காதல் செய்யும் நேரம் இது

Vinkmag ad

காதல் செய்யும் நேரம் இது
———————————————-
இலையாய் கிளையாய் எழுகின்றேன்
இள வெயிலாய் நீ விழுவாயா?
கலையாய் சிலையாய் நிற்கின்றேன்
கடைக்கண்ணால் எனைக் காண்பாயா?

அலையாய் கரையில் விழுகின்றேன்
அன்பே பாதம் நனைப்பாயா?
மலைமேல் மலராய் பூக்கின்றேன்
மேனியில் பனியாய் வியர்ப்பாயா?

பொங்கும் புனலாய் நீ எழுந்தால்
பூமியாக நான் தவமிருப்பேன்
சந்தன வாசம் நீ முகிழ்ந்தால்
சகதி ஆனாலும் சுகித்திருப்பேன்……

ஈச்சை மரமென நீ வளர்ந்தால்
எரிக்கும் பாலையும் குளிரென்பேன்
முத்தே உன்னைக் குளிப்பதற்கு
மூச்சையும் சற்றே மூடி வைப்பேன்…..

முழுமதி உன்முகம் நெருங்குதற்கு
முகிலில் அமர்ந்தே மெனக் கெடுவேன்
உந்தன் தரிசனம் கிடைக்கும்வரை
விண்மீன் எத்தனை கணக்கெடுப்பேன்…

தென்றல் காற்றென நீ வந்தால்
தேகம் முழுதும் திறந்து வைப்பேன்
உன்றன் ஐவிரல் தீண்டுதற்காய்
உயிரையும் விலையாய் தந்திருப்பேன்….

இலவு காத்த கிளி….. கவிமகன் காதர் …..

News

Read Previous

சிந்தனை வரிகள்

Read Next

பசி தாகம் உறக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *