நாயகம் எங்கள் தாயகம்

Vinkmag ad
நாயகம் எங்கள் தாயகம்
–வலம்புரிஜான்
 
7.  அன்னை மடியில் அண்ணல் !
 
 
 
நாயகம் மணம் முடித்த
நற்செய்தி தாம் கேட்டு
பால்புகட்டிய பிள்ளைக்கு
வாழ்த்துமடல் வாசிக்க
வாஞ்சையுள்ள ஹலீமா
விரைந்து வந்தார் !
பெற்ற அம்மாவைக் கூட
கதீஜா அப்படிப்
பேணியது இல்லை.
அந்தப்
பாலின் மூலத்தைப்
பன்னீரில் நனைத்தார் !
நல்லாள்
இல்லம் திரும்பியபோது
நாற்பது ஆடுகளை
அவளோடு
அனுப்பிவைத்தார்.
ஹலீமாவின் மார்புகள் …
இறுதியாய் ஒருமுறை
இறங்கி வந்தன !
நாயகத் திருமேனி
கால வெள்ளத்தில்
கரைந்திடாத
கல்வெட்டென்றே
கருதிப் போற்றினார்
கதீஜா பிராட்டி !
ஒன்றுக்கு மேலே
ஓவியப் பெண்களை
வதுவை செய்தல்
வழக்கம் ஆங்கே !
கூடைப் பூக்களை
முகர்வதனாலே
குறைகள் வருமா
மூக்கிற்கென்றே
அரபிகள் வாழ்ந்தனர்
அந்த நாளில் !
பல மணப் பழக்கம்
பரவிய நாளிலும்
ஒருத்தியைப் போற்றினார்
உத்தமர் முகம்மது.
கதீஜா பிராட்டியின்
காலம் வரைக்கும்
மாற்றுப் பெண்களை
அவர்
மணக்கவே இல்லை !

News

Read Previous

மதுரையில் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது

Read Next

தாழ்வு மனப்பான்மை

Leave a Reply

Your email address will not be published.