நிதானம் எனும் அழகிய பண்பு

Vinkmag ad

நிதானம் எனும் அழகிய பண்பு

சிராஜுல் ஹஸன்

மாலை நேரம். அலுவலகத்திலிருந்து களைத்துப் போய் வீடு திரும்புகிறீர்கள். சிடுமூஞ்சி மேலாளருடனும், முடிவே இல்லாத கோப்புகளுடன் மல்லுகட்டிவிட்டு எரிச்சலுடன் வருகிறீர்கள்.

உங்கள் அன்பு மனைவி முகம் கழுவி, தலைவாரி, பளிச்சென்று உடை உடுத்தி, புன்னகை தவழும் முகத்துடன் உங்களை அன்போடு வரவேற்று, உங்கள் களைப்பு தீர காப்பியும், சிற்றுண்டியும் பரிமாறுவாள் என்ற எதிர்பார்ப்புடன் வருகிறீர்கள்.

ஆனால் வீட்டுக்குள் நுழைந்ததுமே உங்கள் எரிச்சல் இன்னும் பல மடங்காய் எகிறுகிறது. வீடு முழுக்க ஒரே குப்பை! துணிமணிகள் எல்லாம் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. தலைமுடி கலைந்து, ஓர் அழுக்குப் புடவையுடன், வேர்க்க விறுவிறுக்க உங்கள் மனைவி சமையல் அறையில் ஏதோ வேலையாக இருக்கிறார். குழந்தை ஒருபக்கம் அழுது கொண்டிருக்கிறது. எதுவுமே ஒழுங்கில்லை.

இப்பொழுது என்ன செய்வீர்கள்?

மனைவியை அழைத்து ‘காச் மூச்’ சென்று கத்தி சண்டை போட்டு வீட்டையே களேபரமாக்கலாம் அல்லது நீங்களே துடைப்பம் எடுத்து வீட்டைப் பெருக்கித் தூய்மை செய்யலாம். உங்கள் மனைவியிடம் சென்று ஏதேனும் பிரச்சனையா? ஏன் குழந்தை அழுது கொண்டிருக்கிறது? நான் ஏதேனும் உதவி செய்ய வேண்டுமா? என்று அன்புடன் விசாரித்து உதவலாம். குழந்தையைத் தூக்கி அழுகையை நிறுத்த முயற்சி செய்யலாம்.

நம்மில் பெரும்பாலானவர்கள் முதலில் சொல்லியபடிதான் வீட்டில் நடந்து கொள்கிறார்கள். அவர்களிடம் நிதானம், பொறுமை என்பதெல்லாம் மருந்துக்கும் இருக்காது. மனைவியிடம் எரிந்து விழுந்து, குழந்தையைத் திட்டி, ஓர் இனிய மாலைப் பொழுதை நரகமாக்கிக் கொள்வார்கள்.

இரண்டாவதாகச் சொன்ன வழிமுறையைக் கடைபிடித்துப் பாருங்கள். வீட்டில் மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் குறைவே இருக்காது. அந்த மகிழ்ச்சியைத் தருவது நிதானம் எனும் பண்பு தான்.

இஸ்லாமும் அதைத்தான் வலியுறுத்துகிறது.

ஒருமுறை பஹ்ரைனில் இருந்து இருபது, முப்பது ஒட்டகங்களில் பயணம் செய்து, மிகப்பெரிய குழு ஒன்று மதீனாவுக்கு வந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்களை சந்தித்துப் பேச வேண்டும் என்பதே அந்தக் குழுவின் நோக்கம்.

மதீனாவின் எல்லையை அடைந்ததுமே, ஒட்டகங்களை வேகமாகச் செல்லும்படி முடுக்கி விட்டார்கள். புழுதியைக் கிளப்பிக் கொண்டு அவை விரைந்தோடின.

