கனக சுப்பு ரத்தினக் கவிஞன்

Vinkmag ad
பாவேந்தரின் பிறந்தநாளையொட்டி 2008ம் ஆண்டு எழுதிய கவிதையை இங்கே மீண்டும் இடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்:
கனக சுப்பு ரத்தினக் கவிஞன்
<><><>()()<><><>
மீசைக் கவிக்கு மிகவும் நெருங்கிய
நேசக் கவிஞன், தமிழைப் புயலாய்
வீசும் கவிஞன், வெற்றிக் கவிஞன்
தாச னெனப்பெயர் கொண்ட போதிலும்
இராசக் கவிஞன், இரசக் கவிஞன்!
தமிழ்க்குரு திக்குள் தமிழுயிர் வளியைச்
செலுத்திய எங்கள் வலுத்திகழ் கவிஞன்!
 
தமிழன் வேரில் தமிழ்நன் னீரைப்
பாய்ச்சித் தமிழ்க்கோல் ஓச்சிய கவிஞன்!
காப்பியம், நாடகம், கவிதை யாவினும்
தீப்பொறி பறக்கத் தீட்டிய கவிஞன்!
 
ஓடப் பர்களை உதையப் பராக்கப்
பாடக் கிளம்பிய சாடற் கவிஞன்!
சோலையும் எந்திரச் சாலையும் தந்தவர்
உழைப்பைப் புகழ்ந்த செழிப்புக் கவிஞன்!
 
இங்கினி இன்னல் தங்குவ தில்லை
சங்கே முழங்கெனச் சாற்றிய கவிஞன்!
தன்மனை என்றும் தன்சுகம் என்றும்
கடுகு போலக் குறுகிய மனத்தவர்
நெல்லிக் காயாய் நல்ல பூசணியாய்
நேயத் தாலே நெஞ்சம் விரியும் உ
பாயம் சொன்ன பண்புக் கவிஞன்!
பாரதிப் பட்டரை தன்னில் தட்டிய
கூர்வாள் எங்கள் கோபக் கவிஞன்!
தமிழ்பழிப் போர்க்குச் சாபக் கவிஞன்!
 
இவன்மேல் இவன்கீழ் எனப்பிரிப் போரைச்
சவமாக் கிவிடும் நவயுகக் கவிஞன்!
கோடை யிடியும் குமுறும் சிங்கமும்
சோடை போகவே உறுமிய கவிஞன்!
கனக சுப்பு ரத்தினக் கவிஞன்
கனகக் கவிஞன்! ரத்தினக் கவிஞன்!
 
இவனை யின்று புகழ்தல்
எனக்குக் கிட்டிய கணக்கிலாப் பேறே!
 
அன்புடன்
மதுரபாரதி

News

Read Previous

ஹாமிது அலிக்கு ஆண் குழந்தை

Read Next

வா.மு.கோமுவின் பத்துக் கதைகள்

Leave a Reply

Your email address will not be published.