுத்துக் கொண்டே
குதிக்கிற குழந்தைகள் …
அம்மாக்களைத் தூங்கவைக்கும்
தொட்டில்கள் …
எல்லாமே அற்புதம் தான் !
சாவின் தள்ளுபடி
வாழ்வாகிப்போனது …
வாழ்வோ
மலிவு விலைச்
சாவாகிப் போனது …
எல்லாமே அற்புதம் தான் !
O
சங்கு சக்கரங்களுக்குள்ளே
பறிக்கப்பட்ட …
சிவகாசிக் குழந்தைகளின்
சிரிப்பு …
மத்தாப்பு மைதானங்களில்
சிறை வைக்கப்பட்டிருக்கிறது !
பண்டிகை தோறும்
கைதான சிரிப்பிற்கு
விடுதலை கிடைக்கும்.
அப்போதும்
களவாடப்பட்ட சிரிப்பு
உரியவர்களிடம்
ஒப்படைக்கப்படுவதில்லை !
இந்த உலகம்
அற்புதத்தில் அவதரித்து
அநியாயத்தில் நடக்கிறது !
O
ஆறுமாதத்திற்கு ஒரு தடவை
‘ஹலீமா’
முகம்மது என்கிற வெளிச்சத்தை
ஆமினாவின் கண்களில்
விதைத்துவிட்டுப் போவாள் !
இதயம் நிறைந்த தனது
இசைப்பாடல் …
பல்லவியைத்தாண்டி
அனுபல்லவிக்குள்
அடியெடுத்து வைப்பதைப்
பார்த்துப் பார்த்து
ஆமீனா பூரித்துப் போனாள் !
வானம் தனது எல்லைகளை
அகலமாக்கிக் கொண்டால் …
பறந்து பார்க்க வேண்டும் என்று
பட்டது அவளுக்கு !
___________________________________________________

News

Read Previous

உங்கள் கைகளாலேயே(உங்களை)அழிவின் பக்கம் போட்டு கொள்ளாதீர்கள்

Read Next

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் கார்டியோ பயிற்சிகள்!

Leave a Reply

Your email address will not be published.