அண்ணல் நபிகளார் தங்கியிருக்கும் இடம் வந்ததும் திபுதிபுவென்று ஒட்டகங்களில் இருந்து குதித்து அவரைக் காண நெருக்கியடித்துக் கொண்டு ஓடினர். அவர்கள் நீண்ட தொலைவு பயணம் செய்து வந்திருந்தால் ஆடைகள் புழுதிபடிந்து, கசங்கி இருந்தன. தலைமுடி பரட்டையாகக் காட்சியளித்தது. அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அண்ணலாரின் திருமுகத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.

அதே சமயம்-

அந்தக் குழுவின் தலைவராக வந்த முன்ஜித் பின் ஆயித் என்பவர் கொஞ்சமும் அவசரப்படவில்லை. ஆரவாரம் செய்யவில்லை.

அமைதியாக ஒட்டகங்களைக் கட்டிப் போட்டார். களைப்புடன் இருந்த அந்த வாயில்லாப் பிராணிகளுக்கு நீர் புகட்டினார். அவற்றுக்குத் தேவையான தீவனங்களை இட்டார்.

பிறகு தாம் கொண்டு வந்த பொருள்களை எல்லாம் ஓரிடத்தில் ஒழுங்காக அடுக்கி வைத்தார். குளித்து முடித்தார்; இருப்பதில் நல்ல ஆடை ஒன்றை எடுத்து அணிந்துக் கொண்டார்; நறுமணம் பூசினார்; தலையை ஒழுங்காக வாரிக் கொண்டார்.

பிறகு நிதானமாகவும், கண்ணியமாகவும் அண்ணல் நபிகளாரைச் சந்திக்க வந்தார்.

அண்ணல் நபிகளாருக்கு முன்ஜிரின் நிதானமும், மிடுக்கும் மிகவும் பிடித்து விட்டன. அவரிடம் அண்ணலார் கூறினார்:- ”உங்களிடம் இரண்டு பண்புநலன்கள் இருக்கின்றன. அவற்றை இறைவனும் விரும்புகிறான். முதலாவது பொறுமை, இரண்டாவது நிதானம்.”

எந்த வேலையையும் அவசரப்படாமலும், ஆர்ப்பாட்டம் செய்யாமலும், செய்து முடிப்பது அண்ணலாருக்குப் பிடித்தமானதாகும். தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டு ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றப் போகும்போது கூட நிதானத்தை கடைப்பிடிக்கும்படி அண்ணலார் அறிவுறுத்தியுள்ளார்.

இப்னு அப்பாஸ் எனும் நபித்தோழர் அறிவிக்கிறார்- “அரஃபாத் நாளின் போது (ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல்நாள் அரஃபாத் நாள் ஆகும்) நாங்கள் அண்ணல் நபிகளாருடன் ஒட்டகங்களில் பயணித்துக் கொண்டிருந்தோம். அப்போது பயணக் கூட்டத்தில் வந்த சிலர் முந்திச் செல்ல முயன்று ஒட்டகங்களைத் தட்டி விட்டனர். சத்தம் போட்டனர். ஒரே களேபரம் ஆகிவிட்டது.

முன்னால் சென்று கொண்டிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திரும்பி சத்தமும் கூச்சலும் வந்து கொண்டிருந்த திசையை நோக்கி சொன்னார்கள்: ‘ மக்களே நிதானத்தைக் கடைபிடியுங்கள். ஏனெனில் வேகமும், அவசரப்படுவதும் நன்மை தராது.

தேவையில்லாமல் அவசரப்படுவதும், விவேகமின்றி வேகமாகச் செயல்படுவதும் நன்மைக்கு வித்திடாது. அமைதியும், நிதானமும் தான் இறைநம்பிக்கையாளர்களுக்கு அழகாகும். ஆம்… இஸ்லாம் கற்றுத் தரும் இனிய பண்பாடுகளில் ஒன்று நிதானம் எனும் அழகிய பண்பு.

 

நன்றி :

நர்கிஸ் – பிப்ரவரி 2015

News

Read Previous

தாய்மை !

Read Next

உடல் பருமனை குறைக்க ….

Leave a Reply

Your email address will not be published.