வேராக்கு ! நீராக்கு ! (பி எம். கமால், கடையநல்லூர்)

Vinkmag ad
தொழப்போனால் சாத்தான்
தொடர்ந்து வருகின்றான் !
பழச்சாறு போலஎங்கள்
பக்தியினை உறிஞ்சுகிறான் !
ஆசைகளைக் கூட்டிவந்து
 அம்மணமாய்  எங்கள் முன்னே
ஆடவைத்து வலைவிரித்து
அதில்விழவும் செய்கின்றான் !
பெண்களைப் பேயாக்கி
 பின்தொடரச் செய்கின்றான் !
கண்களின் திரைவிலக்கி
காட்சிகளை விரிக்கின்றான் !
கோபத்தீ பற்றவைத்து
கொதித்தெழவும் வைக்கின்றான் !
பா வத்தீ நரகிற்கு
பாதைகளை அமைக்கின்றான் !
அறம்பேசும் நாவுகளைப்
புறம்பேச வைக்கின்றான் !
அடுத்தவன் முதல்பறிக்க
ஆசைவெறி யூட்டுகின்றான் !
தர்மத்தின் வாசல்களில்
தடைக்கல்லாய் நிற்கின்றான் !
கஞ்சத் தனமள்ளிக்
கைகளிலே தருகின்றான் !
ஆன்மாவில் மிருகமாய்
அலைந்தவன் திரிகின்றான் !
ஆளுமை தனக்கென்றே
அகங்காரம்  கொள்கின்றான் !
நோன்புக்  காலங்களில்
நுழைந்து உயிருக்குள்
வீண்பாவம் செய்வதற்கு
விதைகளைத் தூவுகின்றான் !
கலிமாவின் வெளிச்சத்தில்
 காண்பதற்கு இறையவனை
இருட்டுத் திரையிட்டு
எங்களை மறைக்கின்றான் !
நெருப்பு அவன் ; ஆதலினால்
நெஞ்சைக் கொளுத்துகிறான் !
நீராக இறைவாநீ
நெஞ்சுக்குள் வந்தமர்வாய் !
சென்நெருப்புச்  சாத்தானை
சிதைத்து அழிப்பதற்கு
கலிமாவில் இறைவாஉன்
காதலெனும் நீர் ஊற்று !
ஆன்ம மரத்திற்கு
அடிவேராய்  இருப்பவனை
தூராக்கு ! உன்னருளை
வேராக்கு  ! நீராக்கு !

News

Read Previous

முதுமை

Read Next

கவிதை : ஞானப்பெண்ணே ! (பி.எம். கமால் , கடையநல்லூர்)

Leave a Reply

Your email address will not be published.