கவிதை : ஞானப்பெண்ணே ! (பி.எம். கமால் , கடையநல்லூர்)

Vinkmag ad
அத்தாவின் காலடியில் ஞானப் பெண்ணே !-சுவனம்
அமைந்திருக்க வில்லையடி ஞானப் பெண்ணே !
முத்தான உன்பாதத் தடியிலன்றோ -சுவனம்
முடங்கிக் கிடக்கிறது  ஞானப் பெண்ணே !
கணவனைப் பேணிக்கொள் ஞானப் பெண்ணே !-இரு
கண் அவன் உனக்கு ஞானப் பெண்ணே !
சீரியலைப் பார்க்காதே ஞானப் பெண்ணே-உன்னைச்
சீரழித்து விடுமது ஞானப் பெண்ணே !
திருமறையைத்  தினம்  ஓது  ஞானப்பெண்ணே-உன்னைத் திருத்தி வழி காட்டிவிடும் ஞானப் பெண்ணே !
கண் பசுவைக் கண்டபடி ஞானப் பெண்ணே !-நீ
கட்டவிழ்த்து விடவேண்டாம் ஞானப் பெண்ணே !
மண் போலப் பொறுமை கொண்ட ஞானப் பெண்ணே !-நீ
மன்னிக்கப் பழகிக்கொள் ஞானப் பெண்ணே !
அண்ணாந்து பார்க்காதே ஞானப் பெண்ணே -உன்னை
அகிலத்தார் போற்றுவார் ஞானப் பெண்ணே !
உன்தலை குனிந்தால் ஞானப் பெண்ணே !-வாழ்க்கை
உச்சியைத் தொடுமடி ஞானப் பெண்ணே !
 பணிவாக  நடந்துகொள் ஞானப் பெண்ணே !-ஒரு
பாவம் வந்து சேராது ஞானப் பெண்ணே !
தாய்மைப்  பதவியில் ஞானப் பெண்ணே !=உன்
தகைமை கூடுதடி  ஞானப் பெண்ணே !
வாய்மைத் தாம்பூலம் ஞானப் பெண்ணே !-உன்
வாய் மணக்கச்  செய்யுமடி  ஞானப் பெண்ணே !
ஐவேளைத் தொழுகையில் ஞானப் பெண்ணே !-உன்
பொய் வேளை  பொசுங்கிடும்  ஞானப் பெண்ணே !
சலவாத்தை ஓதிக்கொள்  ஞானப் பெண்ணே !-தினம்
சலாமத்தைப் பெற்றிடுவாய் ஞானப் பெண்ணே !
கலிமாவில் விளக்கேற்று  ஞானப் பெண்ணே !-உன்னைக்
கண்டுகொள்ள உதவுமது ஞானப் பெண்ணே !
கோள் சொல்லித் திரியாதே ஞானப் பெண்ணே !-உன்னைக்
கொளுத்தி எரித்துவிடும் ஞானப் பெண்ணே !
அகரம்நீ குடும்பத்தில் ஞானப் பெண்ணே -வாழ்க்கைச்
சிகரம்நீ தொடவேண்டும் ஞானப் பெண்ணே !
போதிமரம் தேவையில்லை ஞானப் பெண்ணே -நீ
ஓதி மறை உணர்ந்துகொண்டால் ஞானப் பெண்ணே !
பாடுபடப் போனவனை ஞானப் பெண்ணே -நீ
பழி சுமக்க வைக்காதே ஞானப் பெண்ணே !
காலம் கெட்டுக் கிடக்கிறது ஞானப் பெண்ணே !வீட்டுக்
கதவைச் சாத்தி வைக்க வேணும் ஞானப் பெண்ணே !
புனிதம் கெட்டுப் போகாமல் ஞானப் பெண்ணே !-உன்னைப்
போர்த்தி வெளி வரவேணும் ஞானப் பெண்ணே !
ஊருலகம் உன்னைப் பற்றி ஞானப் பெண்ணே !-மிக உயர்வாகப் பேசவேணும் ஞானப் பெண்ணே !
உன்பெயர் கண்ணாடி ஞானப் பெண்ணே !-அது
உடைந்துவிடக் கூடாது ஞானப் பெண்ணே !
தாய்வீட்டுச் சீதனமாம் ஞானப் பெண்ணே !-உயர் தன்மானம் இழந்திடாதே ஞானப் பெண்ணே !
ஆண்மிருகம் வலைவிரிக்கும் ஞானப் பெண்ணே -அதில்
அகப்பட்டு விடாதே நீ ஞானப் பெண்ணே !
புலையர் புல்லர் போக்கிரிகள் ஞானப் பெண்ணே !-அவர்
போதனையில் மயங்கிடாதே ஞானப் பெண்ணே !
தொழுகை நோன்பைக் கேடயமாய் ஞானப் பெண்ணே !-நீ
தூக்கிவைத்தால் உனைக்காக்கும் ஞானப் பெண்ணே !
அழுகைசிந்தி கண்ணீரால் ஞானப் பெண்ணே !-நீ
ஆண்டவனை வேண்டிநிற்பாய் ஞானப் பெண்ணே !
இறைவழியில் செலவு  செய்வாய் ஞானப் பெண்ணே -அது
இகபரத்தில் காக்குமடி ஞானப் பெண்ணே !
மறைவழியும் நபிமொழியும் ஞானப் பெண்ணே -உன்னை
மாண்படையச்   செய்யுமடி ஞானப் பெண்ணே !
அன்னை கதி  ஜாவழியில்  ஞானப் பெண்ணே !-உன்னை ஆக்கி நடந்  தால்  வெற்றி ஞானப் பெண்ணே !
உன்னைப் பாத்தி மாவாக ஞானப் பெண்ணே -நீ
உருவாக்கிக் கொள்ளவேணும் ஞானப் பெண்ணே !

News

Read Previous

வேராக்கு ! நீராக்கு ! (பி எம். கமால், கடையநல்லூர்)

Read Next

சோப‌னாராணி பில்லிங் ஸ்டேஷ‌ன், சோப‌னாராணி மெட்ட‌ல் மார்ட் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *