கவனிக்கவேண்டிய காருண்யம்..

Vinkmag ad
கவனிக்கவேண்டிய காருண்யம்.. (கவிதை) வித்யாசாகர்!
1
கொசு பாவம்
பசிக்குத்தான் ரத்தம் குடிக்கிறது;

நாம்தான் கொலைக்காரர்கள்
வலிக்கு பதிலாக –
கொசுவையே கொன்றுவிடுகிறோம்.

கொசு
அதன் இயல்பில்
அது சரி;

எனில்  –

நாம்?
——————————————————

2

இடத்தை
சுத்தம் செய்வதாக
நினைத்து
வெட்டிய
மரங்களில்லா இடத்தில்
எத்தனை மரணம் (?)
எத்தனை மரணம்.. ?!!
——————————————————

3
புற்களை
பூஞ்செடிகளை
காடுகளை அழித்து அழித்துப்
பரவிய நாம் –
சிறுத்து சிறுத்தேப் போகிறோம்,

மனிதம்
அறுந்து அறுந்து
மறைகிறது..
——————————————————

4
வீடுகளை
நினைக்கமறந்த இடத்தில்
கோயில்களைக் கட்டி
என்ன பயன்?

மனிதர்களை
அலட்சியம் செய்துவிட்டு
கடவுளை கைதொழுது
என்னபயன்?

மனிதம் ஒட்டாத
மண்மீது மலையைக் குடைந்து
கொணர்ந்தக்
கோவில்களெல்லாம்
மன்மீதான மனசாட்சியின்மையின்
கனம்; கனம் அவ்வளவுதான்;

அதற்காக
கோயில்களின் கதவுகளை
அடைத்துவிடாதீர்கள்,

புதிதாகத் திறக்கும்
கோயிலின் கதவுகளை
மனக்கதவின் வழியே சென்று
திறக்க முயலுங்கள்..

அப்போதங்கே –
திறந்த மனதுள்
தெய்வமிருப்பது தெரியலாம்,
கோயில்கள்
இருப்பது –
இருப்பதோடும் இருந்துப்போகலாம்..
——————————————————

5
வயிற்று வலி
தலை வலி
நெஞ்சு வலி
தனக்கு வந்தால் மட்டுமே
துடிக்கநினைக்கும் உலகிற்கு
கவலையேயில்லை –

ஒரு ஏழைச் சிறுவனின்
பசி பற்றியும்;

ஒரு ஏழ்மைச் சிறுமியின்
படிப்பைப் பற்றியும்..
——————————————————

6

பொதுக் கழிவறைகளுக்கு
வாயிருந்தால்
காரி உமிழ்ந்துவிடும்
மனிதர்களின் முகத்தில்..

நிறைய ஜென்மங்களுக்குப்
புரிவதேயில்லை –
தான் உபயோகித்த இடத்தை
தானும் சுத்தமாக வைத்துக்கொள்ள
வேண்டுமென்று;

போகட்டும்..
போகட்டும்..

குறைந்தபட்சம்
ஒரு வாலி நீரேனுமள்ளி

ஊற்றிவிட்டுப் போவார்களெனில் (?)

அதுவரை –
கழிவறைகளுக்கு
வாயில்லாமலே போகட்டும்!!
——————————————————

7

இரவில் தெரியும்
நட்சத்திரங்களைப் போலவே
நமது வாழ்வின் நாட்களும்
கூடியும் குறைந்துமே இருக்கிறது,

அதிலிருந்து
ஒன்றிரண்டை யெடுத்து
எளியோருக்காக
பயன்படுத்திப் பாருங்களேன்;

ஒன்றிரண்டு
நட்சத்திரங்களேனும்
மோட்சம் பெற்றுக்கொள்ளட்டும்!!
——————————————————

8

முருங்கைக் கீரை பறித்து
விற்கிறாள்;
அரைக்கீரை முளைக்கீரை
என்றெல்லாம் குரலெழுப்பிப்
போகிறாள்,
மாம்பழம்
முருக்கு  சுட்டுக்கூட
விற்பாளவள்;

அவளின் கூன்விழுந்த
முதுகின் மீதேறி
தலைநரைத்த மயிர்களோடு ஆடி
முதுமை வலிப்பதையும் அறியாது
தனிமை சுடுவதும் புரியாமல்
வெயில்  மழையில் தேயுமவளின்
கால்களையும் கவனிக்காது,

அவளைக் கடந்துபோய்
பிறரிடம் கைநீட்டி
பிச்சை வாங்கி
வயிற்றை  சோம்பலால் நிரப்பி
வயதை சுயநலத்தால் தீர்க்கும்
குமரிகளையும்
குழந்தைகளையும்
உழைக்க முடிந்தவர்களையும் காண்கையில் –

செருப்பெடுத்து என் தலையில்
ஆயிரம் அடி அடிக்கிறது என் மனசு..

வளரும்  சமூகம் சாய்ந்துகொண்டே
வளர்வதற்கு
நானும் காரணம் என்கிறது,

மறுக்கவே துணியாமல்
மேலேவிழும்  செருப்படிகளோடு
மிக வேகமாக நடக்கிறேன்; அந்தப்

பாட்டியிடமிருந்து
ஒரு மாம்பழத்தையோ
ஒரு கட்டு கீரையையோ
ஒருபா குறைத்து கேட்டு வாங்கிக்கலாம்..

தெருவில் நாளை நம்
பிள்ளைகள் பிச்சை எடுத்தால்
போட உதவும்..
——————————————————

9

நாடு
பிரித்துவிட்டேன்,
மொழி
பிரித்துவிட்டேன்,
மதம்
பிரித்துவிட்டேன்,
சாதி
அட நன்றாகவே பிரித்துவைத்திருக்கிறேன்;

வீட்டில் உற்றுப் பார்த்தால்
ஐயோ; அங்கே ஆயிரம் பிரிவு..

அதைப் பற்றியெல்லாம்
எனக்கெதற்கு வெட்கம் மானம் சூடு
சொரனையெல்லாம்.. (?)

பிரிவிலும்
பிளவிலும்
விழுந்து எழுந்து எப்படியோ
சாமி கும்பிட்டு பெரியாளாகி விடலாமென்றோ,
திரைப்படம்  கண்டு
அறிவைப் பெருக்கிக் கொள்ளலாமென்றோ,
உழைக்காவிட்டாலென்ன
அம்மா உணவகம் போதுமென்றோ
சாமிக்கும் பேயிக்கும்
போலீசுக்கும் திருடனுக்கும் பயந்து பயந்து
ஒதுங்கி ஒதுங்கி,
வயிறு நிறைய சுயநலத்தையும்
மனசு நிறைய மாசுகளையும் ஏற்றிக்கொண்டு
மாடுகள் இழுத்து ஓடும்
இலக்கு தெரியாப் பயணத்தில்
மெத்தப் படித்தவனாகவும்
யாரோ விரட்ட விரட்ட
தன்னை பெரிய அறிவாளி என்று எண்ணியவாறு
ஓடும் –
எனது பிள்ளைக்கு நான் அப்பா.. அம்மா..

அவ்வளவுதான்’
வேறென்ன வேண்டும்?

ஒருவேளை –
குபீரென தீப்பற்றி ஏதேனும்
வயிற்றிற்குள்ளோ
மனதிற்குள்ளோ எரிந்தால்
காலடியில் கிடக்கும் மனசாட்சியை
போட்டு ஒரு மிதி மிதித்துக்கொண்டு
மீண்டும்  வேறொரு வழி தேடி
ஓடிக்கொண்டே யிருப்போம்..

எங்கோ யாருக்கோ
எப்போதேனும் ஞானம் வரும்
வந்தால் அப்போது வந்து அவர்
நம்மை
நம் நாட்டை
உலகையெல்லாம் திருத்திக் கொள்வார்..

நமக்கு
நம் சாதி முக்கியம்
மதம் ?
முக்கியம்
இனம் முக்கியம்
இருக்கும் உயிர் விட்டுப்பிரியாதவரை
இப்படியே வாழ்ந்து போனால் போதும்;

சூரியன் நிலா மழை
சிட்டுக்குருவி
கடல் காற்று இலை
மரம்
சன்னல்கள்
அது வழியே தெரியும் உலகம்
உலகத்துள் நாம்
நாமிருக்கிறோம்
உலகத்துள் நாமிருக்கிறோம்
உயிரோடிருக்கிறோம்
அது போதும்
அது போதும்..

………..
………..

10
இரவில் நடக்கிறேன்
எத்தனைப் பூச்சிகள்
இறந்தனவோ தெரியவில்லை;

இரவில் நடக்கிறேன்
எத்தனை மலர்கள்
கசங்கினவோ தெரியவில்லை;

இரவில் நடக்கிறேன்
எத்தனைச் சுவடுகள்
கலைந்தனவோ தெரியவில்லை;

இரவில் நடக்கிறேன்
இன்னும் –
எத்தனைக் காலத்திற்கு
இருளில்  நடப்பேனோ தெரியவில்லை!!

——————————————————
வித்யாசாகர்

News

Read Previous

ஐங்கோண வடிவில் ஆரஞ்சு பழங்கள்

Read Next

இணைய வழியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்

Leave a Reply

Your email address will not be published.