உவமைகளில் உவமை இல்லா நபி

Vinkmag ad
 
(பி. எம். கமால், கடையநல்லூர்)
  

(பி. எம். கமால், கடையநல்லூர்)

 

 

 

 

 

உவமைகள் எல்லாம்

ஓரிடத்தில் ஒன்றுகூடி

உட்கார்ந்து ஒப்பாரி

ஓலம்போட் டிருந்தன !

அருகில்

சென்று நான்

கேட்டேன் சேதி என்னவென்று

உத்தம நபிகளுக்கு

உவமித்துச் சொல்வதற்கு

தங்களில் யாருக்கும்

தகுதியே இல்லை என்று

ஒப்பாரி  வைப்பதாய்

ஒப்புக் கொண்டன !

 

ஆமாம்-

உத்தம நபிகள்

உவமைச் சாம்பலில்

ஒட்டாத விளக்கு

ஒவ்வொரு விடியலின்

ஒப்பற்ற கிழக்கு !

 

உவமைக் கடுகுகளில்

உத்தம நபிக்கடலை

உள்ளடக்க யாரால்தான்

உலகத்தில் முடியுமிங்கே ?

 

வானத்துச் சூரியனை

வாரி எடுத்து வந்து

கோமான் நபியின்

கூரிய விழிமுன்  நிறுத்தினேன் !

கூரிய  விழியன்

வீரிய ஒளிபட்டு

சூரியன் அங்கே

சுருண்டு போனது !

 

பூரணச் சந்திரனை

பூமிக்கு எடுத்து வந்து

பூமான் நபியின்

பொன்முகத்தைக் காட்டினேன் !

வானிலவு நாணி

வடிவிழந்து போனது !

 

மின்னலைஒடித்து வந்து

அண்ணலைப்பாரென்றேன் !

உச்சி முதல் பாதம்வரை

உற்றுப் பார்த்து விட்டு

தோற்றேன் தூய நபி

தோற்றத்தைக் கண்டென்று

துள்ளிப்போய் மேலே

தொங்கியது வானத்தில் !

 

அத்தர் மணங்களை

அள்ளி எடுத்து வந்து

அண்ணலின் முன்னே

அணிவகுத்து நிறுத்தினேன் !

கஸ்தூரி வாடை

கமழுகின்ற நபிகள்முன்

அம்    மணங்கள்  எல்லாம்

அம்மணம் ஆயின !

 

உலகத்து மலைகளை

ஒன்று திரட்டி வந்து

ஒப்பற்ற நபி உள்ள

உறுதிக்கு முன் நிறுத்தி வைத்தேன் !

மலைகள் நிலை குலைந்து

மண் துகளாய் மாறியது !

 

கார்மேகக் கூட்டத்தை

கைகளில்  அள்ளிவந்து

வாரி வழங்கும் நபி

வள்ளண்மை முன் நிறுத்தினேன் !

மாரி  வழங்குகின்ற

அம் மழை மேகங்களோ

நாணித் தலைகுனிந்து

நானிலத்தின் மேலேறின 1

 

வானத்து வியர்வைத்

துளி விண்   மீன்களை

பூமி வலையில்நான்

போட்டு எடுத்து வந்தேன் !

தீனின் பயிர்வளர்க்க

தியாகத்தால் உழைத்த எங்கள்

வானின் அருட்கொடையாம்

வடிவொளிரும்  நாயகத்தின்

தேக நிலப்பரப்பில்

திரண்டிருந்த வேர்வைகண்டு

திகைத்துப்போய் விண்மீன்கள்

திசைகொன்றாய் ஓடினவே !

 

கத்தும் கடல்களை நான்

கடுகினில் அடக்கி வந்து

முத்து நபி நாயகத்தின்

மூதறிவின் முன்  வைத்தேன்

அண்ணல் நபி நாயகத்தின்

அறிவுக்கு முன் அந்த

கடலெல்லாம் துளி என்று

உடல் குறுகி ஓடியது !

 

மாநிலத்தில் மலைகளில்

மற்றுமுள்ள இடங்களில்

 

உள்ள மரங்களை  நான்

ஒடித்து எடுத்து வந்து

அண்ணல் நபிகளின்

அறங்களின்

முன் நிறுத்தி வைத்தேன் !

அற ங்களோ  ஆகாய

முகடுக்கும் மேலே

மரங்களோ பாதாளப்

பள்ளத்தின் கீழே !

 

நீருக்குள் உறங்காமல்

நீந்துகின்ற மீனினத்தை

பாருக்குள் உறங்காத

பயகம்பர் நபிகளிடம்

அலைக்கரத்தில் அள்ளிவந்து

ஆஜர் படுத்தி வைத்தேன் !

அல்லும் பகலும்

ஆன்மா உறங்காத

அண்ணல் நபியின்

அக விழியைக் கண்ட மீன்கள்

தோற்றோம் நாங்க ளென

துள்ளி எழுந் தோடினவே !

 

 

உலகத்தில் மட்டுமல்ல

உவமைகளிலும் கூட

ஒட்டாத உயர்னபியை

எப்படித்தான் உவமிப்பது

இறைவா நீ சொல் என்றேன் !

 

அவன் சொன்னான் :

அல்லாஹ்  நூருஸ் சமா வாத்தி

ஃ பில் அர்ழ்

 

News

Read Previous

புனித ரமலான் நோன்பு !

Read Next

சென்னையில் ஹ‌பிப் திவான் ந‌ன்னி வ‌ஃபாத்து