எங்கே போகிறேன் நான்.. ?

Vinkmag ad

எங்கே போகிறேன் நான்.. ? (கவிதை) வித்யாசாகர்!

 

தொரு கடலழிக்கும் காடு
காடெங்கும் தேவதைகள்
கடல்மறிக்கும் தேவர்கள்
தேவர்களின் காலடியில்
தேவதை பெற்றுப்போட்ட மிருகம் நான்;

வானெங்கும் நட்சத்திரம்
காடெங்கும் கர்ஜிக்கும் மிருகம்
வான்முட்டும் கட்டிடத்தின் கீழேயும் மேலேயும்
எங்கோ ஒருசிலராய் வாழும் கருப்பு வெள்ளை
மனிதர்கள்..

மனிதர்கள்
பெரிய மனிதர்கள்
இரண்டு கொம்பில்லை
பறக்க இறக்கையில்லை
மூக்கைப் பிடித்துநின்றால் சீவன் போகும்
ஆனாலும் மனிதத்தை
தொலைத்துவிட்டு தானென்று அகந்தையில்
ஆடும்
அழியும்
அட்டகாச மனிதர்கள்..

மிருகங்கள் கூடப் பாவம்
இயல்பை
ஏற்று நடக்கிறது
மனிதன்தான் இயல்பிற்கும் எதிராய் மாறும்
பெருத்த மிருகமாய்
சின்ன இதயமாய்
சிலிர்ப்போடு வாழ்கிறான்..

என்றாலும் –
இதயத்திற்கும் இங்கே பஞ்சமில்லை
துடித்தால் துடிக்கும்
அழுதால் அழும்
கொஞ்சினால் கொஞ்சும்
கொஞ்சினால் மட்டுமே கொஞ்சும்
சரியென்றும் தவறென்றும் நிறைய இதயங்கள்..

நஞ்சு கலந்து
நஞ்சு நிறைந்து
நஞ்சு அறுக்க
அறுபட்டு அறுபட்டு
ஐம்புலன் கட்டி
மிருகங்களுக்கு முன்னே தன்னை
பார் நான் மனிதன் எனும்
பெருமையோடு மட்டும் காட்டி கடக்க
நிறைய
இதயங்களுண்டு..

இதயத்தில் ஆசையும்
அறமும்
அச்சமும்
உண்மையும் பொய்யுமாய் நிறைய மனிதர்களுண்டு..

எல்லோரையும் அன்பினால்வளைத்து
வாஞ்சையோடு அனைத்துக் கொண்டேப்
போகிறேன்..

எங்கே போகிறேன் நான்?

யார் யாரோடோ
என்னென்னவோ பேசி
ஏதேதோ கேட்டு
எதற்கென்று முழு இலக்கு புரியாமல்
புரிந்தளவை தொடமுடியாமல்
தொடும்வரை அன்புசெய் அன்புசெய்
அன்புசெய்யெனும் ஞானத்தோடு மட்டும் –
நடப்பதையெல்லாம்
மறந்தும் மன்னித்தும்
மனிதத்தைத் தேடியும் மட்டுமே
ஓடிக்கொண்டேயிருக்கிறேன்..

இலக்கு எனக்குக் கிடைக்கையில் – எனது
இன்னொரு தலைமுறை நாளை
அவ்வழியே கடந்து
தனது வாழ்வை கம்பீரமாய் கண்ணியமாய் வாழ்ந்துமுடிக்குமென்று
நம்பிக்கை வருகிறது..
நம்பிக்கை வருகிறது..
நம்பிக்கை வருகிறது..
—————————————————-
வித்யாசாகர்

News

Read Previous

முதுகுளத்தூர் அருகே நடத்தை சந்தேகத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: கணவர் கைது

Read Next

வயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்!!

Leave a Reply

Your email address will not be published.