தாய்மை !

Vinkmag ad

 

தாய்மை !

…மு. பஷீர்…மஸ்கட்

 

 

சூழும் அலைகடல் முழுதும்

’மை’யாக்கிப்

புனைந்தாலும்

‘தாய்மை’ எனும் உன் கவிதை

புகழ்பாடத் தேர்ந்திடுமோ !

 

முந்தானை அமுதத்தில்

உயிரேற்றினாய் !

உலகம் சீர்போற்ற

உரமேற்றினாய் !

 

சிசுவாயிருக்கையிலே

செந்தமிழ்ப்

பாலூட்டினாய் !

 

நீ

செவிமடலில் எனக்கு

அறிவுப் பட்டம் தந்த

பல்கலைக் கழகம் !

 

ஒரு உடலில்

இரண்டு இதயம்

இயங்காதென யார் சொன்னது ?1

 

உன் வாழ்கை

இரட்டை உயிர்கள் பயணிக்கும்

ஒற்றைத் தண்டவாள

இரயில் பயணம் !

 

தளராத வீரம் உன்னிடம்

தனிமையில் நீ போராடும்

பிள்ளைப் பேற்றில் !

தாயாகிப் போனதால்தான்

உன்முன்னே

பாருலகே சேயாகிப் போனது !

 

நீ ஆயுதம் கொண்டு

அடித்தாலும் அன்பின்

மென்மையால் அது

வீசும்’ காற்றாகவே வலிக்கிறது !

 

வார்த்தைகள் கொண்டு

கடிந்தாலும் உன் அகத்தின்

வாழ்த்தொலியே

இசைக்கிறது !

 

தாயே  நீ

தலையில்

குட்டிய தழும்புகளில்

தலைமைப் பண்புகளின்

பூச்சரம் !

 

நீ நடைபயிலச்

செய்த கால்கள் இன்றும்

நல்ல பாதை நோக்கியே

பயணிக்கின்றன !

 

உன் தாய்மைப் பண்புக்கு

வாழ்த்துக் கவிதை தர

தமிழே கொஞ்சம்

வெட்கப்படுகிறது ;

அவளும் ‘தாய்’த்தமிழ்

என்பதாலா !

 

புகழ்ச்சி என்ற ஒன்றை

நிவிர் இருவரும்

வேண்டாம் என்பதாலா !

எங்கோ ஒலிக்கும்

நீ பெறாத குழந்தையின்

அழுகுரலுக்கே

உன் அமுதப்பால்

சுரக்கிறதே !

 

அதுதான் தாய்மையின்

எல்லைகளற்ற

தியாகப் பண்பா !

 

 

தாய்மையே !

என் போன்ற மனிதர்களையும்

நீ சுமக்கிறாய் என்ற

ஓரே காரணத்தினால்தானோ

மண் மாதாவும் உலகை

சுமக்கிறாள் !

 

முத்தாய்ப்பாய்ச் சொல்கிறேன் !

நீ பதித்த அன்பின்

முத்தங்களால் தான்

இன்றும்

மானுடமே வாழ்கிறது !

 

 

மு. பஷீர்மஸ்கட்

News

Read Previous

இலவச மருத்துவ முகாம்

Read Next

நிதானம் எனும் அழகிய பண்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *